திங்கள், 22 ஜூன், 2009

கவிஞர் தாமரை...அறச்சீற்றம், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நிகழ்வு...

அதிகாரங்கள் ஆர்ப்பரிக்கின்ற பொழுதுகளில்... ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளையை கடித்துக்குதற வெறிப்பிடித்தலைகின்றன... அல்லக்கைகள்.

என்னுடைய சிறுவயதில் நான் கண்ட காட்சி அப்படியே என் கண்ணில் நிழலாடுகிறது...
கிராமத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் இன்னொரு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞனை மரத்தில் கட்டிவைத்து ஆல விழுதுகளாலும், சைக்கிள் டியூப்களாலும் அடித்து துவைத்துக்கொண்டிருந்தனர்... "அவன் திருடி விட்டான் என்கிற பொய்யான குற்றசாட்டை வைத்து!"

அதன் பின்னணி ஒன்றுமேயில்லை... ஆண்டைகளை எதிர்த்து விட்டான் அவ்வளவுதான்!

குற்றுயிராய் கிடந்த இளைஞனின் தாய் கதறியபடி கிடந்தாள்... துடித்தாள்... கால்களில் விழுந்து அரற்றினாள் தன் மகனை விட்டு விடும்படி... அவளோடு அவர்களின் உறவு பெண் ஒருவளும் கெஞ்சிக்கொண்டிருந்தாள்... மன்றாடினார்கள்... அழுதார்கள்... புலம்பினார்கள்... தலைவிரிக்கோலமாய்... துடித்தார்கள்... துவண்டார்கள்...

ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலமாய்... குமறியப்படி சபித்தாள் அந்த தாய்... "இந்த ஊரும், உங்க குடும்பமும் நாசமாய் போக!"

ஆதிக்க வெறியர்கள் இளைஞனின் உடலில் தங்கள் பலத்தை காண்பித்திருக்க... கைத்தடிகள்... கிளர்ந்தார்கள்...

"ஏய்! கிளவி என்ன சத்தம் போடுற!"
"யாரடி பேசுற!"
என்று எட்டி மதித்து இடுப்பெலும்பு உடைத்தார்கள்.


அப்படியே... இன்றைக்கு கவிஞர் தாமரைக்கு நிகழ்வதை ஒப்பிடுகிறேன்...

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரங்கள் எம் உறவுகளை வன்னி மண்ணில் கொன்றழித்த பொழுதுகளில்...

பாஸ்பரஸ் கொத்து குண்டுகளாலும், பேரழிவு ஆயுதங்களாலும் எம் உறவுகள் சிதைக்கப்பட்ட பொழுதுகளில்...

3 லட்சம் மக்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கி வைத்து... எக்காளமிடும் பார்ப்பன, பனியா அதிகாரத்தின் முன்பு அழுது, புலம்பி, அரற்றி, கதறி, துடித்து, வீதியில் இறங்கி கத்தி கதறி, எம் சகோதரர்கள் தம்மையே தீயிட்டு எரித்துக்கொண்டும்... எல்லாம் பயனற்று போன பொழுதுகளில்....

ஒடுக்கப்பட்டவர்களின் இயலாமை ஓலமாய்... கவிஞர் தாமரை அவர்களில் "கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்" என்கிற கவிதை வந்திருக்கிறது.

பார்ப்பன, பனியா தேசத்தின் அல்லகைகளும், கைத்தடிகளும்... கொக்கரிகின்றன, இப்படி எப்படி கவிதை எழுதலாம் என்று!?

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் துயரமடைந்த மக்களுக்கு ஓலமிடக்கூட உரிமையில்லையா?

பார்ப்பன, பனியா தேசத்தை சபித்ததால் பொங்கி எழுகின்ற இந்திய பொறையாண்மை அடிவருடிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்வளையை நசுக்கிவிட துடிக்கின்றன.

பார்ப்பன, பனியா தேசத்தின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஈனக்குரலாய் அசாமிலும், நாகலாந்திலும், பஞ்சாபிலும், காஷ்மீரிலும், பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், தமிழ்நாட்டிலும்... எல்லா ஊர்களிலும், எல்லா மாநிலத்திலும் ஒலித்து/சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த குரல் கவிஞர் தாமரை போன்றவர்களால் உரத்து ஒலிக்கும்பொழுது அதிகாரங்களும், அல்லகைகளும் கிலி பிடித்து ஆடுகின்றன.

அந்த குரலை உடனே நசுக்கி விட வேண்டுமென்று துடிக்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்... அந்த ஒலியின் அதிர்வில் அதிகாரங்களின் கோட்டைகள் தூள்தூளாக வெடித்து சிதற வேண்டும்!

வியாழன், 18 ஜூன், 2009

தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பதிவுலக தோழமைகளுக்கு...

நான் 28-06-2009 முதல் 03-07-2009 வரை ஊரில் இருப்பேன்.

எல்லோருக்கும் வாய்ப்பிருக்குமெனில் இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாள் தஞ்சையில் ஒன்று கூடலுக்கு திட்டமிடலாம்...

வாய்ப்பிருப்பவர்கள்... பின்னூட்டத்தில் தகவல் தாருங்கள்.

நன்றி

திங்கள், 1 ஜூன், 2009

எச்சரிக்கை ! openid - பயன்படுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

Gmail, yahoo,blogspot,wordpress,aol அல்லது வேறெந்த openid provider பயன்படுத்தி நீங்கள் தமிழ்மணம் மற்றும் openid(எ.கா zoho.com) ஐ பயன்படுத்தி உள்நுழையும் தளங்களில் உங்களுடைய openid மட்டுமே அந்த தளத்திற்கு வழங்கப்படும்.

இத்தளங்கள் openid consumer என்று அழைக்கப்படும்.

ஆனால் மிக,மிக கவனத்தில் கொள்ள வேண்டியது, openid பயன்படுத்தி login செய்தபிறகு... வெளியேறும்பொழுது அவசியம் openid provider (gmail,yahoo,blogspot,wordpress) தளத்திற்கு சென்று signout செய்ய வேண்டும். இவ்வாறு செய்ய தவறினால் அந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து உள்நுழைந்துள்ளதாகவே கருத்தப்படும்.

எ.கா :

blogspotஐ openid ஆக பயன்படுத்தி உள்நுழைந்துள்ளதாக வைத்துக்கொள்வோம்... தமிழ்மணமோ அல்லது வேறெந்த தளமோ பயன்படுத்திய பிறகு blogger.com சென்று நீங்கள் signout செய்ய வேண்டும்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால்... உங்களுடைய gmail மற்றும் blogspot account இரண்டுமே login ஆகவே இருக்கும்.

ஆகவே எந்த openid பயன்படுத்தினாலும்... அந்த openid provider தளத்திற்கு சென்று signout செய்ய மறக்காதீர்கள்!

