செவ்வாய், 10 ஜூலை, 2007

நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

1999 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு வேலைத்தேடி வந்திருந்தேன். கணிணி பயிற்றுவிப்பாளர் வேலைக்கு போன இடத்தில் எல்லாம் communication skill சரியில்லை என்று விரட்டியடித்தார்கள். ஆங்கிலத்தில் சரளமாக பேசினால்தான் தொடர்புக்கொள்ள முடியுமா? நான் தமிழிலில் விடாம பேசுவேன் என்று சொல்ல நினைத்தேன்! என்ன பண்றது வேலை வேணுமே! ஒரு வழியா அலைந்து திரிந்து அடையாறுல்ல ஒரு நிறுவனத்தில் நம்ம 'சி' பாயிண்டர் திறமையெல்லாம் விளக்கி வேலையை வாங்கியாச்சு.
தினந்தோறும் 147 பேருந்துதில் தான் முகப்பேர்-லிருந்து அடையாறு போகணும், வரணும் அப்படி போய் வந்துக்கிட்டு இருந்தபோது, ஒருநாள் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு கொஞ்சம் முன்னாடி அந்த கண்ணம்மாப்பேட்டை சந்து தொடங்கிற இடத்துக்கிட்ட பேருந்தை நிறுத்திட்டாங்க... நானோ ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

என்னதான் நடக்கிறது என்று எட்டிப்பார்த்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம், ஓரே இரைச்சல், சற்று உற்றுப்பார்த்ததில் அப்பொழுது தான் ஒரு மனிதனை வெட்டியிருக்கிறார்கள. காலில் ஒரு வெட்டு, கழுத்தில் ஒரு வெட்டு நரம்புகள் அறுந்து வெள்ளையாய், இரத்த நாளங்களிலிருந்து பச்சை இரத்தம் வடிந்துக்கொண்டிருக்கிறது.

ஓரு பெண் தன் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அழுது புரண்டுக்கொண்டிருக்கிறாள். அவளை சிலர் பிடித்து இழுத்துக்கொண்டிருக்கின்றனர்.
நான் சட்டென அந்த மனிதனின் கண்களை பார்க்கிறேன். யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா என்கிற கடைசிநேர கெஞ்சலா! இல்லை முடிந்தது இனி எதுவுமில்லை என்கிற வெறுமையா! இல்லை!இல்லை!! உயிர் போனதால் உறைந்து போயிருக்கிறதா!
சிறிது நேரத்தில் போக்குவரத்து சரியாகி அறைக்கு வந்தாகிவிட்டது. அடுத்தநாள் செய்திதாளில் கண்ணம்மாப்பேட்டையில் கேபிள் ஆப்ரேட்டர் மோகன் வெட்டி படுகொலை என்கிற வழக்கமான சிறிய கட்டத்தில் செய்தியும் வந்து விட்டது.
ஆனால் அந்த கண்கள் என்னுள்ளே எழுப்பிய கேள்வி இங்கே உயிர் வாழ்வதற்க்கே உத்திரவாதமில்லையா!
நான் அடிக்கடி நினைத்துக்கொள்வது...

நம் சட்டங்கள் பேச வேண்டுமானால்
ஷரிகாஷாக்கள் சாக வேண்டும்
அதற்கு ஊடகங்கள் ஊக்க மருந்து கொடுக்க வேண்டும்

சட்டம் செயல்பட வேண்டுமானால்
விலை அதிகம் கொடுக்க வேண்டும்
இல்லையென்றால் ஊமை சாட்சியாய் சட்டங்கள்!

இங்கே நல்ல தலைவன் யாரென்றால்
சில சீக்கிய குழந்தைகளையும், குடும்பங்களையும்
தீயிலிட்டு எரித்திருக்க வேண்டு்ம்
அப்போது தான் பிரதமர் பதவி உடனே கிடைக்கும்!

இங்கே ரத யாத்திரை நடத்தி
ரத்த வெள்ளத்தில் நடந்து வர வேண்டும்
அப்பொழுது தான் மக்கள் உங்களை மலையிட்டு 'ஜி' என்பார்கள்!

கொஞ்சமாவது கொலைகள் செய்தால் தான்
அரியணைகள் கிடைக்கும்!

