புதன், 31 மார்ச், 2010

பதிவர்கள் குழுமம் - ஏன் சாத்தியமற்றது? என்ன பாதிப்புகளை உருவாக்கும்?

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

இடுகையை வாசித்து சில நண்பர்கள் உரையாடியில் வறுத்தெடுத்து விட்டார்கள்... மிக கடுமையாக இருப்பதாக குறை கூறினார்கள்.

நிகழ்வுகளின் வழியாக எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

வலைப்பூக்கள் பல்வேறு வகையில் இயங்கி கொண்டிருக்கின்றன.

ஒரு குழுமம்/சங்கம்/அமைப்பு என்று தொடங்கியவுடனே அதற்கு குறைந்தபட்ச அடிப்படை விதிமுறைகள் என்று ஒன்று உருவாக்கப்படும்.

முதலில் யாரெல்லாம் உறுப்பினர் என்பதிலேயே சிக்கல் தொடங்கி விடும்.

பாலியியல் கதை எழுதுகிற வலைப்பதிவருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
காமக்கதைகள் எழுதுகிற ஜ்யோவரம் சுந்தருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
சுகுணா திவாகர் மாதிரி அடிக்கடி கெட்ட வார்த்தை (வார்த்தை எப்படி கெட்டு போகும்?) பயன்படுத்துகிறவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
மத அடிப்படைவாத பதிவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?

இப்ப தகுதி அளவெடுப்பது யார்? அவருக்கென்ன தகுதி?

அடுத்து...
குழுமம்/சங்கம்/அமைப்பு விட்டு தனித்தியங்கும் பதிவரை... குழுமம்/சங்கம்/அமைப்பு சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஒடுக்குவார்கள்.

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவர் இந்துத்வ அரசியல் சார்பு உடையவர் என்றால்... அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு (முகவரி, தொலைபேசி எண்) என்ன பாதுகாப்பு?

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவரின் அரசியல் சார்ப்பும், அந்த அதிகாரத்திற்கு நெருக்கமாக ஒரு கும்பலும் உருவாகி விடும்பொழுது...

இங்கே தான் போன பதிவில் நான் எழுதியது...

இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

முந்தைய இரண்டு இடுகைகளுக்கு பிறகான வலை உரையாடியில் தொடர்புக்கொண்ட பதிவுலக நண்பர்கள் மற்றும் நண்பர் குழலி ஆகியோர்...

கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களின் (வலைப்பூக்களின்) பன்மை தன்மை சிதையும் (அ) அழியும் என்பதை மேலும் விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவது என்பதை விட படிமமாக விளக்க முயற்சிக்கிறேன்.

கட்டற்ற வெளி (இணையம்) -(கட்டற்றதாக பெரு நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளமையால், வெளியின் மீதான பெரு நிறுவனங்களின் தாக்கங்களை நீக்கி வைத்துக்கொள்வோம்)

கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள்(objects) - வலைப்பதிவர்கள்.

பொதுவான இயங்கியல்...
கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள் தனக்கென்ற தனித்த ஒழுங்கமைவும், இயங்கு தளமும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் ஒத்திசைதல் அல்லது தொடர்பாடல் வழியாக தமக்குள்ளாக ஒரு ஒழுங்கமைவையும், இயங்கு தளத்தையும் கொண்டிருக்கும்.

கட்டற்ற வெளிக்கான பொதுவான ஒழுங்கமைவு என்ற ஒன்று இருக்காது. அவ்வாறு பொதுவான ஒழுங்கமைவு உருவானால்... பொருளின்(object) தனித்த அடையாளம் சிதையும் அல்லது பொதுவான ஒழுங்கமைவோடு முரண்பட்டு அழிந்து போகும்.

எ.கா :

X, Y, Z என்று மூன்று பொருட்களை எடுத்துக்கொள்வோம்.

x,y,z ஆனது தனக்கென தனித்த ஒழுங்கமைவையும், இயங்குதளத்தையும் கொண்டவை.

x ஆனது y யுடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும்... x ஆனது z உடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும் வெவ்வேறானவை.

அவ்வறாக ஒவ்வொரு பொருளும் இருக்கும்...

x,y,z... ஆக எண்ணிலடங்கா பொருட்கள் இயங்கும் கட்டற்ற வெளியில் ஒரு பொதுவான ஒழுங்கமைவும், இயங்குதளமும் இருக்க இயலாது.

