வெள்ளி, 30 நவம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

சமீபத்தில் மலேசிய தமிழர்கள் தாக்கப்பட்டதற்க்கு தமிழக தலைவர்கள் கண்டணம் தெரிவித்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து நண்பர் பசிலன் உடன் ஓர் உரையாடல் நிகழ்ந்தது அதன் தொகுப்பாக இங்கே எழுதுகிறேன்.

முதலில் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மியன்மார், மலாய் தீவுகள், தென்னாப்ரிக்கா, பிஜி தீவுகள், இலங்கை மலையகத்தமிழர்கள் மற்றும் ஆங்கிலேய, பிரெஞ்சு காலணிகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் யார்? அவர்கள் ஏன் தமிழகத்தை விட்டு ஓட வேண்டும்? அவர்கள் ஏன் கூலித்தொழிலாளர்களாக இடம்(புலம்) பெயர்ந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு தேடல் தொடங்கினால் மட்டுமே... சில அடிப்படை உண்மைகளை உணர முடியும்...

பார்ப்பானீயம் த்ராவிட சமூகத்தை சிதைத்து தனது பரவலை அதிகரித்து கொண்டே வந்துக்கொண்டேயிருக்கிறது, வடக்கிலிருந்து தெற்க்கு நோக்கிய பரவலில் தமிழர்களும், அதன் அரசியல் அமைப்பான மன்னாராட்சிகளும் அடிமைப்பட்டனர். ஆரிய வலையில் தமிழர்கள் வீழ்ந்து சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தமிழர்களில் மிகக்கடுமையான சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப்பட்டிருந்தது. பிறப்பால் ஓருவனை உயர்ந்தவன் என்றும் மற்றொருவனை தாழ்ந்தவன் (சூத்திரன்) என்றும் உரிமையற்ற, சுதந்திரமற்ற மனிதர்களாக(அடிமைகளாக) நடத்துக்கிற வாழ்வியல் தமிழர்களிடம் ஆரியர்களால் புகுத்தப்பட்டிருந்தது.

காலம், காலமாக அடிமைப்பட்டு கிடந்த, உரிமையற்று கிடந்த, தங்கள் உணர்வுகளை வெளியிட முடியாமல் வாடிய தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்களே ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணிகளுக்கு தொழிலாளர்கள் தேவை எனும் போது ஓடியவர்கள்!

சமூகக்கொடுமைகளிலிருந்தும், முதலாளிகளின் வர்க்க ஓடுக்கு முறையிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளவே ஆங்கிலேய காலணிகளுக்கு ஓடினார்கள்.

ஓடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பால் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்த தமிழர்கள், தங்களின் ஓற்றுமையின்மையால் அழிகிற வரலாறு தமிழர்களுக்கு புதிதல்ல :( , கருங்காலிக்களுக்கும், துரோகிகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை தமிழினத்தில்!.

தமிழர்களின் உழைப்பாற்றலை கண்டுக்கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணி நாடுகளுக்கெல்லாம் தமிழர்களை கூலிகளாக அழைத்துச்சென்றான். காடு திருத்தி கழனி அமைத்து, கோட்டை அமைத்து கொடுத்தவன் கொத்தடிமைகளாகவே வாழ்ந்தான். பொன் விளையும் மண் உருவாக்கி கொடுத்தவன், மண்ணாகி அழிவதை என்றென்று சொல்வது :( அவன் விழிக்கவேயில்லை. அவனுக்கு விடுதலை என்பது வரலாற்றில் மறுக்கப்பட்டது. (சரி! பழங்கதை பேசி பாழாய் போவதை நிறுத்தடா! என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது).


கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... இவர்களிடம் சில கேள்விகளை வலையேற்றுகிறேன்...

வியாழன், 22 நவம்பர், 2007

உடலுறவுக்கான வேட்கை, திருமணம்,குடும்பம்,உறவுமுறைகள் மற்றும் சமூக அமைப்பு...

உங்களுக்கு அழ வேண்டும் என்கிற உணர்வு எழுகிறது என்று எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு எழுவதற்க்கான உடல் இயங்கியலில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், அதை வெளிப்படுத்துவதற்க்கு உடல் இயங்கியலின் செயற்ப்பாடுகள் இரண்டும் இயல்பானது. ஆனால் அந்த உணர்வை பாதிக்கும் புறக்காரணிகள் பல இருக்கின்றன. (உதாரணத்திற்க்கு 1. அழ வேண்டும் என்று தோன்றினாலும் "ஆண்ப்பிள்ளை அழக்கூடாது" என்கிற கட்டுமானம். 2. அழ வேண்டும் என்று தோன்றினாலும் பொது இடத்தில் அழக்கூடாது என்கிற கட்டுமானம்)

இவ்வாறு உணர்வுகள் உருவாக்கதிலிருந்து, அதை வெளிப்படுத்துவது வரை இயல்பான இயங்கியலை புறக்காரணிகள் பாதிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஏற்ப்படும் இடர்ப்பாடுகளினால் உடலும், மனதும் அவதியுறுகின்றன. இதை உடல் ஓரளவுக்கு சமன் செய்யவே முயற்சிக்கிறது ( tolerance level ) தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை.

இப்படி உணர்வுகள் உருவாக்கதிலும், வெளிப்படுத்துவதிலும் ஏற்ப்படுகிற சிக்கல்கள் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை உருவாக்குகிறது. (இங்கே நான் சுட்டுகிற அளவுகோல் சமூகத்தின் இயல்பு நிலையை உள்வாங்க இயலா நிலையில் உள்ள உளவியல் பாதிப்பு.)

உடலுறவுக்கான வேட்கை என்பது உடலின் இயங்கியலில் ஏற்ப்படுகிற உணர்வு உருவாக்கம். அதை வெளிப்படுத்த சமூகத்தில் இருக்கிற தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவில் சமூகத்தில் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை நாம் உருவாக்குகிறோம் என்றே பொருள். மாறாக அவ்வாறு நடக்கவில்லை என்பது நிகழ்வு! ஆகையால் எங்கோ உணர்வானது வெளிப்படுத்தபட்டுவிட்டது என்பது உட்ப்பொருள்.

இந்த உடலுறவுக்கான வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கு மனித சமூக அமைப்பின் வளர்ச்சியில் கண்டுக்கொண்ட ஓர் தீர்வு திருமணம் என்பது. ஜமாலன் அவர்களின் பார்வையில் திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம் என்கிறார். ஏன் திருமணம் என்கிற அமைப்பு தேவைப்பட்டது?. மாறுப்பட்ட பார்வையாக (நன்றி : சுதாகர்) மனிதன் குழுவாக சமூகமாக வாழ தலைப்பட்டப்போது வலுவுள்ளவன் தனக்கு தேவையான இணையை கவர்ந்தான் (உதாரணத்திற்க்கு பழைய அரச அமைப்பில் தனக்கு பிடித்திருக்கிறது என்கிறபட்சத்தில் எந்த பெண்ணையும் அரண்மனைக்கு தூக்கி சென்றுவிடுகிற நிகழ்வுகள்). இதனால் சமூகத்தில் ஏற்ப்படுகிற நிலையற்ற தன்மையை போக்க வேண்டுமானால், இந்த பெண்ணும், ஆணும் கணவன், மனைவி என்கிற மாதிரியான அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்படியிருப்பதால் வலுவுள்ளவன் பிறருடைய இணையை கவருதல் தடுக்கப்பட்டது. அது குற்றச்செயலாகவும் சமூகத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவே "கல்யாணமான பொண்ணுடா..." என்று சொல்லாடலாக சமூகத்தில் உலவுவதை காணலாம்.

