செவ்வாய், 13 நவம்பர், 2007

பேசுவதும், எழுதுவதும் தொழிலா?

பரபரப்பு தலைப்புகள் வைத்து... மயிர்புடி சண்டை நடத்திக்கொண்டிருந்த பதிவர்களை கண்டு கடுப்பாகிய தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பகுதியை தூக்கி கடைசில் போட்டார்கள். முகப்பிலேயே பரணை காட்டினார்கள்... அப்படி பரணில் கடந்த வாரம் நான் வாசித்த ஓர் இடுகை உஷா எழுதிய 'எழுத்துவியாபாரிகள்'...

அதில் அவர் எழுதிய கருத்தாக்கம் என்பது அவருடைய நிலைப்பாடாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் பதிவுலகில் எழுதி கூட்டம் சேர்த்து அதன்மூலம் புகழடைந்து வெகுமக்கள் அச்சு ஊடகத்திற்க்கு எழுதச்செல்ல வேண்டும் என்பது அவரின் இலக்காக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தின் ஊடாக! , அப்பதானே நாலுகாசு பார்க்கலாம் :( , பதிவில் எழுதிக்கொண்டிருக்கிற பலருக்கு இதே எண்ணவோட்டம் இருக்கலாம். பரபரப்பாக எழுதுவது, தனக்கென்று ஏதாவது ஓரு இயத்தில் அடையாளம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூட்டம் சேர்ப்பது, உணர்ச்சியில் கொப்பளித்து பொங்கி வெடிப்பது!, குழுவாக சேர்ந்து தனக்கு விளம்பரம் தேடுவது, இதன் எல்லாவற்றின் இலக்கு ஊடகத்துறை, அங்கே நகர வேண்டும்... அதன்மூலம் காசு பார்க்க வேண்டும், தன்னை எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை இலக்கு உள்ளுக்குள் இருக்கிறது. இதனால் நமக்கு எந்த வருத்தமோ (அ) அவர்களின் மீது தனிப்பட்ட வெறுப்போ கிடையாது.

ஆனால் பேசுவதும், எழுதுவதும் தொழிலா? என்கிற கேள்விக்கு என்னுடைய பார்வையிலிருந்து சில விளக்கங்கள் தர வேண்டும் என்று இங்கே முயற்சிக்கிறேன். அதில் உங்களுக்கு வேறு பார்வைகள் இருக்கலாம்! தயவு செய்து பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வனங்களில் விலங்குகளாய் திரிந்துக்கொண்டிருந்த மனிதன், முதலில் விலங்குகள் மாதிரியே ஓலிகள் மற்றும் ஓசைகள் மட்டுமே எழுப்பத்தெரிந்திருந்தான். அவனுடைய தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அடைந்த இடமே ஓலிகளுக்கும், ஓசைகளுக்கும் வரி வடிவம் கண்டான் அவற்றை எழுத்துக்கள் என்கிறோம்.

என் தந்தை ஓர் செய்தி சொன்னார் மனித உயிரின் முதல் ஓலி 'அ' என்பதும், உயிர் வெளியேற துடிக்கும் மெய்யின் கடைசி ஓலி 'ம்' என்பதும் ஆகும் என்பார். அதனாலேயே 'அம்' என்கிற சொல் மனித உயிருக்கு வடிவம் தருகிற தாயை குறிக்கிறது என்பார். (சோதித்து பாருங்கள் மிகுந்த நோயுற்று உயிர் துடிக்கும் உடலை தொடுங்கள், அவர் மிகுந்த முனகலாக 'ம்' என்று என்று ஓலி எழுப்புவார்). அவ்வளவு நுட்பமானது ஓலிகள்.

எழுத்துக்கள், வார்த்தைகள் எல்லாம் உருவாகிக்கொண்டிருக்கிற காலப்பயணத்தில், மனிதன் பேச முயற்சித்துக்கொண்டிருந்தான். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான். பேசினான், பேசுகிற சொற்களுக்கு பொருள் கண்டான். பரிணாமம் அடைந்துக்கொண்டேயிருந்தான்.