அவ்வாறான பொதுவான (global) ஒன்று உருவாகும் பொழுது... பொருட்களின் ஒழுங்கமைவு முரணால் பல பொருட்கள் சிதையும் அல்லது அழியும்.


இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

ஒரு கணினி நிரலாளன் பார்வையிலும்...
பொருட்களுக்கு (objects) இடையிலான dependency மிக, மிக குறைக்கப்பட வேண்டும். சாத்தியமெனில் zero வாக வைக்கப்பட வேண்டும்.

பொருட்கள்(objects) எப்பொழுதும் தனக்குரிய பண்புகளையும், இயக்கத்தையும் தன்னகத்தே கொண்ட தனித்தியங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே நீடித்த நிலைத்தன்மையும், நீட்சியடைதல் (அ) வளர்தல் சாத்தியம்.

இன்னும் பல்வேறு கோணங்களில் தனிமனித உரிமை மற்றும் விடுதலை(சுதந்திரம்) என்று விரித்து விளக்கிக்கொண்டே போக முடியும்.

அடுத்த பதிவுகளில் சங்கம் அல்லது அமைப்பு வேண்டும் என்று கருதுகிற நண்பர் பைத்தியகாரன் மற்றும் தோழர் மாதவராஜ் ஆகியோருக்கு வினாக்களுடன் வருகிறேன்...

நன்றி
அரசு

ஞாயிறு, 28 மார்ச், 2010

பதிவர், பதிவர்கள், குழு, குழுமம்... இன்னபிற...

வெள்ளிகிழமை Buzz ல்
Arasu Paari - - Public - Muted
பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதின் அரசியல் என்ன?Edit
Jamalan Jahir - வேறென்ன கும்பலாக மாறுவதுதான் அரசியலின் முதற்படி பாரி...))

ஜமாலன் ஒற்றை சொல்லில் பல விளக்கங்களை தந்தார்.

எது படைப்பு? யார் படைப்பாளி? எதற்காக கலை, இலக்கியம்? இப்படி எந்த விழிப்பும், வினவும் அற்ற நிலையில் உள்ள மக்கள் சமூகத்தில் இருந்து வருகிற பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதன் ஊடாக...

இப்போதைக்கு...
காசு இருக்கிறவன் அல்லது பதிப்பகத்தை/பதிப்பாளரை காக்காய் பிடிக்க தெரிந்த சிலர் எதையாவது எழுதி இது தான் 'எலக்கியம்' என்று.. விற்கலாம்.
நாமெல்லாம் பதிவர்கள் என்று இன்னொரு பதிவரை ஊக்கப்படுத்த வேண்டும் கும்பல் கூட்டி விற்கலாம்.

ஆனால் நாளை...

தனிமனித உளவியல் என்பது வேறு, கும்பலின் உளவியல் என்பது வேறு.

விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.

வலைப்பூக்களின் விடுதலை தன்மையானது புறக்கணிப்பட்டு, ஒரு கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும், அதன் அதிகாரமே தமிழ் வலைப்பூக்களின் இயங்கியலை தீர்மானிக்கும் காரணியாகி விடும்.

இந்திய(பார்ப்பனி,பனியா) தேசியத்தின் ஊடகங்கள் மக்களின் அரசியலை, மக்களின் கலை, இலக்கியத்தை மறுத்தும்,நசுக்கியும் வருகின்றபொழுது... அதற்கு மாபெரும் மாற்றாக உருவாகிக்கொண்டிருக்கும் வலைப்பூக்கள்... கும்பல் அதன் அதிகார மையம் என்பது வலைப்பூக்கள் என்கிற ஊடகத்தை நசுக்கி தேசியத்தின் இன்னொரு ஊதுகுழலாக மாற்றப்படலாம்.

இங்கே கடந்து போன சில நிகழ்வுகளை புரட்டுவதன் மூலம்... கும்பலின் உளவியல் என்பது எத்தகையதாக இருக்கும் என்பதை உணரலாம்.

தமிழ்மணத்தை/வினவை புறக்கணி என்பது தனிமனித பார்வையாக/கருத்தாக இல்லாமல் கும்பலின் பார்வையாக மாற்றப்படும்.

மேப்படியான், குழு, குழுமம், அமைப்பு, அரசியல்... பற்றி எழுத வேண்டும் என்கிற நினைப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது. சூழல் அமைந்தால் இன்னொரு நாளில்...


நன்றி
அரசு.
Related Posts with Thumbnails