ஞாயிறு, 18 நவம்பர், 2007

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

நண்பர் ஜமாலன் உடல் அரசியல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது வாசிக்க ஆரம்பித்தவுடன் அப்பப்ப தலையில் ஓன்றொன்றாக விழுந்துக்கொண்டிருந்த முடி, மண்டை சூட்டில் கொத்துக்கொத்தாக விழ ஆரம்பித்தது :)) ( ஏன் இப்படி மொட்டை தலை மாதிரி முடிவெட்டி இருக்கிறீர்கள் என்று கேட்டீர்களே கோவி, ரகசியம் புரிகிறதா நீளமா இருந்தா முடி கனத்தில் மிஞ்சமிருக்கும் முடியும் கொட்டிவிடும்), சரி நமக்கு பிடித்த, ரசித்த வரிகளை தொகுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினால், அவர்கள் எனக்கு ஏதோ ஆகி விட்டதாக துக்கம் விசாரிக்கிறார்கள். அப்படி போயிட்டிருக்கு கதை... சரி! ஜமாலன் அவர்களாவது இந்த தோலை பற்றிய அரசியலை எழுதுவார் என்று பார்த்தால், ஓன்றும் நடக்கிற மாதிரி தெரியலை...

சரி! நமக்கு தெரிந்த அறிவியலை வைத்துக்கொண்டு, இது நிறமி செல் அப்படின்னு ஆரம்பிக்கலாம் என்றால்... வவ்வாலை நினைத்தால் பயமாகயிருக்கிறது, எங்கேயாவது தேடிப்பிடித்து படித்துவிட்டு, இங்கன வந்து தலைகீழாக தொங்குவார்.

அட நம்ம பைத்தியக்காரனாவது சிலருக்கு வைத்தியம் பார்ப்பார் என்றால், அவர் முகவரியை தொலைத்துவிட்டார் போலிருக்கு தமிழ்மணம் பக்கமே காணோம்.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான், நமக்கு தெரிந்த தோல் அரசியலை நிகழ்வுகளாக சொல்லலாம் என்று நினைத்தேன்.

ராஜீவ்காந்தி ஓரு முறை அறந்தாங்கி வழியாக காரில் பயணம் செய்தபொழுது, சாலையோரத்தில் நின்ற ஓரு பெண்மணி சொல்லியது "என் ஓட்டு இந்தபுள்ளைக்கு தான், கையப்பாரேன் ரோசாப்பூ கலருல தகதகன்னு இருக்கு!" , இப்படியாக அன்றையிலிருந்து இன்றைய நாளது வரை முகத்தோற்றமும், உடல் தோலின் நிறமும் அரசியலில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

மஞ்சக்கலரு எம்.ஜி.ஆரும், சிவப்பு கலரு ஜெயலலிதாவும் இந்த தோலை வைத்துக்கொண்டு தமிழக அடிமட்ட மக்களை ஏமாற்றிய வரலாற்றை மீண்டும், மீண்டும் நாம் வாசித்துக்கொண்டு தான் காலில் விழுந்துக்கிடக்கிறோம்.

சிவப்பு தோலின் அரசியலை முருகன்-வள்ளி, தெய்வானை வரலாற்றின் ஊடாக மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். சிவப்புகலரு தெய்வானை பொண்டாட்டி ஆகி, உண்மையான பொண்டாட்டி வள்ளி சின்ன வூடு ஆக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல த்ராவிட மக்களின் சமூக, அரசியல் சிதைக்கப்பட்ட வரலாறு முழுக்க இந்த சிவப்பு கலரு கலந்தேக்கிடக்கிறது.

மிக ஆழமாக அரசியல் பேசுகிற நண்பர் ஓருவர், தான் சந்தித்த வெள்ளைக்காரனை பற்றிச்சொல்லும் போது, வெள்ளைக்காரன் ஏன் பொய் சொல்ல போறான் அப்படிங்கிறார்?வெள்ளை நிறம் கொண்ட யாரும் பொய் பேச மாட்டார்கள் என்கிற பிம்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

நம்ம பய புள்ளைக பொண்ணு பார்க்க போனாக்கூட அவனுக்கு இப்படிதான் சொல்கிறார்கள் "பொண்ணு சுண்டினா இரத்தம் வரும் அப்படி ஓரு கலரு", நம்ம பையன் சுண்டி,சுண்டி ப்ளட்பேங்க் வைக்க போறான என்ன? தெரியலையேப்பா...!