சமகாலத்தில் எல்லா மனிதர்களுமே பேசினார்கள், எல்லோருக்குமே பேச தெரிந்திருந்தது. ஆனால் எங்கேயோ ஓரிடத்தில் தான், நான் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும் என்கிற நிலைக்கு மனிதர்களை கொண்டு போனார்கள். அது எப்படி நடந்தது?

அது தான் மனிதன் சமூகமாகவும், குழுவாகவும் வாழமுயற்ச்சித்தப் போது ஏற்ப்பட்ட நிலை. வலுவுள்ள மனிதன் மற்றவர்களை ஆளுமை செய்ய முயற்சித்தான். அப்போது அவனுக்கு தெரிந்தது எல்லாம் உடல் வலுவால் சண்டையிட்டு மற்றவர்களை வெற்றிக்கொள்வது. சமூக வளர்ச்சி அதிகரித்து மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது எல்லோரையும் சண்டைப்போட்டு வெற்றிக்கொண்டு தன்னை தலைவனாக நிலைநிறுத்திக்கொள்வது அவனுக்கு கடினமாக தெரிந்தது.

அதனாலேயே அவன் மனித இனத்தின் பரிணாமம் பேசுவது அதையே பயன்படுத்தினான். அறிவிப்பாளர்களை நியமித்தான் "இவர் தான் உங்கள் தலைவர், கடவுளின் வடிவம்!" இதையே தொடர்ந்து பேசு என்று பணித்தான். தொடர்ந்து இதையே மனிதச்சமூகத்தில் பேசினார்கள். இயல்பாக சிந்திப்பதை தடை செய்து, எதிர்ப்பை மழுங்கடிப்பது!. இதில் பெரிய அளவில் வெற்றிக்கிட்டியது. இப்பொழுது தலைவனானவன் மிகக்குறைந்த எதிர்ப்பை எளிதாக வெற்றிக்கொள்ள முடிந்தது. (இதையே உளவியலில் தொடர்ந்து பேசுவதன் மூலம் ஓர் கருத்தை சிந்தனையில் ஏற்றுவது என்பார்கள்). கிராம வழக்கில் "ஏலேய்! அவன் விவரம்! பேசி, பேசியே ஆள கவுத்துடுவான் பார்த்துக்க! " என்பார்கள்.

நாளடைவில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்க்கு பேச்சு என்பது மிக முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அப்படி அதிகாரத்திற்க்கு ஆதரவாக பேசுகின்றவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொன்னும்,பொருளும் வழங்கப்பட்டது. அதுவே பேசுவது என்பதை தொழிலாக மாற்றியது.

பேசுவது என்கிற ஆயுதம் அதிகாரத்தை மறுப்பவர்களுக்கு பயன்பட்டது. அதனாலயே பல்வேறு சமூக அமைப்பில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதை வரலாறாக படித்திருக்கிறோம். நடைமுறையில் தற்போது சிங்கையில் பொதுக்கூட்டம் போட்டு பேசுவது என்பது அரசு அதிகாரத்திடம் ஓப்புதல் வாங்கிய பிறகே நடைபெற முடியும். அதுவும் என்ன பேச போகிறீர்கள் என்பதை முன்பே எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கியே பேச முடியும்.

ஆக மனிதனின் இயல்பான பரிணாமம் ஆன பேசுவது என்பது அதிகாரத்திற்க்கு பயன்படுத்தப்பட்ட போது தொழிலாக மாறிப்போனது. அதை இன்றைக்கும் பார்க்கலாம் ஓவ்வொரு அரசியல் கட்சியும் பேச்சாளர்களை வைத்திருப்பார்கள், அவர்களின் வேலை மனிதர்களின் சிந்தனையில் அவர்களுடைய கருத்தை பேசுவதன் மூலம் ஏற்றி, அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கம்.

தொடரும்...

18 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல அலசல் !

அரசியல்வாதிகளுக்கு பேசுவது தொழில், 'சோ'க்கா(ளி)லிகளுக்கு எழுதுவது தொழில்.
:)

செல்வநாயகி சொன்னது…

good one paari arasu, Please continue. Font problem, sorry for english.

குசும்பன் சொன்னது…

நல்ல பதிவு பாரி, உங்க அப்பா சொன்னது மிகவும் சரி.