அதையே வள்ளுவர்

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு."

என்கிறார்.

வல்லவனுக்கு போக எஞ்சியதே மற்றவர்களுக்கு என்பதை தவிர்க்கவே திருமணம் என்கிற கட்டமைப்பியல் உருவாக்கப்பட்டது. அது மனிதனை உடலறவு வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கான தளமாகவும் வைத்துள்ளது. ஆக மனித சமூகம் தனக்கான ஓழுங்கை தொடர்ந்த பரிணாமத்தின் மூலமே அடைகிறது.

உடலுறவுக்கான வேட்கையை மறுத்தல் (அ) அதை புறக்கணித்து விட்டு வாழ்தல் என்பதை பேசும்பொழுது, (உதாரணமாக விவேகானந்தரை காட்டுவார்கள்...)
இங்கே இயல்பாக சில கேள்விகள் எழுகின்றன...
1. இயல்பான உடல் இயங்கியல் விவேகானந்தருக்கு இருந்ததா (any Physiology disorder)?
2. அவருக்கு ஏதேனும் உயிர்-வேதி சீரற்ற தன்மையிருந்ததா (any bio-chemical disorder)?
3. தன்னுடைய உடல் இயங்கியலை கட்டுப்படுத்த மருந்துகள் உட்க்கொண்டாரா?
இந்த கேள்விகளுக்கு விடைதெரியாமல், அவர் உடலுறவுக்கான வேட்கையை மறுத்துள்ளார் என்பதை மட்டும் முன்னிறுத்துவது தவறான வழிக்காட்டுதல்...

சமூக ஓழுங்கை கட்டமைக்கிற திருமணம் என்பதை மறுத்தால், வலுத்தவனுக்கோ (அ) வலுத்தவளுக்கோ மட்டுமே வாய்ப்பு என்கிற சமூக சமநிலையற்ற தன்மையை அடைவோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

செவ்வாய், 20 நவம்பர், 2007

விடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

முந்தைய இடுகையில் வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாகயிருக்கிறது என்பதை பேசினேன்... அதைத்தொடர்ந்து நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவற்றின் உட்ப்பொருள் முக்கியமானது...

ஓரு மனிதனின் சமூக மதிப்பீடு பொருளியல் சார்ந்த சமூக அமைப்பில் அவனுடைய பொருளாதார நிலையை வைத்தேயிருக்கிறது. கடந்த காலக்கட்டங்களில் இவ்வாறான பொருளாதார பாதுகாப்புள்ள வேலைகளுக்கு சமூகத்தில் உயரிய மதிப்பு அளிக்கப்பட்டது. (உதாரணத்திற்க்கு மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசாங்க உயரதிகாரிகள், இன்ன பிற...), அதே தானய்யா, இப்ப ஐடி வேலை பார்க்கிறவனுக்கு பொருளாதார மதிப்பு உயரும் போது, சமூக மதிப்பும் உயருகிறது. அதனால் கீழ்நிலையில் உள்ளவர்கள் ஐடி வேலைவாய்ப்பை பார்த்து பொறாமை படுகிறார்கள்!.

நிற்க, நான் வேலைப்பார்க்கும் சிங்கை நாட்டில் இந்தப்பிரச்சினை எவ்வாறு இருக்கிறது? மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் அந்த சமூக சூழலில் எவ்வாறு இருக்கிறார்கள்? பொருளாதாரம், சமூக மதிப்பு, ஓட்டு மொத்த சமூகத்தின் உறுதித்தன்மையை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மையமாக வைத்து பிறகு பேசுவோம்.

இந்த இடுகையில் பணி சூழலைப்பற்றிய உரையாடலை தொடங்குகிறேன். நான் முதலில் Fundamentals of Computer & C ஆகியவற்றை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆக CSC ல் வேலைபார்க்க ஆரம்பித்தேன். பிறகு Visual Basic Programmer ஆக மாறினேன். பிறகு JAVA Programmer, தொடர்ந்து J2ee, DB2. தற்பொழுது ORACLE & PLSQL server pages என்று கடந்த 8 ஆண்டுகளில் பலமுறை கற்றலும், தொடர்ந்து என்னை இந்த போட்டி நிறைந்த வேலையில் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஓன்று இருக்கிறது C என்று எடுத்துக்கொண்டால் அது ஓரு குழுவால் BELL lab -ல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் உருவாக்கப்பட்டது. அது பல ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் வெளியீடு அதில் 10 சதவிகிதம் கற்று தேறுவதற்க்குள்ளே, மூச்சு திணற ஆரம்பித்துவிடும். இப்படி ஓவ்வொரு மென்பொருள் தொகுப்பும் VB,JAVA போன்றவை நிறுவனங்களில் பல நூறு ஆய்வாளர்களால் உருவாக்கப்படும் வெளியீட்டை தனிமனிதன் ஓருவன் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு முயற்சியும், உழைப்பும் தேவை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியும் அதில் முட்டி, மோதி 10சதவிகிதம் தான் கற்க இயலும். இதுல கொஞ்சம் தெரிந்த பயபுள்ளைகள "அவரு அதுல புலி, இவரு இதுல கரடி!" அப்படின்னு டைய இழுத்துவிட்டுக்கொண்டே திரியுறது தான் இங்கன வாழ்க்கை.

இதுல வாடிக்கையாளரின் (client) க்கு தேவையான மென்பொருள் தொகுப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும் போதும், அந்த வாடிக்கையாளருடைய துறையின் அறிவை பெற வேண்டியது மிக மிக்கியமான வேலை (உதாரணத்திற்க்கு ஓரு வாடிக்கையாளர் வங்கி சேவையை சேர்ந்தவர் என்றால், வங்கி பற்றியும், வங்கி நடவடிக்கைகளை பற்றியும் வேறு படிக்க வேண்டும்). இதை Domain Knowledge என்பார்கள். அந்த க்ளையண்ட் -ன் துறையில் இளங்கலை பட்டம் வாங்கும் அளவுக்கு படிக்க வேண்டியதிருக்கிறது.

"புதுசு! கண்ணா! புதுசு!" அப்படின்னு தினந்தோறும் அச்சடித்த காகிதங்களை மேசை மீது நிரப்பி படி என்பார்கள். படித்து, படித்து நொள்ளை ஆன கண்ணோட வாழ்க்கையை தடவிப்பார்த்துக்கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் மன அழுத்ததின் பீறிடல் தான் சனி/ஞாயிறு (Saturday/sunday fever) கொண்டாட்டங்கள்.

