திங்கள், 29 டிசம்பர், 2008

வன்புணர்! கொலை செய்!! அழித்தொழி!!!

இறந்த பெண் போராளிகளின் உடல் மீதான வன்முறையை காணொளியாக கண்டப்பொழுது எழுகிற கோபம்... கட்டுபாடற்றதாக... கனன்று... கடைசியில் இதுவும் ஒரு செய்தியாக மூளைக்குள் பதிந்துவிடுகிற மோசமான வாழ்வியலே எனக்கானதாக இருக்கின்றபடியால்...

அங்கே பெண் போராளியின் இறந்த உடல் மீதான பாலியல் வன்முறையை நடத்தவும்... வெறிக்கொண்ட மிருகங்களாக நடந்துக்கொள்ளவுமான சிங்கள இராணுவத்தின் உளவியல் எத்தகையது?

இத்தேடல் 1950களில் தொடங்கி 1983ல் பெரும் வெடிப்பாக நடந்த இன படுகொலைக்கான பின்னணியில் தொக்கி நிற்கிறது!

சிங்கள பேரினவாத அரசியல் என்பது இன வெறியூட்டிய மனிதர்களின் மீதான அரசியலை முன்னெடுக்கிறது. அது சிங்கள வெறியாக மாறி... தமிழர்களை கொலை செய்! வன்புணர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைகிறது!

சிங்கள பேரினவாத அரசியல் இன்றைக்கு களத்தில் இறந்து போகிற இராணுவத்தினருக்கு பதிலாக இன்னும் வெறியூட்டிய சிங்கள காடையர்களை உற்பத்தி செய்துக்கொண்டே இருக்கும்!

இதன் இன்னொரு முகத்தை இந்திய துணைகண்டத்திலும்... பார்ப்பானிய(இந்துத்துவ) வெறியாக ஊட்டப்பட்டு குஜராத்தில் இசுலாமியர்களின் மீதும், ஒரிசாவில் கிருத்துவர்கள் மீதும் கொலை செய்! வன்புனர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைவதையும்... கண்டுக்கொள்ளலாம்!

இந்த பேரினவாத வெறியை அம்பலப்படுத்தி... மக்களை விழிப்படைய செய்வது ஒரு வழி...
எம்மீது வன்முறையை கைக்கொள்கிற சிங்கள குறியை அறுத்தெறிவோம் என்பது இன்னொரு வழி... (இது சிங்களத்தின் கடைசி குறியை நோக்கிய தேடலாக இருக்கும்!)

திங்கள், 10 நவம்பர், 2008

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!) - 2

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)

ஓரு சமூகம் தனக்கான உரையாடல் மொழியை எப்படி கட்டமைக்கிறது என்பதை விளக்குவதற்க்காக சிங்கப்பூர் சமூகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

அரசின் முக்கிய அதிகார மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதன் வழியாகவே தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்களாகிய சீனர்கள் மாண்டரின் என்கிற சீன மொழியின் எளிமைப்படுத்தப்பட்ட பிரிவை பேசுகிறார்கள். மலாய், தமிழ் மொழிகளும் அதனதன் மக்களால் பேசப்படுகிறது.

ஆங்கிலம் அதிகார மொழியாக இருப்பதால் மக்கள் அப்படியே ஆங்கிலத்தை கரைத்துக்குடித்து ஆங்கிலேயர் போல் பேச முயற்சிக்கவில்லை. தங்களுக்கு ஏற்றார் போல் மொழியை வளர்த்தெடுக்கிறார்கள். "அங்கிள் டூ தே லா" என்பது சாதராண ஓரு கடைக்காரிடம் சிங்கப்பூர் வாசி உரையாடும் மொழி.

can என்கிற ஆங்கில வார்த்தை அதனுடைய மூல பொருளுடன் இங்கே கையாளப்படுவதில்லை. மாற்றாக இங்கே கேள்விச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

இதை ஐரோப்பியர்கள் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றனர் "singlish" என்று. ஓரு குறுகிய காலத்தில் உருவான சமூகம் தனக்கான உரையாடல் மொழியை தானாகவே கட்டமைக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் ன் அடித்தளம் ஆங்கிலமாகவும், இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் மொழியும். மூன்றாம் நிலையில் தமிழும், மாண்டிரினும் இருப்பதை உணர வேண்டியிருக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் தான் சிங்கப்பூர் சமூகத்தின் உரையாடல் மொழியாக பரிணாமம் அடைகிறது. அரசு speak good english என்று நிகழ்வுகள் நடத்தி பார்த்தார்கள். ஓன்றும் வேலைக்காகவில்லை. சமூகத்தின் நகர்வை அதிகார மையத்தால் தடுக்க இயலாது. வேண்டுமானால் தள்ளிப்போடலாம்!

