புதன், 19 செப்டம்பர், 2007

பெண்களும், சமூக மற்றும் அரசியல் அறிவும்...!

நண்பர்களிடம் அல்லது சமூக, அரசியல் பேசுகிறவர்களிடம் நான் பேச்சின் ஊடாக கேள்வியாக வைக்கிற அல்லது கவனிக்கிற கருத்து அவர்களின் வாழ்க்கைதுணை மற்றும் குடும்பத்தாருடன் தங்களின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளை பற்றி உரையாடுகிறார்களா? என்பது.

இதுவரை நான் அறிந்தவற்றை பெரும்பிரிவாக...
1. சமூக, அரசியல் பற்றி அறிவு அவர்களுக்கு தேவையற்றது. குடும்பம், உறவு என்று இருப்பதுதான் தனக்கு பிடிக்கும்.

2. அவர்களாக தெரிந்துக்கொள்வதை (அ) அவர்களுடைய நிலைப்பாடு பற்றி எனக்கு தேவையற்றது. நான் எனக்கு தெரிந்ததை செய்கிறேன் அவர்களை நான் இதில் கலந்துக்கொள்வதில்லை.

3. எப்போதாவது பேசுவதுண்டு ஆனால் பெரும்பாலும் நண்பர்களிடம் பேசுவதுபோல ஈடுபாடு வருவதில்லை.

4. நான் ஆர்வமாக பேசினால் கேட்க யாரும் தயராகயில்லை.

இப்படி பல்வேறு காரணங்கள்... எல்லாவற்றிலும் பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெறுவது மறுக்கப்படுகிறது (அ) தவிர்க்கப்படுகிறது (அ) ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

இப்போ உனக்கு என்ன வேணும்? என்று நீங்கள் குரல் கொடுப்பது எனக்கு கேட்கிறது.

இப்படி குடும்பத்தில் உங்கள் வாழ்க்கைதுணையோ, சகோதரியோ, மகளோ சமூக, அரசியல் அறிவு பெறாவிட்டால் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை பார்த்தால்...

நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தையின் திராவிடர்கழக, தி.மு.க, பொதுவுடைமைவாதி நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போயிருக்கிறேன்.

அவர்களில் பெரும்பாலானோர் மிக தீவிரமாக பொதுவாழ்க்கையில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப்பாடுகள் புரியாத காரணத்தால் கடுமையான எதிர்ப்புகள் நிலவும். அவர்களின் குடும்பத்தார் அவர்களை தேறாதவர்கள், பூட்டக்கேசு, கோயில்மாடு, இன்னும் பல வசைமொழிகளை சொல்வார்கள்.

இரண்டாவது இவர்கள் குடும்பத்தாரை ஓட்டுபோடும்போது "உதயசூரியன்" (அ) "கதிர்அரிவாள்" சின்னத்தில வாக்களிக்க சொன்னால்... மிக கருமமே கண்ணாக " இரட்டைஇலைக்கு வாக்களித்துவிட்டு, இவன்தான் வறட்டு,வறட்டுன்னு பேசி வீணா போனதில்லாம... நாட்டையும் கெடுக்கிறான் என்று வைவார்கள்.
அவர்களின் அரசியல் அறிவு சினிமாவில் பார்த்த எம்.ஜி.ஆர் நல்லவர் என்பது.

இப்படியிருக்கிற குடும்ப பெண்கள் அப்படியே நீங்கள் சமூகத்தையும்,அரசியலும் பேசாததால் முட்டாள்களாக இருப்பதில்லை...

அவர்களுக்கு பக்கத்து வீட்டிலோ (அ) பால் அங்காடியிலோ பார்ப்பானீய அரசியலை போதிக்க ஓரு பாப்பாத்தியிருப்பாள்...

சேது சமுத்திர திட்டத்தை பற்றிய செய்தி எப்படி அவர்களுக்கு போய் சேரும் பாருங்கள்...

"சீனி அம்மா! இங்கபாருங்க , இந்த வழுக்கைமண்டை யிருக்கில்லையா!"
"யாருங்க"
"அதாங்க இந்த கருணாநிதி"
"அவரா, என்னாச்சு?"
"என்னத்த சொல்லுறது எல்லாம் கலிகாலம் இராம பிரானும், ஆஞ்சநேயரும் கட்டிய பாலத்த இடிக்க சொல்லுறானாம்"
" இவனெல்லாம் நல்லகதியில போவானா?"

என்று பார்பானீய அரசியல் அறிவு அங்கே போதிக்கபடும்.

அடுத்ததாக பெண்கள் கோயிலுக்கோ (அ) பொது இடத்திலோ இருக்குமிடத்தில் அங்கே பூணூல் போட்ட பார்ப்பான் ஓருவன் நிச்சயமாய் இப்படி சொல்லுவான்...

" இவா எல்லாம் லோகத்தில் நன்னாயிருப்பாளா"
"சாட்சாத் அந்த ஆண்டவன் அமைத்த பாலமோ இல்லையோ! இடிக்கலாமா !?"

இப்படி நம்ம குடும்ப பெண்கள் சமூக,அரசியல் அறிவு பெற்றிருப்பார்கள்.

நாமெல்லாம் எழுதியும், பேசியும், களமிறங்கி போராடிக்கொண்டிருப்போம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி.

ஆனால் நம்முடைய குடும்பத்தாரையே நமக்கு எதிராக திருப்புகிற நுண்ணரசியலை மிக தெளிவாக செய்திருப்பார்கள்.