Victor Suresh சொன்னது…

“பேசுவதும் எழுதுவதும் தொழிலா?” என்பதை நீங்கள் எந்த விதத்தில் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.

ஒரு குழந்தையைப் போல விடை தெரியாத கேள்விக்கு பதில் தேடும் ஆவலில் கேட்கிறீர்களா? அல்லது, உங்களுக்குத் தெரிந்த விடையை வாதங்கள் மூலம் நிறுவ முற்படுகிறீர்களா? அல்லது, உடலையெல்லாம் விற்றுப் பிழைப்பதெல்லாம் ஒரு தொழிலா என்று சிலர் கேட்பது போல பேசுவதும் எழுதுவதும் ஒரு ஈனச் செயல் என்று கூற வருகிறீர்களா?

இந்தக் குழப்பங்கள் ஏற்படுவது எதனால்? எழுதியதால். நீங்கள் இந்தக் கேள்வியைப் பேசி என் செவி வழியாக கேட்டிருந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை இன்னும் துல்லியமாக அறிந்திருப்பேன்.

அதற்காக, எழுதுவதை குறையாக சொல்ல வரவில்லை. நீங்கள் பேசியிருந்தால், அந்தக் கணத்தில் கேட்பவர்களுக்கு மட்டும் புரிந்திருக்கும். எழுதுவதால் ஒரு பரந்த கூட்டத்தை உங்களால் அடைய முடிகிறது. உங்களது காலத்தையும் தாண்டி, அதாவது நீங்கள் இறுதி ம்-ஐ உச்சரித்து முடித்த பிறகும் உங்கள் சிந்தனைகள் வாழக்கூடிய வாய்ப்புக்களை எழுதுவதன் மூலம் அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

இத்தனை வலிமையும் வீச்சும் கொண்ட பேச்சும், எழுத்தும் சிலருக்கு தொழிலாகும்; மற்றும் தொழிலாகவே வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். உங்களது தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்.

Chittoor Murugesan சொன்னது…

நான் ஏற்கெனவே என் பதிவுகளில் கூறியுள்ளேன்.பேசுபவன்/எழுதுபவன் எல்லாம் ஒன்று தீராத‌ செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவனாக இருப்பான் அல்ல்து செக்ஸில் செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை படைப்பாற்றல் மிக்கவனாக இருப்பான். வாய்க்கும் இன உறுப்புக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. காரியத்தில் செய்ய முடியாதவன் பேசி தீர்த்துக் கொள்வான்.

"என்ன நக்கலா" என்ற வார்த்தை அதன் விபரீத அர்த்தம் புரியாமல் பெண்களாலும் கூட உபயோகிக்கப் படுகிறது. காமத்தால் தகித்து,நேரடி,உடனடி,உடலுறவுக்கு தவிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு நாக்கால் வடிகால் தர முயல்வது தான் நக்கல் என்ற வார்த்தையின் நேரடி பொருள்.

பேச்சு எழுத்து எல்லாமே ந‌க்க‌ல் வ‌கையை சார்ந்த‌வை.

நாடு இருக்கும் இழி நிலையில் தேவை செய‌ல் வீர‌ர்க‌ள்
வாய் பேச்சு வீர‌ர்க‌ள் அல்ல‌

TBCD சொன்னது…

அட என்ன அர்த்தம் வேனா இருக்கட்டும்..நாம் என்ன நினைச்சு சொல்லுறோமின்னு ஒன்னு இருக்கே...கிண்டலா...என்று கேட்பதைத் தான் நக்கலா என்று கேட்பது வழக்கம்..

அப்பறம்..இந்த தமிழ் மணத்திலே, 8 வயது சிறுமி கூட எழுதுகிறாள்..அதனால், நீங்க பொதுமைப்படுத்தும் நோக்கிலே சொன்னது சரி என்று எனக்குப் படவில்லை..

ஓவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக எழுதுகிறார்கள்..அதில் அறுதி பெருன்பான்மையினர், தங்கள் குரல் வெளி உலகத்திற்கு கேட்கட்டும் என்ற எண்ணத்திலேயூம், தனது படைப்பாற்றலை பலர் கண்டு அங்கீகரிக்கட்டும் என்றும் வருவதாகவே நான் எண்ணுகிறேன்.