இந்த அரசியலின் நீட்சி இன்றைக்கு பெண்களுக்கு அழகு என்பது வெள்ளை/மஞ்சள்/சிவப்பு நிறத்தோலே என்கிற பிம்பம் கட்டுமானமாக சமூகத்தில் நிலவுகிறது.

ட்ாரிக் முல்லா ஓரு மலேசியன், சில கோடிகள் அளவுக்கு மனித வள (manpower) வணிகத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பங்களா தேஷ் போன்ற இடங்களில் ஏமாற்றியவன். இவனை மலேசியாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, தான் ஏமாந்துப்போன பணத்தை திரும்ப வாங்க நண்பர் ஓருவர் முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அப்போது இவனுக்கு பாதுகாப்பிற்க்காக பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார் நண்பர். அங்கே ஓர் அறையில் தங்க வைத்திருந்தோம். அதுவொரு விடுதி. அதன் கீழே ஓரு பெட்டிக்டை இருந்தது.

ஓரளவுக்கு பிரச்சினை தீர்ந்தவுடன் சென்னைக்கு கிளம்பிய போது அந்த கடைக்காரர் வந்து நின்றார். கிட்டதட்ட 900 ரூபாய்க்கு மேலாக கடனாக இவனுக்கு சிகரெட் கொடுத்துள்ளார். நான் கேட்டேன் ஏன்னய்யா 25 வருடங்களாக இதே ஊரில் இருக்கிற நான் 1 ரூபாய் அப்புறம் தருகிறேன் என்றால் முகத்தை காட்டுகிற நீ! எப்படிய்யா! இவனுக்கு இவ்வளவு ரூபாய்க்கு சிகரெட் கொடுத்த என்றால், வெளியூரு வெள்ளைக்காரர் ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கை என்றார்!

நான் இப்படித்தான் சொல்லிவிட்டு வந்தேன்! அப்படியாங்க! அவன் ஏற்கனவே பல கோடி பல பேருக்கு கொடுக்கணும், எல்லா பயபுள்ளைகளும் வெறியோடயிருக்காங்கய்க! நீயும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துக்க!

தோலின் நிறத்தால் நடக்கிற சமூக, அரசியலை பெரிய தலைகள் யாராவது எழுதுவார்கள், நமக்கு தெரிந்ததை நான் மொக்கை போட்டிருக்கேன். நான் ரெடி அடுத்த படத்துல இன்னும் கொஞ்சம் சிவப்பான கதாநாயகியின் மீதான தேடலை தொடர...!

செவ்வாய், 13 நவம்பர், 2007

பேசுவதும், எழுதுவதும் தொழிலா?

பரபரப்பு தலைப்புகள் வைத்து... மயிர்புடி சண்டை நடத்திக்கொண்டிருந்த பதிவர்களை கண்டு கடுப்பாகிய தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பகுதியை தூக்கி கடைசில் போட்டார்கள். முகப்பிலேயே பரணை காட்டினார்கள்... அப்படி பரணில் கடந்த வாரம் நான் வாசித்த ஓர் இடுகை உஷா எழுதிய 'எழுத்துவியாபாரிகள்'...