புதன், 20 மே, 2009

ஈழம்- இந்தியா நானும் ரவுடி... நானும் ரவுடி...

என்னுடைய அரசியல் கணக்குகள் சரியாக இருக்குமெனில் இன்னும் சில நாட்களில் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக புதிய போராட்டத்தையோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் என்கிற பெயரில் நிதி திரட்டவோ அறிவிப்பு வெளியிடலாம்!

நான்காம் கட்ட ஈழப்போர் என்று விவரிக்கப்படுகிற சூழலில் இந்தியாவின் பங்களிப்பு என்பதை பேச முயற்சிக்கிறேன்.

சாதரரணமாக எங்கள் ஊரில் கட்ட பஞ்சாயத்து செய்கிறவன் கூட தான் செய்கிற சமரச முயற்சிகளை மீறுகிறவர்களை ஆட்டோ (அ) டாடா சுமோவில் அள்ளி வந்து நொங்கு எடுக்கிற சூழலில்...

இணைத்தலைமை நாடுகள் (நார்வே, ஜப்பான், அமெரிக்கா...) என்கிற வல்லாதிக்க நாடுகள் முன்னிலையில் ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்ததை தன்னிச்சையாக இலங்கை அரசு வெளியேறிய பொழுது... நடவடிக்கை எடுக்க முடியாமல போனதேன்?

தாங்கள் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்ததை இலங்கை அரசு மீறிய பொழுதும்... நார்வேயின் எரிக் சோல்கைம் இலங்கைக்கு வருகை தந்துக்கொண்டு இருப்பதன் பின்னணி என்ன?

மனித சமூகத்தை தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்காக ஆப்பிரிக்காவிலும், வியட்நாமிலும், பாலஸ்தீனத்திலும், ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்லும், இன்னும் உலகின் பல பகுதிகளில் கொன்றழிக்கும் ராஜபக்சேவின் அண்ணன்களான ஆன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் இன்றைய புலம் பெயர் தமிழர்கள் ஐயோகோ! எங்களை கொல்கிறார்கள் என்று கதறியழுவதால்...! என்ன நிகழும்?

வரலாறு சார்ந்து... சில அடிப்படை கூறுகளை அலசி பார்ப்போம்...

கணக்கியல் நிகழ்தகவின் படி எந்தவொரு அதிகாரமும் எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் மாறி, மாறி சந்தித்தாக வேண்டும்.
எழுச்சி என்கிற நிகழ்வின் சாத்திய கூறை அதிகரிக்க என்ன செய்யலாம்... தொடர்ந்து வளங்களை அதிகரிப்பது மூலம் எழுச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதிகாரத்தை நிலை நிறுத்தி எழுச்சி என்கிற நிகழ்வை சாத்தியமாக்க என்ன மாதிரியான வளங்கள் தேவை?
1. மனித வளம்.
2. இயற்கை வளம்.

அலெக்சாண்டர், நெப்போலியன், சீசர், ராஜராஜ சோழன் உள்ளடங்கி... ஐரோப்பிய காலணிகள், ஜப்பான்,ரஸ்யா, சீனா முதலாக இன்றைய அமெரிக்க வல்லாதிக்கம் வரைக்கும்... இந்த மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் தக்க வைத்துக்கொள்ளவே மற்ற நிலப்பரப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர்.

முன்பு மன்னர்/அரசர் என்கிற அதிகாரம் பின்பு சிதைந்து... அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம், முதலாளித்துவ கும்பல் என்று வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பார்ப்பன, பனியா அதிகார கும்பலாக இருக்கிறது.

இந்த நவீன அரசியல் அதிகார முதலாளித்துவ கும்பலில் உள்ளிருப்பவர் வெளியேறலாம்... புதிதாக வேறு தனி நபரோ, குழுவோ இணைந்துக்கொள்ளலாம்... ஆனால் இந்த கும்பலிடம் அதிகாரம் என்பது இருந்துக்கொண்டேயிருக்கிறது

இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிப்பதற்கு நில/மண் ஆக்கிரமிப்பு என்பது போர்களின் மூலமே நடத்தப்பட்டன். அது மன்னர்களின் படையெடுப்பாக இருந்தாலும், ஐரோப்பிய காலணி படையெடுப்பாக இருந்தாலும்... இலக்கு இரண்டு தான் மனித வளத்தை சுரண்டுதல் (மனிதர்கள் அடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்டது)... இயற்கை வளத்தை கொள்ளையடித்தல் (தங்கம், பிற உலோகங்கள் கொள்ளையடிக்கப்பட்டது)
காலணி நாடுகளில் மனித உழைப்பே சுரண்டப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில்... நேரிடையாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது குறைய தொடங்கி மனித வளம், இயற்கை வளம் சுரண்டப்படுவது என்பது புதிய வடிவத்தில் உருமாற்றம் பெறுகிறது.

1. ஒப்பந்தங்கள்
2. அறிவுசார் உரிமைகள்
3. உலக மயமாக்கல்

இந்த புதிய வடிவத்தில் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கு பதிலாக ஆங்காங்கே தனக்கு சாதகமான குட்டி/ஏவல் அதிகார அமைப்பை உருவாக்குவது... அந்த குட்டி/ஏவல் அதிகாரத்தை விடுதலையடைந்த நிலையில் செயல்படுவதாக கூறிக்கொண்டே மேலிருந்து ஒப்பந்தங்கள், அறிவுசார் உரிமைகள், உலக மயமாக்கல் என்கிற தொலைநிலை கட்டுபாட்டு வழியாக மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிக்கின்றன இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள்.

தாங்கள் உருவாக்கிய குட்டி/ஏவல் அதிகாரங்கள் தங்கள் கட்டுபாட்டை மீறும்பொழுது... அதை அழிக்கவும் இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள் தயங்குவது கிடையாது..(ஈராக் மீதான தாக்குதல்)

தொடரும்...

செவ்வாய், 19 மே, 2009

ஈழம்-கண்ணீர் அஞ்சலியும்... சில கடமைகளும்...!

அன்பிற்கினிய பதிவர்களே, தோழமைகளே!

வன்னி பெருநிலத்தில் வல்லாதிக்க நாடுகளின் வழிகாட்டுதலோடு சிங்கள பேரினவாதத்தால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன் தாக்குதலானது... ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

இறுதிகட்ட போர் என்ற பெயரில் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்திருக்கும் 10,000 முதல் 15,0000 ஈழதமிழர்களின் தடயங்களை மறைக்கவும்... உலகத்தின் பார்வையில் இருந்து திசை மாற்றவும்... போரியல் குற்றங்களை மறைக்கவும்... சிங்கள பேரினவாதம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று வதந்திகளை பரப்பி வருகிறது.