மக்களே! கொலைக்காரர்களுக்கு அரியணையை கொடுத்து விட்டு
நாளை நாம் கொலை செய்யபடுவோம் என்றே வாழ்கின்றீர்களே!

(குறிப்பு : ஷரிகாஷா இளைஞர் காங்கிரஸாரின் இளமை ஆட்டத்துக்கு பலியான ஓரு மாணவி. இந்தக்கொலைக்கு பிறகு தான் ஈவ்டீசிங் சட்டம் பேச ஆரம்பித்தது.)

எனது நண்பர்களின் முயற்சியில்....

திங்கள், 9 ஜூலை, 2007

மீனா! பைத்தியகாரியா.....!

ஏதோ! நகர வாழ்க்கையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், எனக்கு எப்போதும் கிராமத்துக்கு போறது நிரம்ப பிடித்தமான நிகழ்வு. அப்படி ஒரு நண்பரின் கிராமத்துக்கு சென்றேன். நண்பரும் என்னை பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் அவருடன் அழைத்து சென்றார். வழி நெடுக வயல்கள், தென்னெஞ்சோலைகள் மனத்திற்க்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஊருக்குள் நுழைந்து விட்டோம்... ஒரு பார்க்க அழகான பதினைந்து அல்லது ஒரிரு வயது கூட குறைய இருக்கலாம் அப்படியான அழுக்கான உடை அணிந்த பெண்;வீதியில் போகிற, வருகிற எல்லா ஆண்களையும் தன்னோட படுக்க வரும்படி அழைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அப்பெண் என் நண்பரின் வண்டியை கண்டதும் விலகி விட்டாள்.

சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒரு பெண் (அவளுடைய தாய் என்று பின்னர் அறிந்து கொண்டேன்) வந்து அடித்து இழுத்து சென்றுக்கொண்டிருந்தார். மனதை ஏதோ உறுத்த நண்பரிடம் யார் அந்த பெண்? என்று வினாவினேன். அவர் விடு பிறகு பேசலாம் என்றார். நான் விடாபிடியாக இருந்ததால் அவர் சொல்ல ஆரம்பித்தார்...

"மீனா! கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த ஒரு பருவப்பெண், பார்ப்போரை மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் வசீகரம் உடல் வனப்பில், ஆனால் பாவம் ஒரு தோப்புக்குடியின் மகளாக பிறந்திருந்தாள்".
(தோப்புக்குடி- பெரும்பாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னந்தோப்புகளில் வேலைகாரர் குடும்பத்துடன் குடில் அமைத்து அந்த தோப்பின் முதலாளிக்கு எல்லா வேலையும் குடும்பமே செய்யும்)

அவள்! அந்தகிராமத்தின் அதிகார வர்க்கங்களை நன்றாக அறிந்திருந்தாள், அதனாலயே மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துக்கொள்வாள். ஆனால் வாலிப கழுகுகள் வட்டமிடுவதை நிறுத்தவில்லை.

பத்தாம்வகுப்பு தேர்வு விடுமுறை அவளுக்கு மிகப்பெரிய ஆபத்தை வரவழைத்தது. அவ்வூர் பூசாரி மகனின் காதல் வலையில் வீழ்த்தப்பட்டாள். காதல் வேளாங்கன்னி விடுதி வரை சென்றது.

அங்கேதான் அந்தபாதகனின் சதி ஆரம்பமாகியது தான் மட்டும் காதலன் என்றால் ஊரர் மிரட்டி தனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்றெண்ணி, தனக்கு பழக்கமான ஆதிக்க சாதியின் ஒரு நபருக்கு போட்டுக்கொடுக்கிறான். அந்த நபர் அவளை மிரட்டி அனுபவித்திருக்கிறார்.

இப்படி ஆரம்பித்து, ஒவ்வொருத்தராக அப்பெண்ணை மிரட்டி அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நண்பருடைய கூற்றுப்படி ஒருக்காலகட்டத்தில் 15லிருந்து 50 வயது இருக்கும் அந்த கிராமத்து ஆண்களில் முக்கால்வாசி பேர் அவளை 3 மாதங்களில் சிதைத்திருக்கின்றனர்.

வலி, வேதனை, அவமானம் அத்தனையும் அப்பெண்ணை பைத்தியமாக்கியதா! அல்லது இக்கழுகுகளின் கைகளிலிருந்து விடுபட பைத்தியமாக நடிக்கிறாளா!
இதில் கொடுமை அப்பெண் மனநிலை சரியில்லை என்கிற நிலையிலும் சிலபேர் சோப் வாங்கிக்கொடுத்து குளிக்க வைத்து அனுபவிக்கின்றனர் என்கிற உண்மை.