சரி! இப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற சூழலில் வேலையிடம் எப்படியிருக்கிறது. Ergonomics முறையில் அமைந்த இருக்கைகளோ, மேசைகளோ வழங்கப்படுகிறதா? இல்லையே! இதனால் முதுகெலும்பில் வலி என்று வாழ்க்கையை பறிக்கொடுக்கிற இளைஞர்கள் எத்தனை பேர்! (தற்பொழுது தான் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் HP மட்டும் எர்கானமிக்ஸ் முறையில் பிஸியோதெரபிஸ்ட்களை நியமித்து இருக்கைகள் வழங்க ஆரம்பித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன).

"Are you fucking there?"
"Do you have balls with you?"

இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இவையெல்லாம் சர்வசாதரணமாக மேனேஜர் என்பவர்களால் கேட்கப்படுகிற கேள்விகள். அப்ப உள்ளறை சந்திப்புகள் (closed door meetings) எப்படி திட்டுவார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம் அவ்வளவு கேவலமாக பேசுவார்கள். இதில் சிலசமயம் பெண்கள் தப்பித்து விடுவார்கள். ஆண்கள் கதி அந்தோ பரிதாபம் :((

மேற்கத்திய நாடுகளின் வாடிக்கையாளர்கள் மிக மோசம், ஜப்பானியர்களும், கெரியா போன்ற நாடுகளின் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பரவாயில்லை என்பது என்னுடைய அனுபவம். மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்ததால் கடந்த ஆண்டு 100-க்கு மேற்ப்பட்ட தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். பலருக்கு மன உளைச்சல் இருப்பதாக ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. வேலை பளுக்காரணமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.

நீங்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் சமூகத்ததை சீரழிப்பதாக சொல்கிற ஐடி காரர்களின் பெரும்பாலோருக்கு பேருக்கு கிட்டப்பார்வை (அ) எட்டப்பார்வை கண்ணாடி மாட்டிய நொள்ளை கண்ணும். 20 சதவிகித பேருக்கு முதுகு வலியும். இரவு நேர (ஆன்டி கிளாக்) வேலை பார்ப்பதால் உயிர்மை கடிகார சிதைவு(Bio-clock disorder) , நரம்பியல் நோயும் வருகிறது. இதற்க்கான மருத்துவ செலவுகளின் தொகை அவர்களுக்கு யார்க்கொடுப்பது.

15 ஆண்டுகள் ஆட்டோகேட் - ல் வேலைபார்த்த எனது சகோதரரின் சேமிப்பு வெறும் 20 லட்சம். அவருக்கு நடந்த தண்டவட அறுவை சகிச்சைக்கு ஆன செலவு 3 லட்சம். அதை தொடர்ந்து இனிமேல் அவர் அந்த வேலையை தொடர இயலாது. அவரின் இனிமேல் ஆகக்கூடிய மருத்துவ பராமரிப்பை எவ்வாறு கவனிப்பது.

நிறைய சம்பாதிக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கிற மக்களே, உள்ளே இருப்பவனின் இழப்புகளை (உடலளவிலும், மன அளவிலும்) கணக்கு பார்த்தால். எதிர்க்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு இருள் நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தொடரும்...

திங்கள், 19 நவம்பர், 2007

வறட்டு தன்மானமும்.... சமூக அமைப்பும்...

அரச மரத்தடியில் கோயிந்தன் எள்ளும்,கொள்ளும் வெடிக்க உட்கார்ந்திருந்தான். காலையில கடைத்தெரு பக்கம் போனவன் மேலவூட்டு சின்னசாமி க்கிட்ட வாக்குவாதம் ஆகி கைகலப்பு வரைக்கும் போயி, சின்னசாமி நல்லா மொங்கி எடுத்துட்டான். அதனால கோயிந்தன் தன் காயம்ப்பட்ட முதுகை தடவிக்கொண்டே எரிச்சலில் வூட்டு பக்கம் போகமா இங்கனயே கிடந்தான். நல்லா வெயில் ஏறிக்கிட்டேயிருந்தது. ஊருல கொஞ்சம் விவரமான ஆளு நம்ம இராமசாமி அந்த பக்கமா வர...

"ஏம்பி! கோயிந்தா! என்னப்பா காலையில கடைத்தெருவுல தகராறாமே! என்ன விவகாரம்" என்றார்.

தன் காயம்பட்ட முதுகை காண்பித்து...
"ஓன்னுமில்லைண்ணே! இந்த சாமி பயல! ஏதாவது பண்ணணுமுண்ணே! " அப்படின்னு புலம்பினான்.

"இது என்னல கண்ணை கசக்கிட்டு! இப்ப டவுனுக்கு வண்டி வரும் நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு போ! அவன் மேல கேசு குடு, இடுப்புக்கு மேல காயமுல்ல பட்டிருக்கு நிச்சயம் 307 போட்டு நான்பெயிலப்புல்ல உள்ளற போட்டுருவனுக! உள்ளற கிடந்ததா தான் அவனுக்கு புத்தி வரும்" என்றார்.

"அப்படியாண்ணே நிச்சயமா உள்ளற போட்டுருவாய்ங்களா...?"

"ஆமாப்பா! கொலை முயற்சின்னு அடிச்சுச்சொல்லு என்ன!"

டவுனுக்கு பஸ் பிடித்து பயவுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு நடந்தான். கூட வந்தவர் சொன்னான்.

வேண்டாமுண்ணே ஊருல நாலு பேரக்கூட்டி என்ன ஏதுன்னு கேட்டுக்கலாம், இவிங்க கிட்ட போன ஊருவிக்கிட்டு விட்டுவுறுவானுவ... சொல்லுறதக்கேளு!

சும்மா வாப்பா! இராமசாமி சொன்னப்படி அவன உள்ளறப்போட்டாத்தான் மனசு ஆறும்.

உள்ளே நுழைகிறார் கோயிந்தன். வாசலில் ஏட்டய்யா மறிக்கிறார். சட்டை கிழிந்து கொஞ்சம் ரத்தக்கறையோட வந்தா என்ன விவகாரம் என்பதை மோம்பம் பிடித்துவிட்டார்.

"வாய்யா என்ன விவாகரம்! இதே பொழப்பா போச்சு உங்க ஊருக்காரனுவகளுக்கு, என்னய்யா நினைச்சிட்டிருக்கீங்க... இங்கேயிருந்து 30 கி.மீட்டருல்ல ஊரு, நாங்கென்ன இன்ஸ்பெக்டரா வண்டி வச்சிருக்க, இருக்கிற சைக்கிள்ல இங்கேயெல்லாம் எத்தனவாட்டி வரது...!"
அவரு பிரச்சினையை அவர் கொட்டித்தீர்த்தார்.