தங்களுடைய அண்ணன், தம்பி, சிற்றப்பா, மாமா, தாய், தமக்கை,... என்று ஏதோவொரு உறவுகளை இழந்து கண்ணீரோடும், வாழ்வின் அடுத்த கணத்தை பற்றிய கேள்வி குறியோடும் திறந்த வெளி சிறைசாலை கூடாரங்களில் அடைப்பட்டு கிடக்கும்... வன்னி மக்களுக்கும்... அவர்களின் உறவுகளாக உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயரங்களில் பங்கெடுப்போம். அவர்களுக்கு ஆறுதல் என்பது நம்மிடையே இல்லை... ஆனால் அவர்களை காயப்படுத்தாமல் அமைதியாக இருப்போம்.

பேரினவாதத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே!
உங்களுடைய உறவுகளை இழந்து துயருற்று கிடக்கும் வேளையில்... எம்மால் உமக்கு என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை...!
கடைசி கணம் வரை போராளிகளுடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் இவர்கள் என்று மடிந்த மக்களை எண்ணி கண்ணீர் வடிப்பதை தவிர என்னிடம் ஏதுவுமில்லை...!

இவ்வளவு துயரங்களுக்கு ஊடாகவும் புலிகள் தங்களால் இயன்றவரை வன்னி மக்களின் மரணத்தை கடைசி சில நாட்கள் வரை பதிவு செய்திருந்தார்கள்... இப்பொழுது இந்த கடமை உங்கள் கைகளில் வந்திருக்கிறது....

வன்னி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி... இறுதி போர் என்று பெயரால் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்த மக்களின் தடயங்களை பதிவு செய்வதும்... அவர்களின் வாழ்க்கை, வரலாற்றை பதிவு செய்வதும் அவசியம்! காலத்தின் கட்டாயம்!.

துயரங்களுக்கு மத்தியிலும் துளி நம்பிக்கையுடன் துடித்தெழுவோம்!
நதியின் பயணத்திற்கு நாணல்களா தடை!
பேரினவாதம் இருக்கும் வரை உரிமைக்கான போராட்டம் தொடரும்!

கண்ணீருடன்...
அரசு

ஞாயிறு, 17 மே, 2009

தேர்தல் 2009 - ஈழம் கடைத்தேறாமல் போனதேன்...?

சில மாதங்களுக்கு முன்பு சிங்கை வலைப்பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில் சொன்னது " இந்த போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கபடுவார்கள், பிரபாகரன் மரணமடைந்தாலும்... ஈழத்திற்கான போராட்டம் தொடரும்..."

மிக தெளிவாக போரில் தோல்வி ஏற்படும் என்பதை விடுதலைபுலிகள் உணர்ந்தே இருந்தனர், இருக்கின்றனர்...

இந்த போரானது இலங்கை அரசு மட்டும் நடத்தினால் விடுதலைபுலிகளால் எதிர்க்க முடிந்திருக்கும். இலங்கை அரசுடன் துணையாக மற்ற நாடுகளையும் சேர்த்து விடுதலைபுலிகளால் எதிர்த்து வெற்றி பெற இயலாது.

இலங்கைக்கு உதவி செய்கிற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஏன் இந்தியா இணைந்துக்கொண்டது? இன்னொரு சமயத்தில் இந்தியாவும், இப்போது நடைபெறுகிற போரில் பங்களிப்பும் என்பதை விரிவாக பேச வேண்டும்.

இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்கிற இந்திய அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இருந்த காரணத்தால்... காங்கிரஸ், பாமக, திமுக கட்சிகள் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை பதிவும் செய்திருந்தேன் யாருக்கு ஓட்டு போடுவது...?.

ஆனால் உள்மனதில் காங்கிரஸ், பாமக முழுவதுமாக தோல்வியடைய வேண்டும் என்கிற ஆசையிருந்தது. அதே நேரம் திமுக ஒரளவு வெற்றி பெற வேண்டும், அது திமுகவின் தலைமையை தனது நிலையை மறுபரிசீலனை செய்ய உதவும் என்று நினைத்தேன். கலைஞர் மீதான பாசம் என்று எள்ளி நகையாடினாலும் பரவாயில்லை... என்று பல நண்பர்களிடம் திமுக தோற்பது நல்லதல்ல.. என்று விளக்கியிருந்தேன்.

ஈழம், ஈழத்தமிழர் இன்றைக்கு படுகிற துயரங்கள் தமிழக தேர்தலில் எதிரொலிக்கவில்லை ஏன்?

என் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது மிக எளிமையாக சொன்னார்... ஊர் ஊராக வேலை செய்ய யாரிருக்கா? என்று கேள்வி கேட்டார்.

மிக, மிக முக்கியமான அடிப்படை இதுதான்... தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி போராடுகிற தொண்டர்களை உள்ளடங்கிய அமைப்பு இல்லை.

நானே தலைவன், நானே தொண்டன் என்று முழங்கி கொண்டிருக்கும் தலைவர்களே எஞ்சியிருக்கிறார்கள்.

இரண்டாவது... தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழி, தமிழினம் சார்ந்து இயங்க கூடிய அமைப்பாக மக்களால் நன்கு அறியப்பட்டவை திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் முன்னேற்ற கழகம் மட்டுமே.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான தொண்டர்களை உள்ளடக்கிய அமைப்பாக திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திமுக, மற்றும் புரட்சிகர இடது அமைப்புகள் (பூணூல் மார்கிஸ்ட்டுகள், மாலைநேர முச்சந்தி நடுத்தர மார்க்கிஸ்ட்டுகள் நீங்கலாக).

திக மற்றும் திமுக வில் ஈழப்போராட்டதிற்கு ஆதரவாக இயங்கிய காரணத்தால் தடா, பொடா வில் சிறைக்கு சென்றவர்கள் மிக அதிகம். அதுவும் திக வில் ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஒரு தடா கைதி இருப்பார். அந்தளவுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். இதில் ஒரு சிலர் நேரிடையாக ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் உண்டு.

இன்றைக்கும் மைசூர் சிறையில் 20க்கும் மேற்பட்டவர்கள் 'பொடா' சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள்.

தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை தொண்டர்களுக்கு மிக ஆழமாக ஊட்டி வளர்த்தெடுத்ததில் திக, திமுக வும் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது.

மாற்றாக அதிமுக என்கிற அமைப்பை எடுத்துக்கொண்டால்... தொண்டர் அமைப்பு என்பது பெரும்பாலும் அந்தந்த ஊர் கட்டபஞ்சாயத்து ரவுடிகள், சாராய வியாபாரிகள், பெரிய ஆள் பண்ண நினைக்கிறவர்கள் இப்படிப்பட்ட தொண்டர் அமைப்பை கொண்டது.

பாமகவின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் குண்டாந்தடி வன்னிய சாதி வெறியர்களை கொண்டது.

