உயர்திரு பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிய மனித தன்மையற்ற காட்டுமிராண்டி தனமும், பாசிச வன்மமும் நிறைந்த நடவடிக்கையை கண்டு மனம் மிகவும் வேதனையடைகிறது.
80 வயதான அம்மையார் கிட்டதட்ட 4 மணிநேரம் விமான பயணம் செய்து வந்தவரை... உடல்நிலை சரியில்லாமல் இருந்த வயதான பெண்மணி கனிவோடு வரவேற்க வேண்டிய அதிகாரிகள்... இறங்காதே திரும்பி போ! என்கிற வன்மத்துடன் நடந்துக்கொண்டதை நினைத்து, நினைத்து வேதனையும், வெறுப்பும் எழுகிறது.
இந்த நிகழ்வையொட்டி யாரிடம் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்... யார் மீது நம்முடைய கோபம் எழ வேண்டும் என்று புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்த நிகழ்வை ழுமுமையாக அறிந்துக்கொள்வதின் வாயிலாக முடியும்.
பொருளற்ற சுயநல அரசியல் கூச்சல்களை ஓரம்கட்டி விட்டு... நடந்த நிகழ்வை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.
நான்கு நாட்கள் சில சென்னையில் ஊடகங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள் வாயிலாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிகழ்வை எழுதுகிறேன். (நம்பக தன்மை என்பது வாசிப்பவரின் மனநிலையையும், பார்வையும் ஒட்டியது. என்னிடம் வந்து ஆதாரத்திற்கு தொங்க கூடாது)
1. உயர்திரு. வேலுபிள்ளை அய்யா அவர்கள் மரணத்திற்கு பிறகு இலங்கை அரசாங்கம் உயர்திரு பார்வதி அம்மையார் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்தது.
2. உயர்திரு பார்வதி அம்மையார் அவர்கள் தமிழகம் வருவதற்காக கொழுப்பில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அங்கே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
3. அதன்பிறகு உயர்திரு பார்வதி அம்மையார் மலேசியா சென்று அங்கிருந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளார்.
4. மலேசியாவில் சுற்றுலா விசாவில் வருபவார்கள் 30 நாட்கள் மட்டுமே தங்க இயலுமென்பதால்... மறுபடி மலேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.
இந்த இடத்தில் சிலவற்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்...
2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.
இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.
இவ்வாறு கொழுப்பில் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பம், மலேசியாவில் விசா வழங்கப்பட்டுள்ளது.
திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )
எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவு (Immigration) அதிகாரிகள்... LTTE related person... don't deport, send back என்கிற உத்திரவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
யார் வருகிறார்கள்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே... சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறைக்கு தெரிவிக்க... சென்னை புறநகர் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடிநுழைவு அதிகாரிகள் தங்களுக்கு வந்த ஆணையை நிறைவேற்ற... வழக்கம்போல உணர்ச்சியும், சுயநலமும் மட்டுமே எஞ்சியுள்ள திரு.வைகோ தனியாக கதறிவிட்டு வந்திருக்கிறார்.
ஈழ ஆதரவாளர்களுக்கு தகவலை பரப்பியிருந்தால்... குறைந்தபட்சம் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி... அம்மையாரை உள் நுழைய அனுமதி வாங்கியிருக்க முடியும்.
தான் மற்றும் தான் மட்டுமே செய்தாக பேர் வாங்க வேண்டும் என்கிற வைகோவின் சுயநலம்.. ஆதரவாளர்கள் அற்ற தனியாளாக நின்றிருக்கிறார்.
இப்பொழுது...
தங்களுடைய வேலையை மட்டுமே பார்த்த உளவு துறையினர் தொடங்கி... குடி நுழைவு அதிகாரிகள் வரை... வயதான, உடல்நலம் குன்றிய அம்மையாரை பற்றிய எந்தவிதமான கருணையும் காட்டவில்லை என்பதற்காக நோவதா?
உள் நுழைய தடையிருக்கிறது என்பது தெரிந்தும்... அதை நீக்க முயற்சியெடுக்காமல்... ரகசியமான மற்றும் தவறான முறையில் திருமதி பார்வதி அம்மையாரை அனுப்ப முயற்சித்த (அ) அலைகழித்த அவருடைய பயணத்தை ஏற்பாடு செய்தவர்களின் மீது எரிச்சலடைவதா?
முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?
சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?
மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?
நன்றி
அரசு