"யோவ்! ஏட்டு இன்னய்யா சத்தம்!" என்று வந்தார் ரைட்டர்

"முதுகுல அடிப்பட்டதுக்கெல்லாம் 307 போட முடியாதுய்யா! கூப்புட்டு ரெண்டு சாத்து சாத்தி அனுப்பி வுடு!"

நம்ம கோயிந்தன் விடாப்புடியா கொலைமுயற்சியில் நிற்க...
ஏட்டும், ரைட்டரும் கலந்து பேசி...

"சரி! சரி! ஓரு 2000 த்த கொடு நான் ரைட்டருக்கிட்ட பேசி! எப்.ஐ.ஆர் போடச்சொல்றேன்!"
"ஏட்டய்யா! எதுக்கு 2000"

"யோவ்! இங்கேயிருந்து உங்க ஊருக்கு எப்படி போறது காரு எடுக்கணும்!

அப்புறம் ரைட்டர கவனித்தால் தான் 307 போடுவார் அப்புறம் பார்த்துக்கப்பா!"

இரண்டாயிரத்த கொடுத்து ரைட்டர் 307 கேசு எழுதின பிறகு, கார் எடுத்து ஏட்டய்யா கூட்டிக்கினு ஊருக்கு வந்தால்...

சின்னசாமி வூட்ல இல்லை... ஏட்டய்யா அவன் பெண்டாட்டிய மிரட்டி வந்தவுடன் ஸ்டேசனுக்கு வரணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்...

கோயிந்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை, அப்பாடி சின்னசாமி உள்ளற போனாத்தான் தன்னோட மானமே காப்பாற்றப்பட்டதாக கனவு காண ஆரம்பித்தான்.

தொடரும்...

நன்றி கரு : சுதாகரன்

ஞாயிறு, 18 நவம்பர், 2007

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

நண்பர் ஜமாலன் உடல் அரசியல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது வாசிக்க ஆரம்பித்தவுடன் அப்பப்ப தலையில் ஓன்றொன்றாக விழுந்துக்கொண்டிருந்த முடி, மண்டை சூட்டில் கொத்துக்கொத்தாக விழ ஆரம்பித்தது :)) ( ஏன் இப்படி மொட்டை தலை மாதிரி முடிவெட்டி இருக்கிறீர்கள் என்று கேட்டீர்களே கோவி, ரகசியம் புரிகிறதா நீளமா இருந்தா முடி கனத்தில் மிஞ்சமிருக்கும் முடியும் கொட்டிவிடும்), சரி நமக்கு பிடித்த, ரசித்த வரிகளை தொகுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினால், அவர்கள் எனக்கு ஏதோ ஆகி விட்டதாக துக்கம் விசாரிக்கிறார்கள். அப்படி போயிட்டிருக்கு கதை... சரி! ஜமாலன் அவர்களாவது இந்த தோலை பற்றிய அரசியலை எழுதுவார் என்று பார்த்தால், ஓன்றும் நடக்கிற மாதிரி தெரியலை...

சரி! நமக்கு தெரிந்த அறிவியலை வைத்துக்கொண்டு, இது நிறமி செல் அப்படின்னு ஆரம்பிக்கலாம் என்றால்... வவ்வாலை நினைத்தால் பயமாகயிருக்கிறது, எங்கேயாவது தேடிப்பிடித்து படித்துவிட்டு, இங்கன வந்து தலைகீழாக தொங்குவார்.

அட நம்ம பைத்தியக்காரனாவது சிலருக்கு வைத்தியம் பார்ப்பார் என்றால், அவர் முகவரியை தொலைத்துவிட்டார் போலிருக்கு தமிழ்மணம் பக்கமே காணோம்.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான், நமக்கு தெரிந்த தோல் அரசியலை நிகழ்வுகளாக சொல்லலாம் என்று நினைத்தேன்.

ராஜீவ்காந்தி ஓரு முறை அறந்தாங்கி வழியாக காரில் பயணம் செய்தபொழுது, சாலையோரத்தில் நின்ற ஓரு பெண்மணி சொல்லியது "என் ஓட்டு இந்தபுள்ளைக்கு தான், கையப்பாரேன் ரோசாப்பூ கலருல தகதகன்னு இருக்கு!" , இப்படியாக அன்றையிலிருந்து இன்றைய நாளது வரை முகத்தோற்றமும், உடல் தோலின் நிறமும் அரசியலில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

மஞ்சக்கலரு எம்.ஜி.ஆரும், சிவப்பு கலரு ஜெயலலிதாவும் இந்த தோலை வைத்துக்கொண்டு தமிழக அடிமட்ட மக்களை ஏமாற்றிய வரலாற்றை மீண்டும், மீண்டும் நாம் வாசித்துக்கொண்டு தான் காலில் விழுந்துக்கிடக்கிறோம்.

சிவப்பு தோலின் அரசியலை முருகன்-வள்ளி, தெய்வானை வரலாற்றின் ஊடாக மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். சிவப்புகலரு தெய்வானை பொண்டாட்டி ஆகி, உண்மையான பொண்டாட்டி வள்ளி சின்ன வூடு ஆக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல த்ராவிட மக்களின் சமூக, அரசியல் சிதைக்கப்பட்ட வரலாறு முழுக்க இந்த சிவப்பு கலரு கலந்தேக்கிடக்கிறது.

மிக ஆழமாக அரசியல் பேசுகிற நண்பர் ஓருவர், தான் சந்தித்த வெள்ளைக்காரனை பற்றிச்சொல்லும் போது, வெள்ளைக்காரன் ஏன் பொய் சொல்ல போறான் அப்படிங்கிறார்?வெள்ளை நிறம் கொண்ட யாரும் பொய் பேச மாட்டார்கள் என்கிற பிம்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

நம்ம பய புள்ளைக பொண்ணு பார்க்க போனாக்கூட அவனுக்கு இப்படிதான் சொல்கிறார்கள் "பொண்ணு சுண்டினா இரத்தம் வரும் அப்படி ஓரு கலரு", நம்ம பையன் சுண்டி,சுண்டி ப்ளட்பேங்க் வைக்க போறான என்ன? தெரியலையேப்பா...!

இந்த அரசியலின் நீட்சி இன்றைக்கு பெண்களுக்கு அழகு என்பது வெள்ளை/மஞ்சள்/சிவப்பு நிறத்தோலே என்கிற பிம்பம் கட்டுமானமாக சமூகத்தில் நிலவுகிறது.

ட்ாரிக் முல்லா ஓரு மலேசியன், சில கோடிகள் அளவுக்கு மனித வள (manpower) வணிகத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பங்களா தேஷ் போன்ற இடங்களில் ஏமாற்றியவன். இவனை மலேசியாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, தான் ஏமாந்துப்போன பணத்தை திரும்ப வாங்க நண்பர் ஓருவர் முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அப்போது இவனுக்கு பாதுகாப்பிற்க்காக பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார் நண்பர். அங்கே ஓர் அறையில் தங்க வைத்திருந்தோம். அதுவொரு விடுதி. அதன் கீழே ஓரு பெட்டிக்டை இருந்தது.