அதில் அவர் எழுதிய கருத்தாக்கம் என்பது அவருடைய நிலைப்பாடாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் பதிவுலகில் எழுதி கூட்டம் சேர்த்து அதன்மூலம் புகழடைந்து வெகுமக்கள் அச்சு ஊடகத்திற்க்கு எழுதச்செல்ல வேண்டும் என்பது அவரின் இலக்காக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தின் ஊடாக! , அப்பதானே நாலுகாசு பார்க்கலாம் :( , பதிவில் எழுதிக்கொண்டிருக்கிற பலருக்கு இதே எண்ணவோட்டம் இருக்கலாம். பரபரப்பாக எழுதுவது, தனக்கென்று ஏதாவது ஓரு இயத்தில் அடையாளம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூட்டம் சேர்ப்பது, உணர்ச்சியில் கொப்பளித்து பொங்கி வெடிப்பது!, குழுவாக சேர்ந்து தனக்கு விளம்பரம் தேடுவது, இதன் எல்லாவற்றின் இலக்கு ஊடகத்துறை, அங்கே நகர வேண்டும்... அதன்மூலம் காசு பார்க்க வேண்டும், தன்னை எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை இலக்கு உள்ளுக்குள் இருக்கிறது. இதனால் நமக்கு எந்த வருத்தமோ (அ) அவர்களின் மீது தனிப்பட்ட வெறுப்போ கிடையாது.

ஆனால் பேசுவதும், எழுதுவதும் தொழிலா? என்கிற கேள்விக்கு என்னுடைய பார்வையிலிருந்து சில விளக்கங்கள் தர வேண்டும் என்று இங்கே முயற்சிக்கிறேன். அதில் உங்களுக்கு வேறு பார்வைகள் இருக்கலாம்! தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வனங்களில் விலங்குகளாய் திரிந்துக்கொண்டிருந்த மனிதன், முதலில் விலங்குகள் மாதிரியே ஓலிகள் மற்றும் ஓசைகள் மட்டுமே எழுப்பத்தெரிந்திருந்தான். அவனுடைய தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அடைந்த இடமே ஓலிகளுக்கும், ஓசைகளுக்கும் வரி வடிவம் கண்டான் அவற்றை எழுத்துக்கள் என்கிறோம்.

என் தந்தை ஓர் செய்தி சொன்னார் மனித உயிரின் முதல் ஓலி 'அ' என்பதும், உயிர் வெளியேற துடிக்கும் மெய்யின் கடைசி ஓலி 'ம்' என்பதும் ஆகும் என்பார். அதனாலேயே 'அம்' என்கிற சொல் மனித உயிருக்கு வடிவம் தருகிற தாயை குறிக்கிறது என்பார். (சோதித்து பாருங்கள் மிகுந்த நோயுற்று உயிர் துடிக்கும் உடலை தொடுங்கள், அவர் மிகுந்த முனகலாக 'ம்' என்று என்று ஓலி எழுப்புவார்). அவ்வளவு நுட்பமானது ஓலிகள்.

எழுத்துக்கள், வார்த்தைகள் எல்லாம் உருவாகிக்கொண்டிருக்கிற காலப்பயணத்தில், மனிதன் பேச முயற்சித்துக்கொண்டிருந்தான். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். பேசினான், பேசுகிற சொற்களுக்கு பொருள் கண்டான். பரிணாமம் அடைந்துக்கொண்டேயிருந்தான்.

சமகாலத்தில் எல்லா மனிதர்களுமே பேசினார்கள், எல்லோருக்குமே பேச தெரிந்திருந்தது. ஆனால் எங்கேயோ ஓரிடத்தில் தான், நான் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்கிற நிலைக்கு மனிதர்களை கொண்டு போனார்கள். அது எப்படி நடந்தது?

அது தான் மனிதன் சமூகமாகவும், குழுவாகவும் வாழமுயற்ச்சித்தப் போது ஏற்ப்பட்ட நிலை. வலுவுள்ள மனிதன் மற்றவர்களை ஆளுமை செய்ய முயற்சித்தான். அப்போது அவனுக்கு தெரிந்தது எல்லாம் உடல் வலுவால் சண்டையிட்டு மற்றவர்களை வெற்றிக்கொள்வது. சமூக வளர்ச்சி அதிகரித்து மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது எல்லோரையும் சண்டைப்போட்டு வெற்றிக்கொண்டு தன்னை தலைவனாக நிலைநிறுத்திக்கொள்வது அவனுக்கு கடினமாக தெரிந்தது.

