புதன், 14 ஜனவரி, 2009

அறிவாளி கொழுந்தும், நானும்... அகழ்வு ஆராய்ச்சியும்...!

 

  நம்ம ஊரு பட்டுக்கோட்டைங்கோ, அங்கன வருசத்துக்கு ஒரு முறை கலை இரவு நடக்கும். த.மு.எ.ச என்கிற அமைப்பிலிருந்து நடத்துவாங்க. பெரும்பாலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் அன்றைக்கு நடக்கும்.

இது தோழர்கள் நிகழ்ச்சி...

 

  நமக்கு கலை தாகம் எடுத்து நிகழ்ச்சிக்கு போகலாம் அப்படின்னு முடிவெடுத்து... யாரை துணைக்கு அழைக்கலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டதில் நம் நண்பர் அறிவாளி கொழுந்து ஞாபகம் வந்தது. ( இப்ப பானுப்ரியா, நக்மா... படம்ன்னா யாரை வேணும்னாலும் கூட அழைத்துக்கொண்டு போயிரலாம். ( பாவனா, ஸ்ரேயா ரசிகர்கள் மன்னிக்கவும். நான் இளமையாக இருந்த போது இவர்கள் தான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்).

 

  நமக்கு உள்ளூர் செய்தியே விளங்காது. இதுல இவர்கள் சீனா, ரஷ்யா , வியட்நாம், கியூபா... அப்படின்னு வெளியூர் விசயமாவே பேசவாங்க அதனால கொஞ்சம் விவரமான ஆளா இருந்த நமக்கு சந்தேகம் வந்த கேட்டுகலாம் இல்லையா...!

 

  சரின்னு கொழுந்து வீட்டுக்கு போயி வாய்யா இந்த மாதிரி கலை நிகழ்ச்சி இருக்கு போகலாமுன்னு சொன்னேன். அவனும் நீ எதுவும் கோவப்படலைன்னா! நான் வரேன் அப்படின்னு கிளம்பிட்டான். இதுவரைக்கும் பேசாததை புதுசா நம்ம கொழுந்து என்ன பேசிர போறான் அப்படின்னு நானும் கூட கெளம்பி நிகழ்ச்சிக்கு போயிக்கிட்ருந்தோம்.

எப்படியும் முழு இரவு அங்கன இருக்க போறோம் நம்ம LNB ல சாப்பிட்டு போயிரலாம் அப்படின்னு உள்ளர போயி இரண்டு ஸ்பெசல் பூரியை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்...

நான் "கொழுந்து! தேங்காய் சட்னி வைச்சு பூரி சாப்பிட்டு பாரு ரொம்ப நல்லா இருககும்"
  (கொழுந்து ஒரு நக்கல் புன்னகை பூக்க)
  என்ன?
கொழுந்து "புண்ணாக்குல செய்த சட்னி நல்லாதான் இருக்கும்!"
நான் "என்ன? என்ன?? புண்ணாக்குலய!! சும்மா நக்கலடிக்கத!"
கொழுந்து "அப்புறம் பின்னாடி போயி பாரு! நான் தான் கை கழுவும் போது பார்த்தேனே தொட்டியில தேங்காய் புண்ணாக்கு ஊறிக்கிட்டு இருக்கு!"
 

வைச்சுட்டான்யா ஆப்பு! எனக்கு சாப்பிட்டது அப்படியே கொமட்டிக்கிட்டு வந்தது. அப்படியே எழுந்து வந்து நின்னுக்கிட்டிருந்தேன். நம்ம கொழுந்து முழு பூரியையும் பட்டாணியையும் நல்ல முழுங்கிட்டு வந்தான்.

சரி தண்ணீர் குடிக்கலாமுன்னு குவளையை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வைக்க, நம்ம கொழுந்து எடுத்து குவளையை பார்க்க எனக்கு உள்ளுக்குள் அப்படியே புகைந்தது. மறுபடி ஒரு கேலி புன்னகை...

நான் "என்ன இப்போ?"
கொழுந்து

"இதுல என்ன எழுதியிருக்குனு பார்த்தியா?"

நான் "இல்லையே!"
  வாங்கி பார்க்க அதில் "இது LNB ல் திருடியது" என்று பாத்திர அச்சு பதித்து இருந்தார்கள். மறுபடி நம்ம கொழுந்து புன்னகைக்க என்னய்யா!?
கொழுந்து "சரி! சரி!! கோவப்படாத அப்புறம் பேசுவோம் வா!"
  அப்பாடி ஒரு வழியா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போயி சேர்ந்தாச்சு. "நந்தலாலா" என்கிற பேச்சாளர் காந்தியடிகளின் குச்சிக்கு குச்சி ஐஸ் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தார். அப்படியே பேசிக்கிட்டே குஜராத் பூகம்பம், அகழ்வாராய்ச்சி எல்லாம் பத்தி பேசினார்.
நான் "கொழுந்து! நல்லா பேசறாருல்ல! "தேசம் எங்கே போயிட்ருக்குன்னு" எவ்வளவு வருத்தப்பட்டு பேசறார் பாரு!"
கொழுந்து "ஆமா! ஆமாம்! நம்ம தோழர்கள்கிட்ட கேளு போனவாட்டி எதோ காசு குறையுதுன்னு கூட்டத்துக்கே வரலையாம் !"
 