மதிமுக வின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் எல்லா ஊர்களிலும் திமுகவால் ஏதோ காரணத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களை உள்ளடக்கியது. மதிமுக வை பொறுத்தவரை தஞ்சை மாவட்டத்தில் என்னால் அடித்து சொல்ல முடியும் முழுக்க, முழுக்க கட்டபஞ்சாயத்து ரவுடிகள் தான் தொண்டர்கள்.

1991 -96 மற்றும் 2001-2006 காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய போராளிகளின் எண்ணிக்கை ஈரிலக்கத்தை தாண்டும். இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை ஒடுக்குவதில் மிக தீவிரமாக இயங்கியவர் ஜெயலலிதா...!

அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழினம் அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கிற அளவில் தான் இருப்பார்கள்.

அதிமுக. பாமக, மதிமுக போன்ற அதிகார அரசியல் பொறுக்கிகளால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளத்தை கொண்டு சொல்ல இயலாது. அதற்கான அடிப்படை அங்கேயில்லாததே...காரணம்!.

ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் கொண்டுச்செல்ல வேண்டுமானால்... அதை தமிழ் மொழி, தமிழின அடையாயத்தை ஆழமாக தாங்கி பிடிக்கிற தொண்டர் அமைப்பை கொண்ட இயக்கத்தால் மட்டுமே இயலும்.

திக, பெதிக, திமுக அமைப்புகள் மட்டுமே... அத்தகைய தொண்டர்களை உள்ளடக்கி இருக்கிறது.
திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்.

தமிழ், தமிழினம் இவற்றுக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தால் இருக்கிற ஆதரவும் காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.

நன்றி!

செவ்வாய், 5 மே, 2009

அரசியல் - கைப்புள்ள...மொக்கசாமி... ஆமாஞ்சாமி...

நம் முன்னே மனித சமூகத்தின் பிரச்சினைகள் விரிந்து... காதடைத்து, கண் மயங்கி, மூச்சடைத்து, புலன்கள் அனைத்தும் ஒடுக்கி நம்மை வீழ்த்த வீரியம் கொண்டெழுகிறது. ஒன்றா, இரண்டா... ஒராயிரமா?! முடிவில்லா எண்ணிக்கையில் வந்துக்கொண்டேயிருக்கிறது.

மனிதன் சமூகமாக வாழ இயலுமா? வாழ்ந்துதான் பார்ப்போம்... என்று
கடந்து போனவனும் போராடினான்... கடந்துக்கொண்டிருப்பவனும் போராடிக்கொண்டிருக்கிறான். வருகிறவனும் போராடுவான்.

தான், தனது என்கிற வட்டத்தில் வாழ்கிற மனிதர்களால் எப்படி மனிதன் சமூகமாக வாழ்வதற்கான சிந்தனையை, செயற்பாடுகளை நோக்கி நகர இயலாதோ! அதே போல மனித சமூகத்தின் சமூக, அரசியல் சிக்கல்களை, பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதற்கும் சில அடிப்படைகளை பற்றிய அறிதலும், தேடலும் அவசியமானதாக இருக்கிறது.

சரியான புரிதலற்ற, அறியாமையை மண்டிக்கிடக்கிற... சமூகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கிற அரசியற்கூத்துகளை நாம் அடையாளம் காணவும், நம் முன்னே அரசியற் மாற்றங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றவைகளை வினா தொடுப்பதன் மூலம் அம்பலப்படுத்தவும்... தொடர்ந்து சமூக, அரசியல் தேடல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஒருவர் என்னிடம் அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள் "சேரியை முன்னேற்றி காட்டுகிறேன்!" என்று சொல்கிறார்.

சேரி என்பது என்ன?
சேரி ஏன் தோன்றிது?
சேரியின் வடிவம் எப்படியிருக்கும்?
சேரி எங்கேயெல்லாம் இருக்கும்?

அடிப்படையாக சமூக வாழ்வில் எங்கெல்லாம் உழைப்பு சுரண்டலும், முதலாளித்துவமும் இருக்கிறதோ... அங்கேயெல்லாம் சேரி இருக்கும். அதன் வடிவங்கள் வெவ்வேறாக...!

5-10 ஆண்டுகளில் 200-300 கோடி என்று உழைப்பு சுரண்டல் மூலம் முதலாளி ஆகிற ஒருவரால்...
இன்னும் 10-20 ஆண்டுகளில் 1000-2000 கோடி வருவாய் ஈட்டுவேன் என்று சவால் விடுகிற... முதலாளித்துவ சிந்தனை உள்ள ஒருவரால்...
எப்படி சேரியை முன்னேற்ற முடியும்?. சேரியின் வடிவத்தை மாற்ற போகிறேன் என்று சொல்வார் எனில் அது உண்மையாக இருக்கும்!.

இங்கே சேரியை பற்றிய புரிதலும்... சேரியற்ற சமூகத்தை கட்டமைப்பதற்கான சமூக, அரசியல் அறிவும் நமக்கு அவசியமானதாக இருக்கிறது.

அரசியலில் இவர் நல்லவர், படித்தவர் என்கிற அடையாளங்களுடன் கைப்புள்ளைகள் வளர்க்கப்பட்டு... மொக்கசாமிகளாக நம்முன் வலம் வர வைக்கப்படுகிறார்கள். இவர்கள் "ஆமாஞ்சாமிகளாக" அதிகாரங்களால் பயன்படுத்தபடுகிறார்கள்.

புதன், 29 ஏப்ரல், 2009

யாருக்கு ஓட்டு போடுவது...?

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை.... இப்பொழுது யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெள்ள தெளிவாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ், தி.மு.க, பா.ம.க ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது.

இனி வருகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று ஆருடம் கூறுவதை விட... கடந்த 5 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்தவர்கள்... தமிழின அழிப்புக்கு துணை போனதற்கான தண்டனையாக இந்த வாக்களிப்பு இருந்தாக வேண்டும்.

இதில் மிக, மிக முக்கியமாக கடந்த 5 ஆண்டு காலமாக காங்கிரஸ் செய்த அத்துனை தமிழின அழிப்புக்கும் உறுதுணையாக இருந்த பா.ம.க... இப்பொழுது நானில்லை... அவன்! என்கிறது.

கடைசியாக நேரு வீட்டு வாசலில் எச்சில் இலையை நக்கி தின்னும் காங்கிரஸ் பொறுக்கிகளும், கருணாநிதி குடும்பம் தான் தமிழினம் என்று அலைகிற உடன்பிறப்புகளும், வன்னிய ஆதிக்க சாதி பாமககாரனும்... வீழ்த்தபட்டாக வேண்டும்.

மனித பேரவலத்தை தமிழினத்திற்கு தந்தவர்களுக்கான தண்டனை தருவதற்கான களம் தான் இந்ததேர்தல்...!
அவர் வந்தால் கிழிப்பாரா என்கிற கேள்விகளுக்கு இங்கே இடமில்லை...
முதலில் இந்த மூன்று (காங்கிரஸ்,திமுக,பாமக) கட்சிகளை ஓட்டு என்னும் செருப்பால் அடிக்கும் பணிதான் முக்கியமானது.