மீண்டும் ஒருமுறை அந்த நண்பரை சந்தித்தபோது அறிந்துக்கொண்டது அக்குடும்பமே மொத்தமாக தற்கொலை செய்துக்கொண்ட செய்தி.

வறுமையும், ஏழ்மையும் எங்களோட இருந்தாலும்...
கால் வயிற்று கஞ்சிக்கு... கடின உழைப்பை தந்து தானய்யா வாழுறோம்!
எங்கள மானத்தோட வாழக்கூட விடலைன்னா! எங்கய்யா போவோம்!
அந்த தாயும், தந்தையும் கடைசியாக இப்படி நினைத்திருப்பார்களோ!


கிராமங்களில் ஆரம்பித்து, காவல் நிலையத்திலிருந்து, இராணுவம் வரை காம வெறி பிடித்த மிருங்கள் வாழும் நாடாக!

ஓ! இவர்கள் இப்படி இருப்பதால் தான் யாரை அம்மா! என்று அழைப்பது என்றுக்கூட அறியாமல் போனார்களோ!

ஞாயிறு, 8 ஜூலை, 2007

யாரந்த அறிவாளி கொழுந்து....!

உலகத்தின் தட்பவெப்பநிலை வேகமாக உயருகிறது. சமீபகாலமாக சுற்றுசூழல் ஆர்வலர்களால் மிக அதிகமாக அலசப்படுகிற விவகாரம். நம்ம வலைப்பதிவில் கண்மணியக்கா எழுதியிருந்தாங்க அப்புறம் சர்வேஷன் 30 வருடம்தானே என்று வருத்தப்பட்டார்.

எனக்கு தட்பவெப்பநிலை என்பதன் அடிப்படையிலேயே பிரச்சினை. அதுவும் ஒரு முறை ஊட்டி போனேன் அதிலிருந்து ஒரு கேள்வி மண்டைய குடைந்துக்கொண்டேயிருக்கு. நமக்கு தெரிந்த, அறிந்த மக்களிடம் எல்லாம் கேட்டாச்சு சரியான விடை கிடைக்கவில்லை...

ஆகையால் எனக்கு அடிப்படையில் இருக்கிற சந்தேகத்தை இங்கே வலைப்பதிவு அறிஞர் பெருமக்களுக்கு கேள்வியாக வைக்கிறேன். யாரேனும் எனக்கு விளங்கும்படி சொன்னால் கொஞ்சம் என்னோட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வெப்பத்தை உருவாக்கும் ஒர் இடத்தை வெப்ப மூலம் (Heat Source) என்பார்கள். வெப்பத்தை உணரும் பொருளை (Heat Observer) நாம் இங்கே பொருள் என்று வைத்துக்கொள்வோம்.









இப்ப மேலே உள்ள படத்தில் பார்த்தீர்களானால் Object B ஆனது அதிக வெப்பத்தை பெறும் ஏனென்றால் அது Object A ஐ விட வெப்ப மூலத்திற்கு அருகில். (distance y is less than x)

பொதுவான விதி வெப்ப மூலத்திலிருந்து தூரம் குறைய, குறைய பொருளானது அதிக வெப்பத்தை பெறும்.










இப்போ நம்மோட கேள்விக்கு வருவோம். நீங்கள் இப்போது கடல் மட்டத்தில் இருக்கிறீர்கள் அப்போது சூரியனிடமிருந்து 'q' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பநிலை. மலைகள் மேலே செல்லும் போது சூரியனிடமிருந்து 'r' தொலைவிலிருந்தால் நீங்கள் உணரும் வெப்பம்நிலை குறைவதேன்.

உண்மையில் 'r' ஆனது 'q' ஐ விட சூரியனிடமிருந்து தொலைவு குறைவு. பொது விதிப்படி வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் குறைகிறது.
(r is less than q)

ஏற்கனவே நண்பர்களால் அறிந்த காரணங்கள் என்னால் ஏற்றக்கொள்ள முடியாதவை

1. கடல் மட்டத்திலிருந்து உயரம் செல்ல செல்ல வெப்பம் குறையும்

என்னுடைய மறுப்பு : அப்படியானால் திருச்சி மலைக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து உயரம் தான் ஆனால் வெப்பநிலை குறைவாக இல்லை. இது போல உலகத்தில் பல உயரமான இடங்கள் அதிக வெப்பநிலையோடு இருக்கின்றன.