அடுத்து தீண்டாமையும் பெண்களின் சமூக,அரசியல் அறிவும்...

(குறிப்பு: எழுத மிகவும் போரடிப்பதால் அடுத்த பாகத்தில் விரிவாக...)

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

எதை எதிர்ப்பது....?

கடந்த சிலவாரங்களில் தமிழ் வலைப்பதிவுகளில் நடந்த எண்ணற்ற சச்சரவுகளில் எனக்குள் சில கேள்விகளை எழுப்பி விட்டுச்சென்றிருக்கின்றன.

அவற்றுள் மிக முக்கியமான சாதி மறுப்பு மற்றும் அதன் புனித தன்மையை பற்றியது!

முதலில் ஏன் சாதியை மறுக்க வேண்டும்?
சாதியை மறுப்பதால் ஏதேனும் புனித தன்மை கிடைக்கிறதா?
பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் பார்பானீய கட்டமைப்பிற்க்கும் சாதியை மறுப்பதால் தன்னை புனிதன் என்று கட்டமைப்பதற்க்கும் என்ன வேறுபாடு?

இரண்டாவது தோழர் என்ற விளிப்பிற்க்கு எதிரான நிலைபாடுபற்றியது

மார்க்கஸியத்தை அறிந்த புனிதர்கள் தோழர்கள் என்றால் வேதம் படித்த புனிதர்கள் பார்ப்பனர்கள் என்பதற்க்கான வேறுபாடு என்ன?

எந்த நிலையிலும் மனித சமூகத்தின் சமநிலையில் நிற்க மறுக்கிற புனித பிம்பங்களை கட்டமைப்பது என்பது...

மனிதர்களை சமநிலையில் பார்க்க மறுக்கிற பார்ப்பானீய கட்டமைப்பாகதா?

கேள்விகளுடனே...

நன்றி
பாரி.அரசு

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

மூடநம்பிக்கை எதிராக ஓரு முழக்கம் - வாழ்த்துக்கள் டாக்டர் சார்லஸ்

எப்பொழுதும் ஏதாவது வேலையினூடாக கவனிக்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் இன் "நீயா நானா" நிகழ்ச்சியும் ஓன்று... அவ்வாறு கடந்த ஞாயிறு பார்த்துக்கொண்டிருந்தபொழுது, இறுதியாக சில வாரங்களுக்கு முன்பு நடந்த "பில்லி சூனியம்" பற்றிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டாக்டர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என்று இறுதியில் காண்பித்தார்கள்.

பில்லி சூனியம் வைத்தால் ஓரு லட்ச ரூபாய் தருவதாக அந்த நிகழ்வில் சொல்லிருந்தார், 45 நாட்கள் கெடு முடிவடைந்தது... சவால் விட்ட சாமியார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

டாக்டர் சார்லஸ் ஆரோக்கியமாகவே இருக்கிறார்... அதோடு மட்டுமல்லாமல், தனது சவாலை வெளிப்படையாக எந்தவித தேதி, நேர எல்லையில்லாமல் வெளியிட்டிருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அந்த காசோலையை பெறலாம், முடிந்தால் அவருக்கு பில்லி சூனியம் வைத்து.

மூடநம்பிக்கைகளுக்கெதிரான தனது நிலையை மிகுந்த மனதுணிவுடன் வெளிபடுத்தி... அதை ஓரு சவாலாகவும் வைக்கும் டாக்டர் சார்லஸை நாமெல்லாம் வாழ்த்துவோம்.

நன்றி

புதன், 5 செப்டம்பர், 2007

விவாதம் - என்ன செய்வீர்கள்.... ?

பேசுவதும்,விவாதிப்பதும் என்னோடு உடன் இருப்பவை. நான் இருக்கிற இடத்தில் எப்போதும் இரைச்சலாகவே இருக்கிறது. முடிவில்லாமல் நீளூகிற விவாதங்கள் அயர்ச்சியை தருவதாக அங்கலாய்க்கும் நண்பர்கள் அடுத்த நாள் நான் வரவில்லை என்றால், மூன்றாம் நாள் ஏன் வரவில்லை? என்றே வினா எழுப்புகிறார்கள். விவாதங்கள் நாம் கடந்த வந்த அனுபவமாக அல்லது நாம் கற்றவையின் நீட்சியாக கொட்டித் தீர்க்கப்பட்டு முடிவில் இன்னும் கொஞ்சம் புதிய சிந்தனைகளோடு புறப்படுகிறேன் இன்னும் விவாதிக்க வேண்டுமென்கிற ஆவலோடு...

இப்படியாக ஓரு மதிய உணவு இடைவேளையில் எழுந்த கேள்வி இன்னும் நீண்டுக்கொண்டேயிருக்கிறது விவாதமாய்....

ஓர் மனிதஉயிரைக்காப்பாற்ற முடியாது, மரணம் முடிவு என்று சொல்லிவிட்டார்கள். ( அது புற்றுநோயோ அல்லது எய்ட்ஸ் ஆகவோ அல்லது வேறெதாகவோ இருக்கட்டும்)

அவ்வாறு முடிவுச்செய்யப்பட்ட மனிதஉயிர் உங்கள் உறவாகவோ (அ) நண்பராகவோ இருக்கும்பட்சத்தில்....

நீங்கள் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்தவரை போராடுவீர்களா? (அ) அவ்வளவுதான் என்று விட்டுவிடுவீர்களா?
Related Posts with Thumbnails