ஓரளவுக்கு பிரச்சினை தீர்ந்தவுடன் சென்னைக்கு கிளம்பிய போது அந்த கடைக்காரர் வந்து நின்றார். கிட்டதட்ட 900 ரூபாய்க்கு மேலாக கடனாக இவனுக்கு சிகரெட் கொடுத்துள்ளார். நான் கேட்டேன் ஏன்னய்யா 25 வருடங்களாக இதே ஊரில் இருக்கிற நான் 1 ரூபாய் அப்புறம் தருகிறேன் என்றால் முகத்தை காட்டுகிற நீ! எப்படிய்யா! இவனுக்கு இவ்வளவு ரூபாய்க்கு சிகரெட் கொடுத்த என்றால், வெளியூரு வெள்ளைக்காரர் ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கை என்றார்!

நான் இப்படித்தான் சொல்லிவிட்டு வந்தேன்! அப்படியாங்க! அவன் ஏற்கனவே பல கோடி பல பேருக்கு கொடுக்கணும், எல்லா பயபுள்ளைகளும் வெறியோடயிருக்காங்கய்க! நீயும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துக்க!

தோலின் நிறத்தால் நடக்கிற சமூக, அரசியலை பெரிய தலைகள் யாராவது எழுதுவார்கள், நமக்கு தெரிந்ததை நான் மொக்கை போட்டிருக்கேன். நான் ரெடி அடுத்த படத்துல இன்னும் கொஞ்சம் சிவப்பான கதாநாயகியின் மீதான தேடலை தொடர...!

செவ்வாய், 13 நவம்பர், 2007

பேசுவதும், எழுதுவதும் தொழிலா?

பரபரப்பு தலைப்புகள் வைத்து... மயிர்புடி சண்டை நடத்திக்கொண்டிருந்த பதிவர்களை கண்டு கடுப்பாகிய தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பகுதியை தூக்கி கடைசில் போட்டார்கள். முகப்பிலேயே பரணை காட்டினார்கள்... அப்படி பரணில் கடந்த வாரம் நான் வாசித்த ஓர் இடுகை உஷா எழுதிய 'எழுத்துவியாபாரிகள்'...

அதில் அவர் எழுதிய கருத்தாக்கம் என்பது அவருடைய நிலைப்பாடாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் பதிவுலகில் எழுதி கூட்டம் சேர்த்து அதன்மூலம் புகழடைந்து வெகுமக்கள் அச்சு ஊடகத்திற்க்கு எழுதச்செல்ல வேண்டும் என்பது அவரின் இலக்காக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தின் ஊடாக! , அப்பதானே நாலுகாசு பார்க்கலாம் :( , பதிவில் எழுதிக்கொண்டிருக்கிற பலருக்கு இதே எண்ணவோட்டம் இருக்கலாம். பரபரப்பாக எழுதுவது, தனக்கென்று ஏதாவது ஓரு இயத்தில் அடையாளம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூட்டம் சேர்ப்பது, உணர்ச்சியில் கொப்பளித்து பொங்கி வெடிப்பது!, குழுவாக சேர்ந்து தனக்கு விளம்பரம் தேடுவது, இதன் எல்லாவற்றின் இலக்கு ஊடகத்துறை, அங்கே நகர வேண்டும்... அதன்மூலம் காசு பார்க்க வேண்டும், தன்னை எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை இலக்கு உள்ளுக்குள் இருக்கிறது. இதனால் நமக்கு எந்த வருத்தமோ (அ) அவர்களின் மீது தனிப்பட்ட வெறுப்போ கிடையாது.

ஆனால் பேசுவதும், எழுதுவதும் தொழிலா? என்கிற கேள்விக்கு என்னுடைய பார்வையிலிருந்து சில விளக்கங்கள் தர வேண்டும் என்று இங்கே முயற்சிக்கிறேன். அதில் உங்களுக்கு வேறு பார்வைகள் இருக்கலாம்! தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வனங்களில் விலங்குகளாய் திரிந்துக்கொண்டிருந்த மனிதன், முதலில் விலங்குகள் மாதிரியே ஓலிகள் மற்றும் ஓசைகள் மட்டுமே எழுப்பத்தெரிந்திருந்தான். அவனுடைய தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அடைந்த இடமே ஓலிகளுக்கும், ஓசைகளுக்கும் வரி வடிவம் கண்டான் அவற்றை எழுத்துக்கள் என்கிறோம்.

என் தந்தை ஓர் செய்தி சொன்னார் மனித உயிரின் முதல் ஓலி 'அ' என்பதும், உயிர் வெளியேற துடிக்கும் மெய்யின் கடைசி ஓலி 'ம்' என்பதும் ஆகும் என்பார். அதனாலேயே 'அம்' என்கிற சொல் மனித உயிருக்கு வடிவம் தருகிற தாயை குறிக்கிறது என்பார். (சோதித்து பாருங்கள் மிகுந்த நோயுற்று உயிர் துடிக்கும் உடலை தொடுங்கள், அவர் மிகுந்த முனகலாக 'ம்' என்று என்று ஓலி எழுப்புவார்). அவ்வளவு நுட்பமானது ஓலிகள்.

எழுத்துக்கள், வார்த்தைகள் எல்லாம் உருவாகிக்கொண்டிருக்கிற காலப்பயணத்தில், மனிதன் பேச முயற்சித்துக்கொண்டிருந்தான். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். பேசினான், பேசுகிற சொற்களுக்கு பொருள் கண்டான். பரிணாமம் அடைந்துக்கொண்டேயிருந்தான்.

சமகாலத்தில் எல்லா மனிதர்களுமே பேசினார்கள், எல்லோருக்குமே பேச தெரிந்திருந்தது. ஆனால் எங்கேயோ ஓரிடத்தில் தான், நான் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்கிற நிலைக்கு மனிதர்களை கொண்டு போனார்கள். அது எப்படி நடந்தது?

அது தான் மனிதன் சமூகமாகவும், குழுவாகவும் வாழமுயற்ச்சித்தப் போது ஏற்ப்பட்ட நிலை. வலுவுள்ள மனிதன் மற்றவர்களை ஆளுமை செய்ய முயற்சித்தான். அப்போது அவனுக்கு தெரிந்தது எல்லாம் உடல் வலுவால் சண்டையிட்டு மற்றவர்களை வெற்றிக்கொள்வது. சமூக வளர்ச்சி அதிகரித்து மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது எல்லோரையும் சண்டைப்போட்டு வெற்றிக்கொண்டு தன்னை தலைவனாக நிலைநிறுத்திக்கொள்வது அவனுக்கு கடினமாக தெரிந்தது.