2. பூமியின் சாய்வு கோணம்

என்னுடைய மறுப்பு : இது துருவங்களுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம் மற்றபடி ஒரே அட்சரேகையில் (Latitude) இருக்கும் இடத்துக்கு பொருந்தாது

3. வளிமண்டல அழுத்தம்

என்னுடைய மறுப்பு : வளிமண்டல அழுத்தம் தட்பவெப்பநிலை பாதிக்கும் ஒரு பக்க காரணி அதுவே மூல காரணி அல்ல.


சரி! இதற்குமேல் நீங்கள் ஆட்டத்தில் பங்கெடுத்து உங்கள் விடைகளை பகிர்ந்துக்கொள்ளவும்.

ஆட்டத்திற்க்கான அழைப்பிதழ்

தேசியவாத இந்தியர்களே
தேசியவாதமல்லாத இந்தியர்களே
திராவிடர்களே
ஆரியர்களே
தமிழர்களே
திராவிடத்தமிழர்களே
உள்நாடு,வெளிநாடு வாழ் தமிழர்களே
தோழர்களே
தோழருக்கு தோழர்களே
சங்கத்து சிங்கங்களே (ஆண்பால்)
சங்கத்து சிங்கிகளே (பெண்பால்)
கும்மியடிப்போரே
கும்மியை குத்தவைத்து வேடிக்கைப்பார்ப்போரே
வலைப்பதிவோரே
வலைப்பதியாதோரே

இருங்க! இருங்க!! அங்கன வாசல்ல யாரோ மாதிரி தெரியுது. அட நம்ம உறவுகாரவுகதான். அவுங்களும் தமிழர்கள்தான் ஆன எப்போதும் கொஞ்சம் மாப்பிள்ளை முறுக்கோடதான் இருப்பாக...

இசுலாமிய தமிழர்களே
ஈழத்தமிழர்களே

மற்றும் அழைப்பில் விடுபட்டோரே

அனைவரும் பங்கெடுத்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டுச்செல்ல வேண்டுகிறேன்!

புதன், 4 ஜூலை, 2007

அமெரிக்க வீரர்களுக்கு விளக்கு பிடிக்கும் ஆட்சியாளர்கள்...

கப்பல் வருது! கப்பல் வருது!! கப்பல் வருது!!!
நம் மானம் கப்பல் ஏறுது! கப்பல் ஏறுது!!!
மக்கள் காவலர்களா! - இல்லை
அமெரிக்கர்களின் கட்டில் விளையாட்டு காவலர்களா!!
தன்மானம் காக்கும் தமிழின தலைவர்களா!
டாலருக்கு தலையணை விசிறிகளா!!
மாடல் அழகிகள்... அமெரிக்கர்களின் மஞ்சத்து விளையாட்டுக்கு!
துணை நடிகைகள்... அமெரிக்கர்களின் உல்லாசத்துக்கு!
தமிழகத்தின் தலைநகரமா! - இல்லை
டாலர் ஏவலாளிகளின் (மாமாக்களின்) கூடாரமா!!

மக்களே! டாலருக்கு விலைபோன இந்த கயவர்களால் - நாளை
கல்லூரிக்கு போன சகோதிரியை காணவில்லை!
வேலைக்கு போன மனைவியை காணவில்லை!
கடைத்தெருவுக்கு போன தாயை காணவில்லை! -என்று
கதறி கண்ணீர்விட்டு பயனில்லை... விழித்தெழுங்கள்...
தன்மானம் காக்க!

அன்பின் சகோதிரிகளே!
விளக்குமாறு(துடைப்பம்) தயாராக வையுங்கள்...
உங்கள் உடன்பிறப்புகள் விளக்கு பிடிக்க போயிருக்கிறார்கள்...
நாளை வருவார்கள் ஓட்டு பிச்சை எடுக்க -அப்போது தேவைப்படும்...
நாட்டில் குப்பைகள் அதிகரித்து விட்டது... தூய்மை பணிக்கு தேவைப்படும்!
Related Posts with Thumbnails