என்ன காரணத்திற்கு வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால், நம் எழுத்தைப் பார்த்து மற்றவர்கள், முகம் சுளிக்காமல் இருந்தால், நலம்...

//*chittoor.S.Murugeshan said... *//

Victor Suresh சொன்னது…

சித்தூர் முருகேஷன் அவர்களே,

நகுதல், நகைச்சுவை போன்ற தமிழ்ச் சொற்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவற்றின் மூலத்திலிருந்து உதித்ததுதான் நக்கல் என்பது என் சிற்றறிவு.

பெயரில்லா சொன்னது…

//அதில் அவர் எழுதிய கருத்தாக்கம் என்பது அவருடைய நிலைப்பாடாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் பதிவுலகில் எழுதி கூட்டம் சேர்த்து அதன்மூலம் புகழடைந்து வெகுமக்கள் அச்சு ஊடகத்திற்க்கு எழுதச்செல்ல வேண்டும் என்பது அவரின் இலக்காக பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் எழுத்தின் ஊடாக! , அப்பதானே நாலுகாசு பார்க்கலாம் :( , பதிவில் எழுதிக்கொண்டிருக்கிற பலருக்கு இதே எண்ணவோட்டம் இருக்கலாம். பரபரப்பாக எழுதுவது, தனக்கென்று ஏதாவது ஓரு இயத்தில் அடையாளம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூட்டம் சேர்ப்பது, உணர்ச்சியில் கொப்பளித்து பொங்கி வெடிப்பது!, குழுவாக சேர்ந்து தனக்கு விளம்பரம் தேடுவது, இதன் எல்லாவற்றின் இலக்கு ஊடகத்துறை, அங்கே நகர வேண்டும்... அதன்மூலம் காசு பார்க்க வேண்டும், தன்னை எழுத்தாளர் என்று அறிவித்துக்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை இலக்கு உள்ளுக்குள் இருக்கிறது. இதனால் நமக்கு எந்த வருத்தமோ (அ) அவர்களின் மீது தனிப்பட்ட வெறுப்போ கிடையாது.//

மேற்குறிப்பிட்ட வார்த்தை முறைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நடுநிலைமையாக அமைந்திருக்கும்.

ஏனெனில் அதற்குக் கீழே கொடுக்கப்பட்ட பல விஷயங்களில் சில மிக நன்றாக இருக்கிறது. ஆனால் ஏ.வி.எஸ் கேட்ட கேள்விகள் எனக்கும் தோன்றியது.

குறிப்பாக பேசுவதன் மூலம்தான் ஆதிக்கமே ஏற்பட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். கலை,தொழில்னுட்பம் உள்ளிட்ட எல்லா பரிணாம வளர்ச்சிகளையும் மனிதன் ஆக்கத்திற்கும் பயன் படுத்தினான். ஆதிக்கத்திற்கும் பயன் படுத்தினான்.

இதில் பேச்சும் விதி விலக்கு அல்ல.

நிற்க. நடிப்பது,நடனம் ஆடுவது, சண்டையிடுவது, சமைப்பது, வண்டிகள் ஓட்டுவது ஒரு தொழிலாய் இருக்கும் போது எழுதுவதையும், பேசுவதையும் ஒரு தொழிலாய் வைத்திருப்பதில் என்ன பெரிய குற்றம் கண்டுபிடிக்க முடியும்.

நான் ஒரு எழுத்தாளராக வேண்டும் எனும் வேட்கை ஒருவர் கொண்டிருப்பது தவறா???? அதற்கு பதிவுலகத்தை ஒரு சுயபரிசோதனை செய்துக் கொள்ளும் ஒரு ஊடகமாய் உபயோகிக்கக் கூடாதா??? இதில் வெறுப்பு கொள்வதற்கோ, வருத்தம் கொள்வதற்கோ என்ன இருக்கிறது பாரி.(கூட்டம் சேர்ப்பது என்ற வார்த்தை எல்லாரையும் பொதுமைப் படுத்துவதால் அதில் எனக்கு உடன்பாடில்லை.)