அதனாலேயே அவன் மனித இனத்தின் பரிணாமம் பேசுவது அதையே பயன்படுத்தினான். அறிவிப்பாளர்களை நியமித்தான் "இவர் தான் உங்கள் தலைவர், கடவுளின் வடிவம்!" இதையே தொடர்ந்து பேசு என்று பணித்தான். தொடர்ந்து இதையே மனிதச்சமூகத்தில் பேசினார்கள். இயல்பாக சிந்திப்பதை தடை செய்து, எதிர்ப்பை மழுங்கடிப்பது!. இதில் பெரிய அளவில் வெற்றிக்கிட்டியது. இப்பொழுது தலைவனானவன் மிகக்குறைந்த எதிர்ப்பை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. (இதையே உளவியலில் தொடர்ந்து பேசுவதன் மூலம் ஓர் கருத்தை சிந்தனையில் ஏற்றுவது என்பார்கள்). கிராம வழக்கில் "ஏலேய்! அவன் விவரம்! பேசி, பேசியே ஆள கவுத்துடுவான் பார்த்துக்க! " என்பார்கள்.

நாளடைவில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்க்கு பேச்சு என்பது மிக முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அப்படி அதிகாரத்திற்க்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொன்னும்,பொருளும் வழங்கப்பட்டது. அதுவே பேசுவது என்பதை தொழிலாக மாற்றியது.

பேசுவது என்கிற ஆயுதம் அதிகாரத்தை மறுப்பவர்களுக்கு பயன்பட்டது. அதனாலயே பல்வேறு சமூக அமைப்பில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதை வரலாறாக படித்திருக்கிறோம். நடைமுறையில் தற்போது சிங்கையில் பொதுக்கூட்டம் போட்டு பேசுவது என்பது அரசு அதிகாரத்திடம் ஓப்புதல் வாங்கிய பிறகே நடைபெற முடியும். அதுவும் என்ன பேச போகிறீர்கள் என்பதை முன்பே எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கியே பேச முடியும்.

ஆக மனிதனின் இயல்பான பரிணாமம் ஆன பேசுவது என்பது அதிகாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட போது தொழிலாக மாறிப்போனது. அதை இன்றைக்கும் பார்க்கலாம் ஓவ்வொரு அரசியல் கட்சியும் பேச்சாளர்களை வைத்திருப்பார்கள், அவர்களின் வேலை மனிதர்களின் சிந்தனையில் அவர்களுடைய கருத்தை பேசுவதன் மூலம் ஏற்றி, அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கம்.

தொடரும்...

திங்கள், 12 நவம்பர், 2007

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் வாடகை 2500 எல்லாம் சேர்த்து மாதம் 3000 வரும். அங்கே இருந்த நண்பர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள், சிலர் வேலை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் மாத வருவாயின் சராசரி 3000 தாண்டாது. ஐந்தாறு போராக இருந்தார்கள். இது 2005 மார்ச் வரையிலான காலக்கட்டம். நான் சிங்கைக்கு வந்து சில மாதங்கள் கழித்து நான் தொலை பேசிய போது அருகாமையில் இருக்கிற வீடு விலைக்கு வருகிறது நீ வாங்கு வசதியாகயிருக்கும் என்றார்கள். எவ்வளவு விலை? என்றேன் 27 லட்சம் சொல்கிறார்கள் என்றார்கள். வேண்டாம்ப்பா இப்போ முடியாது. பிறகு பார்க்கலாம் என்று சொல்லி விட்டுவிட்டேன். ஓர் ஆண்டு கழித்து சென்னைக்கு செல்வதற்க்கு ஆயத்தமான போது, நண்பர்களை தொடர்புக்கொண்ட போது அவர்கள் அங்கேயில்லை என்றார்கள் ஏன்? என்னவாயிற்று? என்றேன். அந்த வீட்டிற்க்கு அடுத்த வீட்டை 10,000 ரூபாய் வாடகைக்கு யாரோ ஐடி பசங்களுக்கு விட்டிருக்கிறார்கள். உடனே இந்த வீட்டு ஓனரும் 10,000 கொடுங்க இல்லையின்னா காலி செய்யுங்க என்று சொல்லியிருக்கிறார். வேறு வழியில்லாமல் காலிச்செய்து விட்டு கிளம்பிருக்கிறார்கள். சரி முன்னாடி விற்பனைக்கு வந்த வீடு என்னவாயிற்று என்று விசாரித்தால் அதை ஓன்னேகால் கோடி என்று விலை சொன்னார்கள்!

இந்த அதிர்ச்சி ஓர் ஆண்டுக்குள் சமூகத்தில் ஏற்ப்பட்ட பொருளியல் வேறுபாட்டுக்கு தகவல் தொழில்நுட்ப துறைதான் காரணம் என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டு, மிகப்பெரிய சிந்தனை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

துறையின் உள்ளேயிருப்பவர்களும், வெளியே சமூகமும் மிக மேசமான சிந்தனைப்போக்கில் இருக்கிறார்கள். இவன்களால் தான் விலையேற்றம் என்கிற குற்றச்சாட்டும். என்னய்யா மிஞ்சுது உங்களை விட சில ஆயிரம் மட்டுமே அதிகம் என்கிற பதில் ஆதாங்கமும் மேலும், மேலும் வலுக்கிறதே தவிர... பிரச்சினை என்ன என்பதை பற்றி ஆய்வுச்செய்ய யாருக்கும் மனம் இல்லை.

முதலில் தகவல் தொழில்நுட்பத்தின் வேலைவாய்ப்பு பற்றிய சரியான அறிவின்மையை ஓத்துக்கொள்ள வேண்டும். பலருக்கு இதில் வேலைப்பார்ப்பவர்களின் உண்மையான நிலை தெரியாது. நான் என்னையும், என்னை சுற்றியுள்ள அமைப்பையும் உங்களுக்கு சரியான அறிவை ஏற்படுத்துவதன் மூலமே உங்களுக்கு என்னுடைய பிரச்சினையை பற்றிய உண்மை நிலை தெரியும். இங்கே தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என் நோக்கம்.
பிரச்சினைகளை புரியவைப்பதற்க்கான முயற்சி அவ்வளவே!

இங்கே நேரிடையாக ஓரு நிறுவனத்தில், அதனுடைய தகவல் தொழில்நுட்ப துறைக்கு வேலைக்குச்செல்பவர்கள் (உதாரணத்திற்க்கு BSNL - அதனுடைய ஐடி துறைக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல்..) வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதுதான் நிலை. (அப்ப நீங்களெல்லாம் எப்படிய்யா வேலை பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்பீர்களே!)

கீழே உள்ள பட்டியல் சில விளக்கங்கள் தரும்.
IT Professional = தகவல் தொழில்நுட்ப வல்லுநர் = ஓப்பந்த கூலி தொழிலாளி
Consultancy = தகவல் தொழில்நுட்ப நிறுவனம் = மாமாக்கள்
Client / Customer = பயனாளர் = முதலாளி (அ) ஏமாற்றுக்காரன்

ரொம்ப சிம்பிள் ஓரு பாலியல் தொழில் போல மணிக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொழிலாளி (Man Hour (or) Man Day) , முதலாளிகளுக்கு ஏவல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறான். அதை கன்சல்டன்ஸி என்கிற அமைப்பில் இருக்கிற மாமாக்கள் வாங்கி, தங்களுக்கு வேண்டியதை சுருட்டிக்கொண்டு மிஞ்சும் சில்லறையை தொழிலாளிக்கு கொடுக்கிறான். (அப்படியே ஓரு விலை நிர்ணயம் செய்யப்பட்ட பெண் எப்படி பொருளீட்டுகிறாளோ அதை போலவே!)