அதனாலேயே அவன் மனித இனத்தின் பரிணாமம் பேசுவது அதையே பயன்படுத்தினான். அறிவிப்பாளர்களை நியமித்தான் "இவர் தான் உங்கள் தலைவர், கடவுளின் வடிவம்!" இதையே தொடர்ந்து பேசு என்று பணித்தான். தொடர்ந்து இதையே மனிதச்சமூகத்தில் பேசினார்கள். இயல்பாக சிந்திப்பதை தடை செய்து, எதிர்ப்பை மழுங்கடிப்பது!. இதில் பெரிய அளவில் வெற்றிக்கிட்டியது. இப்பொழுது தலைவனானவன் மிகக்குறைந்த எதிர்ப்பை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. (இதையே உளவியலில் தொடர்ந்து பேசுவதன் மூலம் ஓர் கருத்தை சிந்தனையில் ஏற்றுவது என்பார்கள்). கிராம வழக்கில் "ஏலேய்! அவன் விவரம்! பேசி, பேசியே ஆள கவுத்துடுவான் பார்த்துக்க! " என்பார்கள்.

நாளடைவில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்க்கு பேச்சு என்பது மிக முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அப்படி அதிகாரத்திற்க்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொன்னும்,பொருளும் வழங்கப்பட்டது. அதுவே பேசுவது என்பதை தொழிலாக மாற்றியது.

பேசுவது என்கிற ஆயுதம் அதிகாரத்தை மறுப்பவர்களுக்கு பயன்பட்டது. அதனாலயே பல்வேறு சமூக அமைப்பில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதை வரலாறாக படித்திருக்கிறோம். நடைமுறையில் தற்போது சிங்கையில் பொதுக்கூட்டம் போட்டு பேசுவது என்பது அரசு அதிகாரத்திடம் ஓப்புதல் வாங்கிய பிறகே நடைபெற முடியும். அதுவும் என்ன பேச போகிறீர்கள் என்பதை முன்பே எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கியே பேச முடியும்.

ஆக மனிதனின் இயல்பான பரிணாமம் ஆன பேசுவது என்பது அதிகாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட போது தொழிலாக மாறிப்போனது. அதை இன்றைக்கும் பார்க்கலாம் ஓவ்வொரு அரசியல் கட்சியும் பேச்சாளர்களை வைத்திருப்பார்கள், அவர்களின் வேலை மனிதர்களின் சிந்தனையில் அவர்களுடைய கருத்தை பேசுவதன் மூலம் ஏற்றி, அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கம்.

தொடரும்...

திங்கள், 12 நவம்பர், 2007

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் வாடகை 2500 எல்லாம் சேர்த்து மாதம் 3000 வரும். அங்கே இருந்த நண்பர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள், சிலர் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மாத வருவாயின் சராசரி 3000 தாண்டாது. ஐந்தாறு போராக இருந்தார்கள். இது 2005 மார்ச் வரையிலான காலக்கட்டம். நான் சிங்கைக்கு வந்து சில மாதங்கள் கழித்து நான் தொலை பேசிய போது அருகாமையில் இருக்கிற வீடு விலைக்கு வருகிறது நீ வாங்கு வசதியாகயிருக்கும் என்றார்கள். எவ்வளவு விலை? என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன்? என்னவாயிற்று? என்றேன். அந்த வீட்டிற்க்கு அடுத்த வீட்டை 10,000 ரூபாய் வாடகைக்கு யாரோ ஐடி பசங்களுக்கு விட்டிருக்கிறார்கள். உடனே இந்த வீட்டு ஓனரும் 10,000 கொடுங்க இல்லையின்னா காலி செய்யுங்க என்று சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல் காலிச்செய்து விட்டு கிளம்பிருக்கிறார்கள். சரி முன்னாடி விற்பனைக்கு வந்த வீடு என்னவாயிற்று என்று விசாரித்தால் அதை ஓன்னேகால் கோடி என்று விலை சொன்னார்கள்!

இந்த அதிர்ச்சி ஓர் ஆண்டுக்குள் சமூகத்தில் ஏற்ப்பட்ட பொருளியல் வேறுபாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப துறைதான் காரணம் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டு, மிகப்பெரிய சிந்தனை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

துறையின் உள்ளேயிருப்பவர்களும், வெளியே சமூகமும் மிக மேசமான சிந்தனைப்போக்கில் இருக்கிறார்கள். இவன்களால் தான் விலையேற்றம் என்கிற குற்றச்சாட்டும். என்னய்யா மிஞ்சுது உங்களை விட சில ஆயிரம் மட்டுமே அதிகம் என்கிற பதில் ஆதாங்கமும் மேலும், மேலும் வலுக்கிறதே தவிர... பிரச்சினை என்ன என்பதை பற்றி ஆய்வுச்செய்ய யாருக்கும் மனம் இல்லை.