சரி இதன் தொடர்ச்சியில் இன்னும் சில புரிதல்கள் ஏற்படலாம். தொடருங்கள். காத்திருக்கிறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!
வருகைக்கு நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் செல்வநாயகி!
நீண்டநாட்கள் பதிவு பக்கம் வரவேயில்லையா?

வாழ்த்துக்களுக்கு நன்றி! தொடர்கிறேன்....

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் குசும்பன்! நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஏவிஎஸ்!

உங்களுடைய தனியார்துறை இடஓதுக்கீடு இடுகை முன்பு படித்தேன். மிக அவசியமான சில உண்மைகளை எழுதியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்.

உங்களுடைய கேள்விகளுக்கு முழுவதும் முடிக்கும் பொழுது ஓரளவுக்கு விளக்கம் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இப்போதைக்கு பேசுவது என்பதைப்பற்றிய உங்களுடைய பார்வையை பகிர்ந்துக்கொள்ளுங்கள். எழுதுவது என்பதை பிறகு தொடர்ந்து உரையாடவோம்.

நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

விளக்கத்திற்க்கு நன்றி டிபிசிடி

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் நந்தா!


ஃஃ
குறிப்பாக பேசுவதன் மூலம்தான் ஆதிக்கமே ஏற்பட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். ....
ஃஃ

தவறான புரிதல் நந்தா! பேசுவது என்பது செயல், அது பரிணாமத்தால் மனிதன் அடைந்த நிலை.

ஆதிக்கம் செய்வதற்க்கு பேசுவது ஓரு ஆயுதமாக பயன்பட்டது. அதற்க்காக தெளிவான விளக்கங்கள் கொடுத்தேன்.
(ஆதிக்கச்சக்திகள் தொடர்ந்து பேசுவது என்பதை, பொருளியல் நிலையில் அதை தொழிலாகவே வளர்த்து எடுத்தார்கள், தங்களுடைய ஆதிக்கத்திற்க்கு ஆதரவான பேச்சுக்கு தொடர்ந்து பொன்னும், பொருளும் வழங்கினார்கள்... அது இன்றைக்கும் தொடர்கிறது..)

ஆதிக்கதிற்க்கு எதிராகவும் அதே பேச்சு என்பதே ஆயுதமாக பயன்பட்டது. அதை அடுத்து எழுதுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட மற்ற கலைகள் போல பேசுவது, எழுதுவது என்பது எப்படி கலையாக மாறியது. அதன் வளர்ச்சியின் போக்கு என்ன?
இப்படி நிறைய இருக்கு... தொடர்வேன் நந்தா முடிந்தவரை...

நீங்கள் சுட்டிய முதல் பத்திக்கு ஓரே ஓரு சிறு விளக்கத்துடன் அதற்க்கு முற்றுபுள்ளி வைக்க விரும்புகிறேன்.

மனித சமூகத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்துக்கொண்டேயிருக்கும்... ஆனால் அந்த பிரச்சினைகளை புரிந்துக்கொண்டு தீர்வை நோக்கி சிந்தித்தல் (அ) அதற்க்காக போராடுவது ஓரு வகை.

இன்னொரு வகை அந்த பிரச்சினையை உள்வாங்கி தனக்கு சாதகமாக (சுயநலமாக) பயன்படுத்திக்கொள்வது.

உதாரணத்திற்க்கு கருப்புபணம் என்பது பொருளியல் சார்ந்த அரசில் மிகப்பெரிய பிரச்சினை.

இதை உள்வாங்கி ஏவிஎம்-சங்கர்-ரஜினி கூட்டணி என்ன செய்தார்கள், ஓரு படமெடுத்து பல கோடிகள் கருப்புபணம் சம்பாதித்தார்கள்.
இந்த கூட்டணிக்கு மனித சமூகத்தின் மீது அக்கறை, அதனாலேயே கருப்புபணம் பற்றி படமெடுக்கிறார்கள் என்று சொன்னால், நகைத்துவிட்டு நகர்வார்கள்.

அப்படி சிலவற்றை நான் நகைத்து விட்டுதான் நகர வேண்டும். இல்லையென்றால் நான் பெற்ற அனுபவம் என்னைப்பார்த்து நகைக்கும்.