(இதனால என்ன சொல்ல வருகிறாய்! என்று நீங்கள் எதிரொலிப்பது புரிகிறது).

ஆங்கிலம் அடித்தளமாக இருப்பதால் இவர்கள் கற்றுக்கொள்கிற சொற்களின் வேர் லத்தீன், கிரேக்க மொழிகளின் அடித்தளத்தில் இருந்து வந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளாக சென்றால் கற்றுக்கொள்கிற ஓவ்வொரு சொல்லிலும், வழக்கு மொழிகளிலும், பழ மொழிகளிலும் ஐரோப்பியர்களின் வரலாற்று நிகழ்வுகளை, அறிவியலை, அனுபவங்களை மட்டுமே உள்வாங்குவார்கள்.

உதாரணத்திற்க்கு ஜீலை என்கிற மாதத்தின் பெயரை எடுத்துக்கொண்டால் உடனடி விளக்கமாக ஜீலியஸ் சீசர் பற்றிய வரலாறு விரியும்.

இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் இருப்பதால் உள்ளூர் அறிவியலை உள்வாங்குவதற்க்கான வாய்ப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பலாம்...

இங்கே சிந்தனை என்பது ஐரோப்பியர்களிடமிருந்து தான் கடன் வாங்கப்படுகிறது. அதாவது லத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து பரிணாமம் அடைந்த ஆங்கில மொழி அதன் மூல சமூகத்திற்க்கு அதிகமான பரிணாம வளர்ச்சியை கொடுக்கும். ஆனால் ஆங்கிலத்தை அடித்தளமாக கொண்டு தற்போது உருவாகும் சமூகம் இரண்டாம் நிலையில் தான் சிந்திக்க நேரிடும்.

அதாவது மறைமுகமாக ஐரோப்பிய சமூகத்தின் ஆளுமை என்பது சிங்கப்பூர் சமூகத்தின் மீது உறுதிச்செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சமூகத்திற்க்கான அறிவியல் என்பது ஐரோப்பிய சமூகத்திடமிருந்து தான் பெற வேண்டிய சூழலுக்கு நகரும்.

ஏனென்றால் உரையாடல் மொழி என்பது அந்த சமூகத்தின் வரலாறு,அறிவியல், சிந்தனை, அனுபவங்களை தலைமுறைகளுக்கிடையில் கடத்தும் காரணி...

இதுவொரு கூட்டு,பொரியல் சமூகம், தனக்கென்ற சுயமான பரிணாம வளர்ச்சியை இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறது. ஆகையால் இதன் வளர்ச்சியின் அடித்தளம் ஆங்கிலத்தின் வழியாக ஐரோப்பியர்கள் இருப்பதில் நமக்கென்ன வந்தது :(

என்னுடைய கவலையெல்லாம் பல தலைமுறைகள் வரலாற்றையும், அறிவியலை, சிந்தனைகளையும், அனுபவங்களையும் தனக்குள் சேகரித்து வைத்திருக்கிற தமிழ் மொழியும் அதன் சமூகமும்... இரண்டாம் நிலை சமூகமாக நகர்த்தப்படுவதை பற்றியது....

தொடரும்...

வியாழன், 30 அக்டோபர், 2008

மண்ணும், மண்ணின் வளங்களும் யாருக்கு...?