(அப்ப தான் நம்ம தோழர்கள் வேற துண்டுயேந்தி வந்துக்கொண்டிருந்தார்கள்.)

எனக்கு மண்டை குடைச்சல் என்ன நாம எதை சொன்னாலும் கொழுந்து உடனே ஒரு பதில சொல்றான். அப்புறம் என்னங்க எதுக்கெடுத்தாலும் ஒரு நொள்ளை இல்லை ஒரு சொட்டையின்னா என்ன பண்றது!

சரின்னு அப்படியே நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டேயிருந்தோம். நம்ம மதுரை சந்திரன் வந்தார். மக்கள் கவிஞரின் புகழ் பாடும் பாட்டு பாட ஆரம்பித்தார்...

"சும்மா கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து...

.......

......

பட்டுக்கோட்டையின் பாட்டு - அது

பதினெட்டு சுவை கூட்டு...."

அப்படின்னு பாடிக்கிட்ருந்தார்... தீடீரென்று நம்ம கொழுந்து விழுந்து, விழுந்து சிரிக்கிறான். எனக்கு சரியான எரிச்சல்

நான்

"என்ன இப்போ? எதுவா இருந்தாலும் சொல்லிட்டு சிரி!"

கொழுந்து "சரி! சரி! கோவப்படாத! இந்த 'இது LNB ல் திருடியது ', 'பூகம்பம்', 'அகழ்வாராய்ச்சி', இந்த பாட்டு எல்லாத்தையும் ஒன்னா சேர்த்தேன் சிரிப்பு வந்துருச்சு!"
நான் " இதுல சிரிக்க என்ன இருக்கு!"
கொழுந்து " ஒன்னுமில்லை தான்! இப்படி நினைச்சு பாரு இப்ப இங்கன பூகம்பம் வந்து நாடு, நகரம், மக்கள் எல்லாம் பூண்டோடு அழிந்து போயிடுறாங்க... அப்புறம் ஆயிரமோ, இரண்டாயிரமோ ஆண்டுகள் கழித்து மனிதர்கள் இந்த இடத்த அகழ்வாராய்ச்சி செய்யும் போது நீ தண்ணீர் குடித்த அந்த குவளையும், இந்த பாட்டும் கிடைத்தால்... அவர்கள் என்ன வரலாறு எழுதுவர்கள் நம்மை பற்றி என்று நினைச்சேன் சிரிச்சேன்..."
நான் "என்ன எழுதுவாங்க இந்த இடத்துல வாழ்ந்த மக்கள் எவர்சில்வர் என்ற உலோகத்தை பயன்படுத்த தெரிந்திருந்திருக்கிறார்கள். அப்பொழுது மாபெரும் கவிஞன் இருந்திருக்கிறான் அவனை பாராட்டி கவிதை எழுதி இருக்கிறார்கள. என்று எழுதுவார்கள்..."
கொழுந்து "அப்படியா!"
நான் "பின்ன வேற என்னய்யா எழுதுவாங்க!"
கொழுந்து "எனக்கு வேற மாதிரி தோணுது!"
நான் "என்ன தோணுது!"
கொழுந்து "இங்கு வாழ்ந்த மக்கள் திருட்டை தொழிலாக கொண்டிருந்தாலும்.. நேர்மையாக, நாணயமாக அந்த பொருள் எங்கே திருடப்பட்டது என்பதை அச்சிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்!" அப்படின்னு எழுதுவாங்க. அப்புறம் அந்தபாட்டுல முதல் வரியை சொல்லு..."
நான் "சும்மா கிடந்த சொல்ல எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து....."
கொழுந்து "அக்காலத்தில் ஒருத்தர் இருந்திருக்கிறார் சொற்களுக்கே மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்... அப்படின்னுல எழுதுவாங்க!" எல்லாரும் கைத்தட்டுனாங்கல அந்த என்னமோ சுவைன்னு ஒரு வரி... அத சொல்லு..."
நான் "பட்டுக்கோட்டையின் பாட்டு - அது பதினெட்டு சுவை கூட்டு..."
கொழுந்து "தமிழ்ல்ல சுவை எத்தனைப்பா?"
நான் "ஆறு சுவைகள்"
கொழுந்து "இத படிச்சிட்டு என்ன எழுதுவாங்க அக்காலத்திலிருந்த மக்கள் பதினெட்டு சுவைகளை அறிந்திருக்கிறார்கள்" என்று அல்லவா எழுதுவாங்க..."
நான்

"இப்ப என்ன சொல்ல வர நீ!"

கொழுந்து "நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் நீயே சிந்தித்து பாரு!"
 

(இப்படியாக எங்கள் கலை இரவு முடிந்தது. விடியல் வந்து விட்டது வீட்டுக்கு போறோம்.)

Related Posts with Thumbnails