முதலில் தகவல் தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு பற்றிய சரியான அறிவின்மையை ஓத்துக்கொள்ள வேண்டும். பலருக்கு இதில் வேலைப்பார்ப்பவர்களின் உண்மையான நிலை தெரியாது. நான் என்னையும், என்னை சுற்றியுள்ள அமைப்பையும் உங்களுக்கு சரியான அறிவை ஏற்படுத்துவதன் மூலமே உங்களுக்கு என்னுடைய பிரச்சினையை பற்றிய உண்மை நிலை தெரியும். இங்கே தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என் நோக்கம்.
பிரச்சினைகளை புரியவைப்பதற்க்கான முயற்சி அவ்வளவே!

இங்கே நேரிடையாக ஓரு நிறுவனத்தில், அதனுடைய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குச்செல்பவர்கள் (உதாரணத்திற்க்கு BSNL - அதனுடைய ஐடி துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல்..) வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலை. (அப்ப நீங்களெல்லாம் எப்படிய்யா வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களே!)

கீழே உள்ள பட்டியல் சில விளக்கங்கள் தரும்.
IT Professional = தகவல் தொழில்நுட்ப வல்லுநர் = ஓப்பந்த கூலி தொழிலாளி
Consultancy = தகவல் தொழில்நுட்ப நிறுவனம் = மாமாக்கள்
Client / Customer = பயனாளர் = முதலாளி (அ) ஏமாற்றுக்காரன்

ரொம்ப சிம்பிள் ஓரு பாலியல் தொழில் போல மணிக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளி (Man Hour (or) Man Day) , முதலாளிகளுக்கு ஏவல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறான். அதை கன்சல்டன்ஸி என்கிற அமைப்பில் இருக்கிற மாமாக்கள் வாங்கி, தங்களுக்கு வேண்டியதை சுருட்டிக்கொண்டு மிஞ்சும் சில்லறையை தொழிலாளிக்கு கொடுக்கிறான். (அப்படியே ஓரு விலை நிர்ணயம் செய்யப்பட்ட பெண் எப்படி பொருளீட்டுகிறாளோ அதை போலவே!)

இந்த மாமாக்களில் பெரிய மாமாக்கள் (TCS,CTS, Polaris, etc...) உண்டு. சிறிய மாமாக்களும் உண்டு.

அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது? என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

தங்களுடைய நாட்டில் ஏற்ப்படும் பொருள் செலவை குறைத்து, உலகின் வேறெங்கேயோ கிடைக்கிற மனிதவளத்தை சுரண்டி, தங்களை வளர்த்துக்கொள்வது.

இந்த துறையில் சில தேவைகள் ஏற்ப்படும் போது தேவைப்படும் மனிதவளத்தை இந்தியா, சீனா மாதிரியான நாடுகளிலிருந்து சுரண்டுகிறார்கள். தேவை தீர்ந்தவுடன் அவர்களை அதோகதியாக விட்டுவிடுவார்கள். (உதாரணத்திற்க்கு கணினி மயமாக்கல் அதன் உயரெல்லையை 2000-ம் ஆண்டு தொட்டப்போது ஏற்ப்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு (Systemized was touched its saturation point)).

இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).

இப்படி நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு என்கிற உண்மையை முதலில் உணர்ந்தால் மட்டுமே. தொடர்ந்து பேசுவது சாத்தியமாகும்.
தொடரும்...

குறிப்பு : விவாதத்தின் தொடக்கமாக வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பேசியிருக்கிறேன்.. மற்றவை தொடருவேன். இதை ஓட்டிய விவாதத்தை வரவேற்கிறேன்.