இந்த மாமாக்களில் பெரிய மாமாக்கள் (TCS,CTS, Polaris, etc...) உண்டு. சிறிய மாமாக்களும் உண்டு.

அயோக்கியதனத்தின் கூடாரமான முதலாளித்துவமும், அதன் அடிவருடிகளும் என்ன செய்வார்கள். எப்படி ஏமாற்றுவது? என்பது தான் அடிப்படைக்கொள்கையாகயிருக்க முடியும். அப்படிப்பட்ட முதாலளித்துவ நாடுகள் தான் தகவல் தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றன.

தங்களுடைய நாட்டில் ஏற்ப்படும் பொருள் செலவை குறைத்து, உலகின் வேறெங்கேயோ கிடைக்கிற மனிதவளத்தை சுரண்டி, தங்களை வளர்த்துக்கொள்வது.

இந்த துறையில் சில தேவைகள் ஏற்ப்படும் போது தேவைப்படும் மனிதவளத்தை இந்தியா, சீனா மாதிரியான நாடுகளிலிருந்து சுரண்டுகிறார்கள். தேவை தீர்ந்தவுடன் அவர்களை அதோகதியாக விட்டுவிடுவார்கள். (உதாரணத்திற்க்கு கணினி மயமாக்கல் அதன் உயரெல்லையை 2000-ம் ஆண்டு தொட்டப்போது ஏற்ப்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு (Systemized was touched its saturation point)).

இப்போதிருக்கும் வலைப்பின்னலில் தகவல் தொழில்நுட்பமும் அதன் உயரெல்லையை தொடும்போது (Networked Systems will touch its saturation point) மீண்டும் வேலைவாய்ப்பு இழப்பு இருக்கும் (இது எதிர்பார்க்கபடுகிற ஆண்டு 2011).

இப்படி நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு என்கிற உண்மையை முதலில் உணர்ந்தால் மட்டுமே. தொடர்ந்து பேசுவது சாத்தியமாகும்.
தொடரும்...

குறிப்பு : விவாதத்தின் தொடக்கமாக வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பேசியிருக்கிறேன்.. மற்றவை தொடருவேன். இதை ஓட்டிய விவாதத்தை வரவேற்கிறேன்.

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை...1

கற்றது தமிழ் எம்.ஏ. பற்றிய விவாதம் தொடங்கியது என்பதை விட அதில் சுட்டப்பட்ட தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் என்கிற நிலையில் எங்களுடைய விவாதம் மையம் கொண்டது.

படத்தை பொறுத்த வரை கரு என்பது பன்முகத்தன்மையுடன் இருந்தது. படத்தின் மைய கதாபாத்திரம் உளவியல் பாதிப்படைந்த நபராக கட்டமைக்கப்பட்டதுபோல் ஓரு வகை தன்மையும். சமூகத்தின் வர்க்க ஏற்றதாழ்வுகளால் பாதிப்படையும் மனிதனாக இன்னொரு தன்மையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கதையின் கரு பல மையங்களில் சுழன்றதாலே, கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளதான எடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இயக்குநர் விஜயன், தற்போது இயக்குநர் பாலா போன்றோர்... உளவியல் சார்ந்த திரைப்படங்களை வெற்றிகரமான படைப்பாக செய்திருக்கிறார்கள். அப்படி இந்த படமும் உளவியல் சார்ந்த படமாக அன்புக்கு ஏங்கும் ஓரு இளைஞன் என்கிற மாதிரியாக பயணப்படுகிறது... ஆனால் ஆங்காங்கே இந்த மையத்தில் இருந்து விலகி நன்கு படிக்கும் மாணவன் தமிழ் படிக்கிறான், அவன் மீதான சமூக தாக்கங்கள் என்று வேறு மையத்திற்க்கு தாவி பயணப்படுகிறது... அங்கேயும் தொடராமல்... திடீரென தகவல் தொழில்நுட்ப துறையால் ஏற்ப்பட்ட வர்க்க வேறுப்பாட்டை மையமாக கொண்டு சிறிது நேரம் சுழல்கிறது... இப்படி ஓரே களத்தில் பல்வேறு மையங்களில் கதையை சுழலவிட்டதால் என்னதான்ய்யா சொல்ல வருகிறார் இயக்குநர் என்று பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தருகிறார்.

ஊடகத்தின் வழியாக நாயகன் கொலைகளுக்கு விளக்கம் கொடுப்பதும், அதைப்பற்றிய பொதுமக்களின் கருத்துகளும் ஓற்றை வரி குற்றச்சாட்டாக தகவல் தொழில்நுட்ப துறையை நோக்கி நீண்டது இயக்குநரின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

இயக்குநரின் சிந்தனையில் சமூக அக்கறையும், மனிதர்களை பற்றிய உளவியல் பார்வையும் இருக்கிறது, ஆனால் படைப்பு வெளியில் வரும்போது திடீர், திடீரென வேறு, வேறு மையங்களில் நகரும் போது பார்வையாளனை தேவையற்ற வெறுப்புக்குள்ளாக்குகிறார்.

நல்ல படைப்பிற்க்கான முயற்சி...

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் துறைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விவாதித்தோம்... அதன் தொகுப்பு அடுத்து....

ஞாயிறு, 11 நவம்பர், 2007

வருக... வருக... அறிமுகம் - பசிலன்!

http://pasilan.blogspot.com/

தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார். இன்னும் தமிழ்மண நிர்வாகம் இணைப்புக்கொடுக்கவில்லை. இருப்பீனும் நண்பரை வரவேற்ப்போம்!.
பசிலன்... சொல்லே சொல்லும் இவரின் வாசிப்பின் வீச்சை, மிக நீண்டக்கால நண்பர்... பதிவுலக்கிற்க்கு வருகிறார்.

மிக ஆழ்ந்த அவதானிப்பின் ஊடாக அரசியலை அணுகுபவர். இவருடன் உரையாடும் போது சரியான தகவல்கள், புள்ளிவிவரங்கள் இல்லையென்றால் அமைதியாக இருப்பது நலம்! இல்லையென்றால் வாங்கிக்கட்டிக்கொள்ள முடியாது!.

இந்திய பார்ப்பானீய அரசியலின் இருண்டப்பக்கங்களை தனக்கே உரித்தான நக்கலுடன் கிழிப்பார் என்கிற எதிர்ப்பார்ப்புடன்....
வருக... வருக....