திங்கள், 6 ஏப்ரல், 2009

வன்முறை - காவல்துறை உங்கள் நண்பன்...!

"சுளீர்!"
தண்ணீர் குவளை தெறித்து சிதறியது...

முதுகு தண்டில் வலி, கண்களில் பயம்,மிரட்சி, அழுகை... திரும்பி பார்த்தேன், கையில் பிரம்புடன் தலைமையாசிரியர்.
நான் செய்த குற்றமென்ன?
ஆசிரியரிடம் அனுமதி வாங்கி தண்ணீர் பருக வந்ததா? பருகியதா?

என் உடல் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டு... 16 ஆண்டுகள் கடந்துவிட்டது; ஆனால் எனக்குள் நான் அடைந்த உளவியல் பாதிப்புகளின் தடம் இன்னும் மறையவில்லை.

********************************************************************************************************************************************

திடீரென்று ஒரு குழந்தை அழுகிறது...
அய்! ஏதோ ஒரு குழந்தை அழுகிறது... என்று துணைவி மகிழ்கிறாள்.

புதிதாக ஒரு தமிழ்குடும்பம் 5வது மாடியில் குடி வந்திருக்கிறார்கள்... அதான்! குழந்தை அழுகிறது என்றேன்.

சிங்கை வந்ததிலிருந்து குழந்தையின் அழுகுரலை என் துணைவியார் கேட்கவில்லை... ஏனென்றால் இங்கே யாரும் குழந்தைகளை அடிப்பதில்லை.

என் துணைவி... மீண்டும், மீண்டும் கேட்கிறாள்... இங்கே குழந்தைகள் ஏன் அழுவதில்லை?

நினைவுகளை அசைப்போடுகிறேன்....

"அடியாத மாடு படியாது!"
"அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்த வளர்க்காத முருங்கையும்..."

இந்த உடல் மீது வன்முறையை கட்டவிழ்த்து நடத்துவதற்கு இந்த சமூகம் எத்தனைவிதமான வழக்குமொழிகள்... கைக்கொண்டுள்ளது!

*************************************************************************************************************************************************

வன்முறை உடல் மீது மட்டும் தான் நடத்தப்படுகிறதா?
உயிர் மீது, உள்இயங்கியலின் மீது வன்முறை நடத்தப்படுவதில்லையா?
நம்முடைய நினைவுகள், சிந்தனைகள், செயல்கள், எண்ணங்கள் மீதான வன்முறையை கண்டு இங்கே... குழலி குமறுகிறார்...

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

*********************************************************************************************
வீடு, கல்விக்கூடங்கள் தொடங்கி, காவல்கூடங்கள் உள்ளடங்கி உடல் மீது நடத்தப்படும் வன்முறையானது... நம்மை அச்சமூட்டி, அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்ல கட்டாயப்படுத்துகின்றன!

வருவேன்...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...2

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!


கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளையும், அதிகாரத்தையும் எழுதத்தொடங்கி... இணைய உரையாடலில்...
(அழுவது - எதிர்மறை(துன்பம்) என்றும்... புன்னகைப்பது - நேர்மறை(இன்பம்) என்றும்... கற்பிக்கப்பட்டவையே) - பற்றி
விரிந்தவை...

n - எண்ணிக்கையை குறிக்கும் குறியீடு.

ஒரு இயக்கம் அல்லது மோதல் அல்லது தாக்கம் ஆனது ஒன்று அல்லது n-புள்ளிகளில் நிகழும் பொழுது... ஒன்று அல்லது n-காரணிகளை சார்ந்திருக்கும் என்கிறது இயக்கவியல்.

உடல், உயிர், உள்இயங்கியல்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) ஏற்படும் தாக்கங்களே உணர்ச்சிகளின் ஊற்றுகண்.

இந்த தாக்கங்களையும், இயக்கவியலையும்... தொடர்புபடுத்தி பார்க்கிறேன்... ஒன்று (அ) n-வகையான (அ) n-எண்ணிகையிலான தாக்கங்களை ஏற்படுத்தும்... ஒன்று (அ) n-காரணிகளை சார்ந்த இயக்கமானது உணர்ச்சியின் உருவாக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது.

பொதுவாக கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகள் கானல்(virtual)-ஆக இருப்பதால்... தாக்கங்களை நேர்மறை, எதிர்மறை, எதுவுமற்ற புள்ளிகளில் வைத்து உரையாடுவது மிகவும் சிக்கலானதாகவும்...குழப்பமானதாகவும் இருக்ககூடும்.

உயிரியல் உணர்ச்சியாக உணரப்படும் வலி என்பதை எடுத்துக்கொண்டு... நேர்மறை, எதிர்மறை, எதுமற்ற புள்ளிகளில் எப்படி மையம்கொள்கிறது என்பதை பேசுவோம்...

வலி என்பதில் n-தாக்கங்களை விலக்கி தசைநார்களில் ஏற்படுகிற தாக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
அதேபோல் n-காரணிகளை விலக்கி சராசரியான உடல் என்பதை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

வலி என்கிற சொல்லை கேட்டவுடனே... வலிக்கிறது... எப்பொழுதும் உடலின் மீதான எதிர்மறை தாக்கத்தை கொண்டதாக உணரப்பட்டுள்ளது.

இதே வலி என்பது சில இடங்களில் நேர்மறை தாக்கமாக உணரப்படுகிறது.
எ.கா: கலவியில் ஈடுபடுகின்ற உடலானது... தசைநார்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்... அந்த கணத்தில் நேர்மறையாக உணரப்படுகிறது.

இதே வலி என்பது எதுவுமற்ற உணர்வாக... உணரப்படும்.
எ.கா: பளு தூக்கம் பயிற்சியில் ஈடுப்படுகின்ற ஒருவர்... தொடர்ந்த பயிற்சியில் தசைநார்களில் ஏற்படுகின்ற தாக்கத்தை வலியாக உணர்வதை நீக்கம் செய்கிறார்.


குறிப்பு : வெறும் பார்வைகளை முன் வைத்து எழுதப்படும் இந்த தொடரை... மேற்கோளாக எடுத்தாளுமை செய்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.


தொடரும்...

செவ்வாய், 31 மார்ச், 2009

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!

அதிகாரம் : உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) இயல்பான, தடைகளற்ற, விடுதலையடைந்த இயக்கத்தை மறுக்கும் எதையும் அதிகாரம் என வகைப்படுத்தலாம்.


உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) மீது இந்த சூழலும், வாழ்வும் ஏற்படுத்தும் தாக்கங்களின் வெளிப்பாடுகளே உணர்ச்சியாக அறியப்படுகின்றன.

உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின் மீதான தாக்கத்தை இன்பம்(நேர்மறை) அல்லது துன்பம்(எதிர்மறை) என்று இரண்டு எதிரெதிர் புள்ளிகளில் வைத்தால்... எல்லா உணர்ச்சிகளும் இந்த இரண்டு புள்ளிகளை ஒட்டியே அமைவதை உணரலாம்.

குழந்தை தாயின் உடலை விட்டு சூழலுக்கு வந்தவுடன்... சூழலால் உடலில் ஏற்ப்படும் மாற்றங்களை இன்பம்(நேர்மறை) - ஆக உணர்ந்து புன்னகைக்கலாம்... அல்லது துன்பம்(எதிர்மறை) - ஆக உணர்ந்து அழலாம். (பெரும்பான்மை குழந்தைகள் அழுவதாகவும், மிக சிறிய அளவில் குழந்தைகள் புன்னகைப்பதாகவும், எந்தவிதமான மாற்றத்தை உணர்வில் வெளிப்படுத்தாத குழந்தைகள் இருப்பதையும் மருத்துவர்கள் அவதானித்திருக்கிறார்கள்)

(அழுவது - எதிர்மறை(துன்பம்) என்றும்... புன்னகைப்பது - நேர்மறை(இன்பம்) என்றும்... கற்பிக்கப்பட்டவையே)

ஆக இரண்டு எதிரெதிர் புள்ளிகளும், அதன் மையமாக உணர்ச்சியற்ற தன்மையும் அமைகிறது.

ஆனால்... நடைமுறை வாழ்வியலில் நம்மை பண்படுத்திக்கொள்ளவும், சமூகமாக வாழ்வதற்காகவும் ஏகப்பட்ட உணர்ச்சிகளை நாம் கற்பித்துக்கொள்கிறோம்...

அன்பு, பாசம், நட்பு, நன்றி,... இப்படி ஏகப்பட்ட உணர்ச்சிகளை கற்பிக்கப்பட்டும், கற்பித்துக்கொண்டும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உடல், உயிர், உள்இயங்கியல் நேர் அல்லது எதிர் அல்லது எதுவுமற்ற தாக்கங்களை கொண்டவை.

தொடரும்...

ஞாயிறு, 29 மார்ச், 2009

இராமதாஸ் - அரசியல் - விமர்சனம்...!

ராமதாஸ் அ.தி.மு.க அணிக்கு தாவினாலும் தாவினார்... இணைய யோக்கியசிகாமணிகள் வரிந்துக்கட்டிக்கொண்டு ஏகவசனத்தில் எழுதி குவித்துவிட்டார்கள்...!

எப்படி ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன்/அவள் நலன் சார்ந்த அரசியல் இருக்கிறதோ...! அதேபோல் ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க என்கிற கட்சிக்கும் சில அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன.

1980-களில் வீரியமாக தொடங்கி "வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை!" என்று எழுச்சி பெற்ற அரசியல் கட்சி பா.ம.க

இந்த சொற்றொடரிலேயே இருக்கிறது... பா.ம.க வின் அரசியல் இலக்கு என்பது என்ன!?

ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக ஒன்றை சொல்லி வருகிறார்... "வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரத்தை அளிக்கிற எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்போம்".

ஒவ்வொரு தேர்தலின் பொழுதும்... பா.ம.க வின் இலக்கு அதிகபடியான எம்.எல்.ஏ அல்லது எம்.பி என்பதாகவே இருக்கிறது... இதன் மூலம் வன்னியர்களுக்கு அதிகபடியான அரசியல் அதிகாரம்.

ராமதாஸ் நிறுவன தலைவராக இருக்கிற பா.ம.க தனது அரசியல் இலக்கில் -(வன்னியர்களுக்கு அதிகாரம்) தெளிவாக பயணம் செய்கிறது.


அடிப்படையில் இந்த செயற்பாடானது பார்ப்பனர்களிடமிருந்து தான் தொடங்குகிறது...
திருச்சியில் நடந்த பிராமண சங்க மாநாட்டில் பேசியவர் குறிப்பிட்ட ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும் " எந்த கட்சியில் வேண்டுமானாலும் பிராமண இளைஞர்கள் இணைந்துக்கொள்ளுங்கள்... எந்த கொள்ளையுடன் வேண்டுமானாலும் இருங்கள்... ஆனால் பிராமணர்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும்!"

எவ்வாறு பார்ப்பனர்கள்... இந்துத்துவ ஆக இருந்தாலும், கம்யூனிசமாக இருந்தாலும், வேறெந்த கட்சியாக இருந்தாலும் அவர்களே தலைவர்களாக அதிகாரத்தை கைபற்றி வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களோ...!

அதே அடியையொற்றி இராமதாஸ்... தி.மு.க என்ன!? அ.தி.மு.க!? யாராக இருந்தாலும் எங்களுக்கு வேண்டியது அரசியல் அதிகாரம் என்கிற போக்கை கடைபிடிக்கிறார்!

கடந்த 5 ஆண்களில் காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கிற முடிவுகளில் கையெழுத்திடும் மத்திய அமைச்சரவையில் பா.. வின் அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தார்கள்... அதிலும் குறிப்பாக இராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி முக்கிய அமைச்சராக இருந்தார்.

ஆனால்... இலங்கை அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு இராணுவ உதவிகள் செய்வதற்கான அமைச்சரவை முடிவுகளை பற்றி கண்டும் காணாமலும் இருந்துவிட்டு...

இன்னொருபுறம் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் இரட்டை வேடத்தை தெளிவாக செய்கிறார்... "பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்!"

இணையத்தில் கலைஞரையும், தி.மு.க வையும் கிழி,கிழியென கிழித்த பல இணைய புரட்சியாளர்கள் வன்னியர்களாக இருப்பதால்... பா.ம.க வின் இரட்டை வேடத்தை மட்டும் கண்டும்காணாமல் இருந்தார்கள். இல்லையென்றால் உப்புக்கு சப்பாணியாக இரண்டு வார்த்தை பா.ம.கவை திட்டினார்கள்.

வன்னியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்...(இந்த ஒடுக்கம் பற்றி விமர்சனம் தனியாக செய்ய வேண்டும்!) அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று போராட ஆரம்பித்த ராமதாஸ் இன்றைக்கு வன்னிய சாதி அரசியல் அதிகாரத்தை முன்னிறுத்தி செயல்படுகிறார்.

இந்த ஆபத்தான போக்கை கண்டு விழித்துக்கொள்ளா விட்டால்... நாளை பெரும்பான்மை சாதிகள் மட்டுமே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.. மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக வாழ நேரிடும்...!