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை...1

கற்றது தமிழ் எம்.ஏ. பற்றிய விவாதம் தொடங்கியது என்பதை விட அதில் சுட்டப்பட்ட தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் என்கிற நிலையில் எங்களுடைய விவாதம் மையம் கொண்டது.

படத்தை பொறுத்த வரை கரு என்பது பன்முகத்தன்மையுடன் இருந்தது. படத்தின் மைய கதாபாத்திரம் உளவியல் பாதிப்படைந்த நபராக கட்டமைக்கப்பட்டதுபோல் ஓரு வகை தன்மையும். சமூகத்தின் வர்க்க ஏற்றதாழ்வுகளால் பாதிப்படையும் மனிதனாக இன்னொரு தன்மையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கதையின் கரு பல மையங்களில் சுழன்றதாலே, கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளதான எடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இயக்குநர் விஜயன், தற்போது இயக்குநர் பாலா போன்றோர்... உளவியல் சார்ந்த திரைப்படங்களை வெற்றிகரமான படைப்பாக செய்திருக்கிறார்கள். அப்படி இந்த படமும் உளவியல் சார்ந்த படமாக அன்புக்கு ஏங்கும் ஓரு இளைஞன் என்கிற மாதிரியாக பயணப்படுகிறது... ஆனால் ஆங்காங்கே இந்த மையத்தில் இருந்து விலகி நன்கு படிக்கும் மாணவன் தமிழ் படிக்கிறான், அவன் மீதான சமூக தாக்கங்கள் என்று வேறு மையத்திற்க்கு தாவி பயணப்படுகிறது... அங்கேயும் தொடராமல்... திடீரென தகவல் தொழில்நுட்ப துறையால் ஏற்ப்பட்ட வர்க்க வேறுப்பாட்டை மையமாக கொண்டு சிறிது நேரம் சுழல்கிறது... இப்படி ஓரே களத்தில் பல்வேறு மையங்களில் கதையை சுழலவிட்டதால் என்னதான்ய்யா சொல்ல வருகிறார் இயக்குநர் என்று பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தருகிறார்.

ஊடகத்தின் வழியாக நாயகன் கொலைகளுக்கு விளக்கம் கொடுப்பதும், அதைப்பற்றிய பொதுமக்களின் கருத்துகளும் ஓற்றை வரி குற்றச்சாட்டாக தகவல் தொழில்நுட்ப துறையை நோக்கி நீண்டது இயக்குநரின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

இயக்குநரின் சிந்தனையில் சமூக அக்கறையும், மனிதர்களை பற்றிய உளவியல் பார்வையும் இருக்கிறது, ஆனால் படைப்பு வெளியில் வரும்போது திடீர், திடீரென வேறு, வேறு மையங்களில் நகரும் போது பார்வையாளனை தேவையற்ற வெறுப்புக்குள்ளாக்குகிறார்.

நல்ல படைப்பிற்க்கான முயற்சி...

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் துறைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விவாதித்தோம்... அதன் தொகுப்பு அடுத்து....

ஞாயிறு, 11 நவம்பர், 2007

வருக... வருக... அறிமுகம் - பசிலன்!

http://pasilan.blogspot.com/

தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார். இன்னும் தமிழ்மண நிர்வாகம் இணைப்புக்கொடுக்கவில்லை. இருப்பீனும் நண்பரை வரவேற்ப்போம்!.
பசிலன்... சொல்லே சொல்லும் இவரின் வாசிப்பின் வீச்சை, மிக நீண்டக்கால நண்பர்... பதிவுலக்கிற்க்கு வருகிறார்.

மிக ஆழ்ந்த அவதானிப்பின் ஊடாக அரசியலை அணுகுபவர். இவருடன் உரையாடும் போது சரியான தகவல்கள், புள்ளிவிவரங்கள் இல்லையென்றால் அமைதியாக இருப்பது நலம்! இல்லையென்றால் வாங்கிக்கட்டிக்கொள்ள முடியாது!.

இந்திய பார்ப்பானீய அரசியலின் இருண்டப்பக்கங்களை தனக்கே உரித்தான நக்கலுடன் கிழிப்பார் என்கிற எதிர்ப்பார்ப்புடன்....
வருக... வருக....
Related Posts with Thumbnails