கிராமத்தின் மாலைப்பொழுதில் ஊரின் முக்கியபுள்ளிகள் பஞ்சாயத்து அலுவலகத்தின் மரத்தடியில் கூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே மணியக்காரர் முத்து மீதான குற்றச்சாட்டு என்பதால் பரப்பரப்பு அதிகமாகவே இருக்கிறது. மூன்று தலைமுறைகளாக ஊரில் பெரியமனிதர் என்கிற தோரணையில் இருப்பவர். இப்பொழுதுக்கூட அவரின் அண்ணன் மகன் தான் பஞ்சாயத்து தலைவர்.

என்ன அப்படி அவர் குற்றம் செய்துவிட்டார் என்று இங்கே கூடியிருக்கிறார்கள்? ஊர் பொது பூவரசு மரம் 50 ஆண்டுகள் பழமையானது... நல்ல வைரம் பாய்ந்த மரம் என்று தன் மகள் வீட்டு வேலைக்கு வெட்டி பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய அப்பா காலத்தில் ஊரில் பொது இடத்தில் நட்டது.

பஞ்சாயத்து தலைவர் அண்ணன் மகன் தானே சொல்லிக்கலாம் என்று வெட்டி விட்டார். தன்னுடைய சிற்றப்பா தானே என்று தலைவரும் விட்டுவிட்டார். ஆனால் ஊர்மக்கள் சும்மா விடுவார்களா? கூட்டிவிட்டார்கள் கூட்டத்தை...

பஞ்சாயத்து தலைவரான தான் பஞ்சாயத்து உறுப்பினர்களை கூட்டி பேசுவதாக ராமலிங்கம் சொன்னதற்க்கு, நீ சின்ன பையன், அதோட இது ஊர் பொது சொத்து அதனால் பெரியவர்கள் கூடி பேசுவதாக முடிவு செய்து விட்டரர்கள்.

ராமலிங்கம் தன் சிற்றப்பாவுடன் கூடி ஓரு முடிவுடன் கூட்டத்திற்க்கு வந்திருந்தார்.

கூட்டம் ஆரம்பித்தது ஆளாளுக்கு ஊர் பொது சொத்தை மணியக்காரர் அனுமதியில்லாமல் வெட்டியதை கண்டிக்க ஆரம்பித்தனர்.

சில முக்கிய மணியக்காரரின் நண்பர்கள் சமாதானமாக " மூனு தலைமுறையா ஊருக்கு உழைத்த குடும்பம்... அதனால நாம அடுத்து என்ன செய்வது என்று பேசலாமே!" என்றனர்.

மாரியம்மன் கோயில் குருக்கள் "அய்யாவின் அப்பாதானே அந்த மரத்தை நட்டார்...! அவருக்கு இந்த ஊருல எவ்வளவு மரியாதை இருந்தது. மணியக்காரருக்கு இந்த மரத்தை கூட அனுபவிக்க உரிமை இல்லையா?" என்றார்.

பெரமையா : " யோவ்! குருக்கள் வெள்ளி, செவ்வாய் மணியக்காரர் தட்டுல போடுற பத்து ரூபாய்க்கு விசுவாசமா போசாதீர்... சொத்து ஊருக்கு சொந்தம்!"

பெரியவர் : "பெரமையா! ராமலிங்கம் எலக்சென்ல உன்னை தோற்க்கடித்த கடுப்பில் எதையாவது பேசாத!"
(பெரியவருக்கு தெரியாது, குருக்கள் மணியக்காரரிடம் கோயில் நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டி வீட்டு ஓடு போட கோட்டார். மணியக்காரர் அதுக்கு சரியின்னு தலையாட்டினது தனி விசயம். இப்போ குருக்கள் மனதில் தனக்கு இனி பனைசொத்து இல்லை என்பதாலேயே வலிந்து மணியக்காரருக்கு பேசினார்)

பெரியவர் 2 :" யப்பா ராமலிங்கம் நீதானே பஞ்சாயத்து தலைவர்! என்ன பண்ணலாமுன்னு சொல்லு"

ராமலிங்கம் : "சிற்றப்பா ஓன்னும் சும்மா வெட்டலையே...!"

மக்கள் அப்படியா...! என்று வாயை பிளந்தது..

(முன்பே திட்டமிட்ட படி ராமலிங்கம் லாவகமாக திசைமாற்றினார்....)