புதன், 25 மார்ச், 2009

மூளை-தகவல்-தரவு

மூளையிருக்கா...!?
அவரையா கேட்டாய்...!?
விரலிடுக்கில் தகவல்களை விசிறியடிப்பாரே...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
மூளை பிறழ்ந்து விட்டதா...?
இன்னுமில்லை...!

ஆதாரம் ஏதுமின்றி...
அவதூறாய் உளறுகிறாய்...!
தகவல்... தரவு கொடு...!

அவருக்கு உலக இலக்கியம் தெரியும்...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
உள்ளூர் மனிதர்களை பற்றி தெரியுமா...!?

அவர் எவ்வளவு படித்திருக்கிறார்...!
ஆகட்டும்... அதனாலென்ன...!?
கழுதை கூட நிறைய காகிதங்களை தின்கிறது...!

மூளை என்ன...!?
நினைவக பொட்டியா...!?
தகவலும், தரவும் தெரிந்தவனெல்லாம்...!
மூளையோடு இருக்கிறவனா...!?

புதன், 18 மார்ச், 2009

கூட்டம்...!

 

எதற்காக கூடினாய்...!?
யாருக்காக கூடினாய்...!?
எதைநோக்கி கூடினாய்...!?
கூட்டத்தில் கூடுதலாகி...
சுரண்டல் கூட்டத்தின்...


            சுரண்டலுக்கு கூடுதலாகி...!
சுயமிழந்தாய்...!
கூடியவரின் அடையாள(ஆதிக்க) அரசியலை
                                 அலச மறந்தாய்...!
நீ... விழிக்காததால்...
உன்னை கூடுதலாய் மட்டுமே வைத்திருக்கிறார்கள்..!

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

தமிழ் இன அழிப்புக்கு துணைப்போகும் இந்திய தரகு முதலாளிகளை அடித்து விரட்டுவோம்...!

அன்பிற்கினிய தமிழ் உறவுகளே!

ஈழத்தில் நம் உறவுகள் படும் துயரைக்கண்டு மனம் வெதும்பி வீதியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறீர்!

உம்மோடு கரம் கோர்க்க இயலாத சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்...!

நாளொரு பொழுதும் கொத்துக்கொத்தாய் கொத்துக்குண்டுகளாலும், பீரங்கிகளாலும் படுகொலை செய்யபடுகின்ற ஈழத்தமிழனுக்காய் குரல் கொடுக்க எந்த நாடும் இல்லை!

மனிதம் பேசியோர், எழுதியோர் எல்லாம் எங்கேயிருக்கிறார் தெரியவில்லை...!
அய்யகோ...! தமிழன் சாகிறான்...! என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் ஈனத்தலைமைகளால் எதுவும் நடக்க போவதுமில்லை...!

இச்சூழ்நிலையில்....

இலங்கை அரசு தமிழ் இன அழிப்பு போரை முன்னெடுக்க உறுதுணையாக... இலங்கையில் முதலீடுகள் செய்கிற, செய்துள்ள இந்திய தரகு முதலாளிகளை அடையாளம் கண்டு... தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டுவோம்!அடிமடியில் கை வைத்தால் இந்திய அரசு பணிந்தாக வேண்டும்...!இலங்கையில் முதலீடு செய்துள்ள... எனக்கு தெரிந்த சில நிறுவனங்கள்...1. ராதிகாவின் ராடான் நிறுவனம்


2. ஏர்டெல்தொழில் துறை சேர்ந்த தோழமைகள் பட்டியல் தயாரித்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்...!

தீயிட்டு கொளுத்த வேண்டியவை...

தினமலர்
இந்து
துக்ளக்

புதன், 14 ஜனவரி, 2009

அறிவாளி கொழுந்தும், நானும்... அகழ்வு ஆராய்ச்சியும்...!

 

  நம்ம ஊரு பட்டுக்கோட்டைங்கோ, அங்கன வருசத்துக்கு ஒரு முறை கலை இரவு நடக்கும். த.மு.எ.ச என்கிற அமைப்பிலிருந்து நடத்துவாங்க. பெரும்பாலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் அன்றைக்கு நடக்கும்.

இது தோழர்கள் நிகழ்ச்சி...

 

  நமக்கு கலை தாகம் எடுத்து நிகழ்ச்சிக்கு போகலாம் அப்படின்னு முடிவெடுத்து... யாரை துணைக்கு அழைக்கலாம் என்று தலையை பிய்த்துக் கொண்டதில் நம் நண்பர் அறிவாளி கொழுந்து ஞாபகம் வந்தது. ( இப்ப பானுப்ரியா, நக்மா... படம்ன்னா யாரை வேணும்னாலும் கூட அழைத்துக்கொண்டு போயிரலாம். ( பாவனா, ஸ்ரேயா ரசிகர்கள் மன்னிக்கவும். நான் இளமையாக இருந்த போது இவர்கள் தான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்).

 

  நமக்கு உள்ளூர் செய்தியே விளங்காது. இதுல இவர்கள் சீனா, ரஷ்யா , வியட்நாம், கியூபா... அப்படின்னு வெளியூர் விசயமாவே பேசவாங்க அதனால கொஞ்சம் விவரமான ஆளா இருந்த நமக்கு சந்தேகம் வந்த கேட்டுகலாம் இல்லையா...!

 

  சரின்னு கொழுந்து வீட்டுக்கு போயி வாய்யா இந்த மாதிரி கலை நிகழ்ச்சி இருக்கு போகலாமுன்னு சொன்னேன். அவனும் நீ எதுவும் கோவப்படலைன்னா! நான் வரேன் அப்படின்னு கிளம்பிட்டான். இதுவரைக்கும் பேசாததை புதுசா நம்ம கொழுந்து என்ன பேசிர போறான் அப்படின்னு நானும் கூட கெளம்பி நிகழ்ச்சிக்கு போயிக்கிட்ருந்தோம்.

எப்படியும் முழு இரவு அங்கன இருக்க போறோம் நம்ம LNB ல சாப்பிட்டு போயிரலாம் அப்படின்னு உள்ளர போயி இரண்டு ஸ்பெசல் பூரியை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்...

நான் "கொழுந்து! தேங்காய் சட்னி வைச்சு பூரி சாப்பிட்டு பாரு ரொம்ப நல்லா இருககும்"
  (கொழுந்து ஒரு நக்கல் புன்னகை பூக்க)
  என்ன?
கொழுந்து "புண்ணாக்குல செய்த சட்னி நல்லாதான் இருக்கும்!"
நான் "என்ன? என்ன?? புண்ணாக்குலய!! சும்மா நக்கலடிக்கத!"
கொழுந்து "அப்புறம் பின்னாடி போயி பாரு! நான் தான் கை கழுவும் போது பார்த்தேனே தொட்டியில தேங்காய் புண்ணாக்கு ஊறிக்கிட்டு இருக்கு!"
 

