சில மாதங்களுக்கு முன்பு சிங்கை வலைப்பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில் சொன்னது " இந்த போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கபடுவார்கள், பிரபாகரன் மரணமடைந்தாலும்... ஈழத்திற்கான போராட்டம் தொடரும்..."
மிக தெளிவாக போரில் தோல்வி ஏற்படும் என்பதை விடுதலைபுலிகள் உணர்ந்தே இருந்தனர், இருக்கின்றனர்...
இந்த போரானது இலங்கை அரசு மட்டும் நடத்தினால் விடுதலைபுலிகளால் எதிர்க்க முடிந்திருக்கும். இலங்கை அரசுடன் துணையாக மற்ற நாடுகளையும் சேர்த்து விடுதலைபுலிகளால் எதிர்த்து வெற்றி பெற இயலாது.
இலங்கைக்கு உதவி செய்கிற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஏன் இந்தியா இணைந்துக்கொண்டது? இன்னொரு சமயத்தில் இந்தியாவும், இப்போது நடைபெறுகிற போரில் பங்களிப்பும் என்பதை விரிவாக பேச வேண்டும்.
இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்கிற இந்திய அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இருந்த காரணத்தால்... காங்கிரஸ், பாமக, திமுக கட்சிகள் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை பதிவும் செய்திருந்தேன்
யாருக்கு ஓட்டு போடுவது...?.
ஆனால் உள்மனதில் காங்கிரஸ், பாமக முழுவதுமாக தோல்வியடைய வேண்டும் என்கிற ஆசையிருந்தது. அதே நேரம் திமுக ஒரளவு வெற்றி பெற வேண்டும், அது திமுகவின் தலைமையை தனது நிலையை மறுபரிசீலனை செய்ய உதவும் என்று நினைத்தேன். கலைஞர் மீதான பாசம் என்று எள்ளி நகையாடினாலும் பரவாயில்லை... என்று பல நண்பர்களிடம் திமுக தோற்பது நல்லதல்ல.. என்று விளக்கியிருந்தேன்.
ஈழம், ஈழத்தமிழர் இன்றைக்கு படுகிற துயரங்கள் தமிழக தேர்தலில் எதிரொலிக்கவில்லை ஏன்?
என் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது மிக எளிமையாக சொன்னார்... ஊர் ஊராக வேலை செய்ய யாரிருக்கா? என்று கேள்வி கேட்டார்.
மிக, மிக முக்கியமான அடிப்படை இதுதான்... தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி போராடுகிற தொண்டர்களை உள்ளடங்கிய அமைப்பு இல்லை.
நானே தலைவன், நானே தொண்டன் என்று முழங்கி கொண்டிருக்கும் தலைவர்களே எஞ்சியிருக்கிறார்கள்.
இரண்டாவது... தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழி, தமிழினம் சார்ந்து இயங்க கூடிய அமைப்பாக மக்களால் நன்கு அறியப்பட்டவை திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் முன்னேற்ற கழகம் மட்டுமே.
ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான தொண்டர்களை உள்ளடக்கிய அமைப்பாக திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திமுக, மற்றும் புரட்சிகர இடது அமைப்புகள் (பூணூல் மார்கிஸ்ட்டுகள், மாலைநேர முச்சந்தி நடுத்தர மார்க்கிஸ்ட்டுகள் நீங்கலாக).
திக மற்றும் திமுக வில் ஈழப்போராட்டதிற்கு ஆதரவாக இயங்கிய காரணத்தால் தடா, பொடா வில் சிறைக்கு சென்றவர்கள் மிக அதிகம். அதுவும் திக வில் ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஒரு தடா கைதி இருப்பார். அந்தளவுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். இதில் ஒரு சிலர் நேரிடையாக ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் உண்டு.
இன்றைக்கும் மைசூர் சிறையில் 20க்கும் மேற்பட்டவர்கள் 'பொடா' சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள்.
தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை தொண்டர்களுக்கு மிக ஆழமாக ஊட்டி வளர்த்தெடுத்ததில் திக, திமுக வும் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது.
மாற்றாக அதிமுக என்கிற அமைப்பை எடுத்துக்கொண்டால்... தொண்டர் அமைப்பு என்பது பெரும்பாலும் அந்தந்த ஊர் கட்டபஞ்சாயத்து ரவுடிகள், சாராய வியாபாரிகள், பெரிய ஆள் பண்ண நினைக்கிறவர்கள் இப்படிப்பட்ட தொண்டர் அமைப்பை கொண்டது.
பாமகவின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் குண்டாந்தடி வன்னிய சாதி வெறியர்களை கொண்டது.
மதிமுக வின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் எல்லா ஊர்களிலும் திமுகவால் ஏதோ காரணத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களை உள்ளடக்கியது. மதிமுக வை பொறுத்தவரை தஞ்சை மாவட்டத்தில் என்னால் அடித்து சொல்ல முடியும் முழுக்க, முழுக்க கட்டபஞ்சாயத்து ரவுடிகள் தான் தொண்டர்கள்.
1991 -96 மற்றும் 2001-2006 காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய போராளிகளின் எண்ணிக்கை ஈரிலக்கத்தை தாண்டும். இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை ஒடுக்குவதில் மிக தீவிரமாக இயங்கியவர் ஜெயலலிதா...!
அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழினம் அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கிற அளவில் தான் இருப்பார்கள்.
அதிமுக. பாமக, மதிமுக போன்ற அதிகார அரசியல் பொறுக்கிகளால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளத்தை கொண்டு சொல்ல இயலாது. அதற்கான அடிப்படை அங்கேயில்லாததே...காரணம்!.
ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் கொண்டுச்செல்ல வேண்டுமானால்... அதை தமிழ் மொழி, தமிழின அடையாயத்தை ஆழமாக தாங்கி பிடிக்கிற தொண்டர் அமைப்பை கொண்ட இயக்கத்தால் மட்டுமே இயலும்.
திக, பெதிக, திமுக அமைப்புகள் மட்டுமே... அத்தகைய தொண்டர்களை உள்ளடக்கி இருக்கிறது.
திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்.
தமிழ், தமிழினம் இவற்றுக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தால் இருக்கிற ஆதரவும் காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.
நன்றி!