ராமலிங்கம் : "அப்பா! முழுசுமா வெட்டின பிறகு ஆசாரியை வைத்து மதிப்பு போட்டு காசு பஞ்சாயத்து போர்டுக்கு கட்டியராதா சொல்லியிருக்கிறார்!"

(ஏன் முன்னாடியே மரத்தை ஏலம் போடலை என்று சிலருக்கு கேள்வியிருந்தாலும், ஏதோ பஞ்சாயத்துக்கு காசு வந்தா சரி என்று கலைந்தார்கள். நாளைக்கோ அப்புறமோ ஆசாரியை வைத்து ஓன்றுக்கு பாதி மதிப்பிட்டு பஞ்சாயத்து போர்டுக்கு மணியக்காரர் காசு கட்டி விடுவார்கள். மக்களும் அவரு போல உண்டா என்று போயி விடுவார்கள்.)

கூட்டம் கலைந்தாலும் கணேசன் தன் நண்பர்களுடன் மரத்தடியில் உட்கார்ந்து இன்னும் பேசிக்கிட்டிருந்தரர். ரொம்ப ஆவேசமாக....

கணேசன் : 30 வருசத்துக்கு முன்னாடி இவன் அப்பன் ஊர் சொத்தை கொள்ளையடித்த போது யாரும் கேள்விக்கேட்கக்கூட திரணியற்று இருந்தார்கள். இன்றைக்கு ஏதாவது கொஞ்சமாவது கேள்வி கேட்கிறார்கள். தங்களுக்கும் அதில் உரிமையிருக்கு என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

நண்பர் 1 : அதான் முடிந்து விட்டதப்பா இன்னும் ஏன் கோபமாயிருக்கே...?

கணேசன் : நம்ம ஊரு சொத்து பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தம் என்று கேள்விக்கேட்க தெரிந்த மக்களுக்கு... நம் மண்ணில் கிடைக்கும் எல்லா வளமும் அரசுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் சொந்தம் என்பதை எப்போது உணர்வார்கள் என்பது தான் என்னுடைய கோபம்.

நண்பர் 2 : யப்பா கணேசா! நீ என்ன சொல்ல வருகிற தெளிவா சொல்லு!

கணேசன் : "மண்ணில் இருந்து எடுக்கிற எஃகு(இரும்பு தாது), பெட்ரோலியம், மைக்கா, டைட்டானியம் போன்ற இயற்கை வளமும், அதன் மூலம் கிடைக்கிற வருவாயும் நமக்கு தானே சொந்தம் ... ?"

நண்பர் 1 : அட! ஆமாமப்பா....

கணேசன் : எஃகு தாது வை டாடா, பிர்லா காரணும், மைக்கா வை காரைக்குடி செட்டியாரும், கோதாவரி பெட்ரோலியத்தை அம்பானியும், இப்போ டைட்டானியத்தை டாடா வுக்கும் கொடுத்து அவர்களை பணக்காரர்களாக ஆக்கி விட்டுட்டு நீயும், நானும் கழனியில கஞ்சிக்கு மாரடித்துக்கிட்டிருக்கோமே...!

"உனக்கும், எனக்கும், இந்த மக்களுக்கும் சேர வேண்டிய செல்வத்தை தனிமனிதர்கள் கொள்ளையடிப்பதை தட்டிக்கேட்க வேண்டாமா...!"

நண்பர் 2 : " அட போப்பா... இந்த கூட்டம் போடுறதுக்கே இங்கன அவ்வளவு பிரச்சினை... யாரு இதெல்லாம் கேட்கிறது...?"

கணேசன் : " 30 வருசத்துக்கு முன்னாடி இதே கிராம மக்கள் மணியக்காரரை கேள்விக்கேட்க வில்லை... இப்பொழுது கேள்வி கேட்கிற நிலைக்கு மாறியிருக்கிறார்கள்... மக்கள் சிந்திக்க தொடங்குவார்கள்... இந்த அதிகார மையங்களை தகர்த்து.. எறிவார்கள்..!

" இந்த மண்ணின் வளம், செல்வம் எல்லாம் மக்களுக்கு சொந்தமென்பதை உணர்ந்து தங்களின் உரிமைக்காக போராடுவார்கள்!"