விடுமுறை...1

விடுமுறை என்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது. அதுவும் மிகவும் அளவெடுத்த ஆண்டுக்கு 8 அல்லது 9 நாட்களே அரசு விடுமுறை என்கிற நாட்டில், விடுமுறைக்கான காரணத்தில் நமக்கு முரண் இருந்தாலும் (தமிழர்களே இந்தியாவின் அடையாளமாகயிருக்கிற, தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிற நாட்டில், தமிழர்களின் விழா பொங்கலுக்கு விடுமுறை கிடையாது ஆனால் ஆரிய விழாவான தீபாவளிக்கு விடுமுறை இதுவே முரண்).

விடுமுறை கிடைத்ததே என்கிற மகிழ்ச்சியில் காரணத்தை மறந்து விட்டோம். அதிரும் அதிகாலை நேர எச்சரிக்கை ஓலிகள் கிடையாது (அறையில் விடியற்காலை 6 மணியிலிருந்து அடிக்கும், ஆனாலும் விழிப்பிற்க்கு மட்டும் 7.30 க்கு மேல் தான் மனம் இடம் கொடுக்கும், அப்படியும் நாள்தோறும் நேரக்காட்டிகளை அமைப்பதற்க்கு தவறுவது கிடையாது.). விரைவான காலை நேர ஆயத்தங்கள், தவற விடுகிற மின்சார ரயில்கள் எதுவும் கிடையாது. இதயம் மென்மையாக துடிக்கிறது, இன்றைக்கு விடுமுறை. அதிகாலை 11 மணிக்கு மேலாக எழுந்தால் நலம் என்கிறது மனது.

சென்னையில் இருந்த காலத்திலிருந்தே விழாக்கள், விடுமுறைகள் என்றால் நண்பர்கள் எல்லோரும் அறையில் ஓன்றுக்கூடி கொண்டாடுவது தான் வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி, சிடி (தற்பொழுது டிவிடி) இருக்கும். பார்க்காத படங்கள், பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்த படங்கள் என்று எல்லாம் வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு அது நான்கு, ஐந்து நாட்கள் வரை நீளும்.

எந்த கேள்வியுமற்று வேண்டியதை உண்டுக்கொண்டும், விரும்பியதை பார்த்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் சில நாட்கள் பூட்டிய அறைக்குள்ளே வாழ்வது ஓரு மயக்கமான வாழ்க்கை, அது மிகவும் மனதுக்கு நெருக்கமானது.

இந்த ஆண்டும் அப்படித்தான், ஆனால் பழைய நண்பர்களில் சிலருக்கு புதிதாய் திருமணமாகி இருந்தது. அவர்கள் தங்களுடைய துணைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருவதற்க்கே மதியம் 3 மணி ஆக்கிவிட்டார்கள். ஓருவர் நான் வரலையப்பா என்றார் (பாவம் அவருக்கு என்ன துன்பமோ!:))). அந்த சகோதரிகள் எனக்கு நிறைய புகழ்மாலைகள் தந்திருப்பார்கள், ஆனாலும் நானென்ன புகழுக்காக அலைபவனா! இல்லை அதற்க்காக கடமை மறப்பவனா!

சென்னை வரை நமக்கு அறிமுகமின்றி இருந்த மது, சிங்கைக்கு வந்த பிறகு ஓன்று கூடல் நிகழ்ச்சிகளில் சிறிது சிறிதாக அறிமுகமாகி, இன்றைக்கு தவிர்க்க இயலாத வாழ்வியலாக மாறியிருக்கிறது. அப்படியாக பார்லியில் வடித்த நீர் சில டஜன்களுடன் இந்த விடுமுறையும் தொடங்கியது.
புதிதாய் சந்தைக்கு வந்த சில மொக்கை படங்கள் இரவெல்லாம் ஓடிய பிறகு, தீபாவளி மதியம் "கற்றது தமிழ் எம்.ஏ..." பார்க்க தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சி பட்டிமன்றம். தொடர்ச்சியாக வேறு சில நிழற்படங்கள் என்று முழு நீளமாக ஓடிக்கொண்டேயிருந்தது... விடுமுறை நாட்கள்.

இதில் மிகப்பெரிய விவாதமாக பட்டிமன்றமும், கற்றது தமிழ் எம்.ஏ வும் பல மணி நேரங்கள் நீடித்தது...
தொடரும்...

புதன், 7 நவம்பர், 2007

அடுக்களை முனகல் அரசியலை விட்டொழி!

எழுத்தின் ஊடாக உள்ளடி அரசியல் செய்வது... குறிப்பாக ஓரு தளத்தில் நின்று அரசியல் பேசுகிறவரை எதிர்க்கொள்ளாமல், அப்புறமாக எங்கெல்லாம் சந்துக்கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிந்து பாடுவது. அயோக்கியதனத்தின் உச்சக்கட்டம் அங்கேதான் ஆரம்பமாகிறது. ஆண்டாண்டு காலமாக மனித சமூகத்தின் உரிமைகுரல்வளையை நசுக்குவதில், அதிகாரவர்க்கத்தின் அதிகாரத்தை விட உனக்காக பேசுகிறேன் என்று உறவாடி கெடுத்த கோடாரி கொம்புகள் பற்றி வரலாறு நெடுக நடந்தவற்றை வாசித்தது மட்டுமல்ல... வாழ்க்கையின் ஊடாக அனுபவத்தையும் சேகரித்தே வைத்திருக்கிறேன்.

எதையும் மறுப்பது என்பது நோக்கமல்ல! இந்த இயங்கியலின் மையம் என்ன? என்கிற வினாவின் விடை தேடும் முயற்சி. மையமின்றி பரபரப்பாய் இயங்கும் போதெல்லாம் இது எதற்க்கானது என்பதை அடையாளப்படுத்துதல்.

நன்றி

செவ்வாய், 6 நவம்பர், 2007

இறந்துக்கொண்டிருக்கிறாய்...!

மனிதன் வரையறை செய்த கால அட்டவணையில் நாழிகள் நாட்களாகி, வருடங்களாய் முடிவுற்று இறந்து போகின்றன... நான் இறந்துக்கொண்டிருப்பதை எனக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கின்றன நாட்காட்டிகள். கடிகாரத்தின் முள் துடித்து நகருகிறது... ஆம்! என் இதயத்தின் துடிப்பும் கடக்கிறது கொஞ்சம் உயிராற்றலை செலவழித்து!. ஓவ்வொரு உறக்கத்தின் போதும் கொஞ்சமாய் ஓய்வெடுக்கிறது இந்த உயிராற்றல் மையம், ஓவ்வொரு விழிப்பின் போதும் விரைகிறது ஆற்றலை செலவழிக்க உடல். ஆனால் என்னையறியாமலேயே தானாக இயங்கும் உடல் உறுப்புகள் ஆற்றலை செலவழித்துக்கொண்டேயிருக்கின்றன... கடைசியில் இந்த உயிராற்றல் மையம் முடிந்து போகும் வெற்றுடலாய்... எரித்தோ (அ) புதைத்தோ இந்த அண்டத்தின் நிலையாற்றல் உள்ள பொருளாய் மாறி போவோம்.
Related Posts with Thumbnails