பெயரில்லா சொன்னது…

//இன்னொரு வகை அந்த பிரச்சினையை உள்வாங்கி தனக்கு சாதகமாக (சுயநலமாக) பயன்படுத்திக்கொள்வது.//

அது புரிகிறது பாரி.....

ஆனால் இங்கு உறுத்தல்களே, உங்களின் பொதுமைப் படுத்தலில்தான் வருகிறது. அதாவது கறுப்புப் பணத்தை எதிர்க்கிறவர்கள் எல்லாருமே விளம்பரம் தேடி மட்டுமே செய்கிறார்கள் என்பது போல் வருகிறது.

உதாரணத்திற்கு, நான் குறிப்பிட்டுள்ள வரிகளை வைத்து என்னால் அனுமானம் செய்து கொள்ள முடிவது என்னவென்றால், பதிவுலகத்திலிருக்கும் ஒருவர் அச்சு ஊடகத்திற்கு செல்ல விரும்புகிறார் என்றால், அவர் பதிவுலகத்தை இதுகாறும் பயன்படுத்தியதற்கு காரணம் கூட்டம் சேர்க்கவும், விளம்பரம் தேடிக் கொள்ளவும், உணர்ச்சிகளை தூண்டிவிடும் வகையில் எழுதி அது வொர்க் அவுட் ஆகிறதா இல்லை என்று வேடிக்கை பார்ப்பது ஆகியவற்றுக்கு மட்டும்தான், என்று பொதுமைப் படுத்தி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்களுடைய அந்த வரிகள் எனக்கு இதைத் தான் உணர்த்துகின்றன. ஒருவேளை எனக்கு புரிதல் கம்மியோ??? தெரிய வில்லை.

திரும்ப திரும்ப இந்த 4 வரிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதைத் தவிர்த்து மற்ற பகுதிகள் மிக நன்றாய் இருக்கும் போது இது போன்ற சில வரிகள் இல்லாமலிருந்தால் இன்னும் நடுனிலைமையான அணுகுமுறையுடன் இருக்கும் என்று தோன்றியதைச் சொன்னேன்.

இல்லை. இது எனது அனுபவம். இது இப்படித்தான் என்று நீங்கள் நினைத்தால், இதற்கு விளக்கம் வேண்டாம் விடுங்கள். நாம் மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்போம்.

//ஆதிக்கதிற்க்கு எதிராகவும் அதே பேச்சு என்பதே ஆயுதமாக பயன்பட்டது. அதை அடுத்து எழுதுகிறேன்.//

இதைத்தான் எதிர்பர்த்தேன். காத்திருக்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

நண்பர் பாரி. அரசுவிற்கு..

நீங்கள் இதனை தொடருங்கள். சில அடிப்படை பிரச்சனைகளைத் தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் எழுதியருப்பது பேச்சையும் எழுத்தையும் தொழிலாக கொண்டவர்கள் பற்றி என்று எடுத்துக் கொள்ளலாம். தொழிலாக கொள்வது ஒன்றும் இழிவான செயலல்ல. உலகில் எதுவுமே இழிவல்ல. சகமனிதனை கொல்கிற பிறர்மீது செலுத்தப்படுகிற வன்முறை தவிர.

சமூகம் உருவானதே மொழியின் அடிப்படையில்தான். தொடருங்கள்...

Unknown சொன்னது…

பாரி

(அவற்றை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்... உங்களின் ஒவ்வொருத்தரின் கருத்துகளோடும் என் சிந்தனைகளை வென்றெடுக்க நினைக்கிறேன்)


நீங்கள் சொல்வது உங்களுக்கும் பொருந்துகிறதே!

மனிதன்!

பாச மலர் / Paasa Malar சொன்னது…

பேச்சும் எழுத்தும் ஒரு கலையின் ஒரு பிரிவு என்ற பார்வையில் பார்த்தால் அதையும் மற்ற கலைகளைப் போலத் தொழில் என்று கூறலாம்..

உங்கள் இந்தப் பதிவு நன்றாக இருக்கிறது..தொடருங்கள்..

Related Posts with Thumbnails