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

புவி வெப்பமடைகிறது - எல்லோரும் ஒரு நாள் பட்டினி கிடப்போம்...!

வெப்பம் வெளிப்படுகிற எல்லா வழிவகைகளையும் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள்... மனிதர்கள் உணவு உட்க்கொள்வதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் மனித உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் இந்தியா, சீனா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் உலகம் சூடாவதை தடுக்க எல்லோரும் ஒரு நாள் பட்டினி இருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்!

இதன் தொடர்பில் இந்தியாவில் உள்ள NGO - கள் ஒன்றிணைந்து வருகிற மாதம் முதல் தேதி பட்டினி கிடப்பது பற்றிய பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்...


மேலதிக தகவல்கள் விரைவில்....

புதன், 30 ஜூலை, 2008

நமது சமூகம் , வலைப்பதிவு சமூகம்...!

நமது சமூகத்தையும், வலைப்பதிவுலக சமூகத்தையும் பொருத்திப்பார்க்கும் எனது முயற்சி... இதில் அவரவர் பாத்திரங்களை அவரவர் கற்பனைக்கே விட்டுச்செல்கிறேன்!

முச்சந்தியில் அடித்த 50மிலி சாராயத்தின் போதையில் எவனவன் குடும்பத்தை சந்திக்கிழுக்க முடியும் என வாய்நிறைய வசவு வார்த்தைகளாக சவுண்ட் விடும்... ஏதோவொரு போதை தலைக்கேறிய முச்சந்தி முனியப்பன்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆட்டைகடிச்சி, மாட்டைகடிச்சி கடைசியில் என் குடும்பத்தையே பேசுறான்டா என தடியெடுத்து தொடை தட்டி முனியப்பன்களை மென்னி முறிக்க புறப்படும் கிராமத்து சண்டியர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

அதிகாரத்துக்கும், ஆண்டைகளுக்கும் வாழ்த்து பா பாடுவது, கொல்லைப்புற கதவு திறப்பது என மாமா வேலைப்பார்க்கும் அதே கிராமத்து சகுனி மாமாக்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எல்லாம் அவன் செயல், விதி என்றெல்லாம் பிதற்றி தான், தனது காரியங்கள் என கண்ணாய் வாழும் முருகனடிமைகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாய் அவ்வப்போது கூடி சமூகத்தை புரட்டிப்போட புறப்படும் சமூக புரட்சியாளர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

முட்டாள்கள், தேடலற்றவர்கள் என சமூகத்தை காறி உமிழ்ந்து உலக தத்துவங்களை கரைத்துக்குடித்து வாழ்வின் தத்துவங்களை தேடிக்கொண்டிருக்கும் தத்துவ பித்தர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது அறிவின் வீச்சின் புலம்பல்களை சாராயக்கடையில் ஆரம்பித்து... சந்து மூலையில் உருண்டுக்கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

சிற்றின்பமோ, பேரின்பமோ காமமத்தை கொண்டாடுவோம் என கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எதையாவது செய்ய வேண்டும் என சிறு, சிறு கலகங்கள் செய்யவோர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது வாழ்வு பாதுகாப்பாக இருக்கிறது என திருப்தியுற்றால் ஊருக்கு கருத்து சொல்லும் கந்தசாமிகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன... இவனிடம் அதிகாரமிருந்தால் எனக்கு பயன்.... என சிலருக்கு அதிகார பீடமேற்ற நினைக்கும் சுயநல நாய்பிழைப்புகாரர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

குஜராத்தில் இசுலாமியரின் குடிசைகளும், குடும்பங்களும் எரிக்கப்பட்டும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப்போது கூட மோடிக்கு வாழ்த்துபா பாடுகிற மனித மிருங்கள்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் சிறு ஊறு எனும்பொழுது அலறிதுடிக்கும் அவலம் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலைச்செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... அதிகாரங்களுக்கு கொல்லைபுற கதவு திறந்து மாமா வேலைப்பார்ப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

இன்னும் சொல்லாமல் விடுப்பட்ட பல... அங்கேயும், இங்கேயும் உண்டு!

சமூகமும், வலைப்பதிவும் ஒன்று மற்றொன்றின் பிம்பம்!
Related Posts with Thumbnails