வைச்சுட்டான்யா ஆப்பு! எனக்கு சாப்பிட்டது அப்படியே கொமட்டிக்கிட்டு வந்தது. அப்படியே எழுந்து வந்து நின்னுக்கிட்டிருந்தேன். நம்ம கொழுந்து முழு பூரியையும் பட்டாணியையும் நல்ல முழுங்கிட்டு வந்தான்.

சரி தண்ணீர் குடிக்கலாமுன்னு குவளையை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வைக்க, நம்ம கொழுந்து எடுத்து குவளையை பார்க்க எனக்கு உள்ளுக்குள் அப்படியே புகைந்தது. மறுபடி ஒரு கேலி புன்னகை...

நான் "என்ன இப்போ?"
கொழுந்து

"இதுல என்ன எழுதியிருக்குனு பார்த்தியா?"

நான் "இல்லையே!"
  வாங்கி பார்க்க அதில் "இது LNB ல் திருடியது" என்று பாத்திர அச்சு பதித்து இருந்தார்கள். மறுபடி நம்ம கொழுந்து புன்னகைக்க என்னய்யா!?
கொழுந்து "சரி! சரி!! கோவப்படாத அப்புறம் பேசுவோம் வா!"
  அப்பாடி ஒரு வழியா நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போயி சேர்ந்தாச்சு. "நந்தலாலா" என்கிற பேச்சாளர் காந்தியடிகளின் குச்சிக்கு குச்சி ஐஸ் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தார். அப்படியே பேசிக்கிட்டே குஜராத் பூகம்பம், அகழ்வாராய்ச்சி எல்லாம் பத்தி பேசினார்.
நான் "கொழுந்து! நல்லா பேசறாருல்ல! "தேசம் எங்கே போயிட்ருக்குன்னு" எவ்வளவு வருத்தப்பட்டு பேசறார் பாரு!"
கொழுந்து "ஆமா! ஆமாம்! நம்ம தோழர்கள்கிட்ட கேளு போனவாட்டி எதோ காசு குறையுதுன்னு கூட்டத்துக்கே வரலையாம் !"
 

(அப்ப தான் நம்ம தோழர்கள் வேற துண்டுயேந்தி வந்துக்கொண்டிருந்தார்கள்.)

எனக்கு மண்டை குடைச்சல் என்ன நாம எதை சொன்னாலும் கொழுந்து உடனே ஒரு பதில சொல்றான். அப்புறம் என்னங்க எதுக்கெடுத்தாலும் ஒரு நொள்ளை இல்லை ஒரு சொட்டையின்னா என்ன பண்றது!

சரின்னு அப்படியே நிகழ்ச்சியை பார்த்துக்கிட்டேயிருந்தோம். நம்ம மதுரை சந்திரன் வந்தார். மக்கள் கவிஞரின் புகழ் பாடும் பாட்டு பாட ஆரம்பித்தார்...

"சும்மா கிடந்த சொல்லை எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து...

.......

......

பட்டுக்கோட்டையின் பாட்டு - அது

பதினெட்டு சுவை கூட்டு...."

அப்படின்னு பாடிக்கிட்ருந்தார்... தீடீரென்று நம்ம கொழுந்து விழுந்து, விழுந்து சிரிக்கிறான். எனக்கு சரியான எரிச்சல்

நான்

"என்ன இப்போ? எதுவா இருந்தாலும் சொல்லிட்டு சிரி!"

கொழுந்து "சரி! சரி! கோவப்படாத! இந்த 'இது LNB ல் திருடியது ', 'பூகம்பம்', 'அகழ்வாராய்ச்சி', இந்த பாட்டு எல்லாத்தையும் ஒன்னா சேர்த்தேன் சிரிப்பு வந்துருச்சு!"
நான் " இதுல சிரிக்க என்ன இருக்கு!"
கொழுந்து " ஒன்னுமில்லை தான்! இப்படி நினைச்சு பாரு இப்ப இங்கன பூகம்பம் வந்து நாடு, நகரம், மக்கள் எல்லாம் பூண்டோடு அழிந்து போயிடுறாங்க... அப்புறம் ஆயிரமோ, இரண்டாயிரமோ ஆண்டுகள் கழித்து மனிதர்கள் இந்த இடத்த அகழ்வாராய்ச்சி செய்யும் போது நீ தண்ணீர் குடித்த அந்த குவளையும், இந்த பாட்டும் கிடைத்தால்... அவர்கள் என்ன வரலாறு எழுதுவர்கள் நம்மை பற்றி என்று நினைச்சேன் சிரிச்சேன்..."
நான் "என்ன எழுதுவாங்க இந்த இடத்துல வாழ்ந்த மக்கள் எவர்சில்வர் என்ற உலோகத்தை பயன்படுத்த தெரிந்திருந்திருக்கிறார்கள். அப்பொழுது மாபெரும் கவிஞன் இருந்திருக்கிறான் அவனை பாராட்டி கவிதை எழுதி இருக்கிறார்கள. என்று எழுதுவார்கள்..."
கொழுந்து "அப்படியா!"
நான் "பின்ன வேற என்னய்யா எழுதுவாங்க!"
கொழுந்து "எனக்கு வேற மாதிரி தோணுது!"
நான் "என்ன தோணுது!"
கொழுந்து "இங்கு வாழ்ந்த மக்கள் திருட்டை தொழிலாக கொண்டிருந்தாலும்.. நேர்மையாக, நாணயமாக அந்த பொருள் எங்கே திருடப்பட்டது என்பதை அச்சிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்!" அப்படின்னு எழுதுவாங்க. அப்புறம் அந்தபாட்டுல முதல் வரியை சொல்லு..."
நான் "சும்மா கிடந்த சொல்ல எடுத்து சூட்சும மந்திரம் சொல்லி கொடுத்து....."
கொழுந்து "அக்காலத்தில் ஒருத்தர் இருந்திருக்கிறார் சொற்களுக்கே மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்... அப்படின்னுல எழுதுவாங்க!" எல்லாரும் கைத்தட்டுனாங்கல அந்த என்னமோ சுவைன்னு ஒரு வரி... அத சொல்லு..."
நான் "பட்டுக்கோட்டையின் பாட்டு - அது பதினெட்டு சுவை கூட்டு..."
கொழுந்து "தமிழ்ல்ல சுவை எத்தனைப்பா?"
நான் "ஆறு சுவைகள்"
கொழுந்து "இத படிச்சிட்டு என்ன எழுதுவாங்க அக்காலத்திலிருந்த மக்கள் பதினெட்டு சுவைகளை அறிந்திருக்கிறார்கள்" என்று அல்லவா எழுதுவாங்க..."
நான்

"இப்ப என்ன சொல்ல வர நீ!"

கொழுந்து "நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் நீயே சிந்தித்து பாரு!"
 

(இப்படியாக எங்கள் கலை இரவு முடிந்தது. விடியல் வந்து விட்டது வீட்டுக்கு போறோம்.)

Related Posts with Thumbnails