வியாழன், 30 அக்டோபர், 2008

மண்ணும், மண்ணின் வளங்களும் யாருக்கு...?

கிராமத்தின் மாலைப்பொழுதில் ஊரின் முக்கியபுள்ளிகள் பஞ்சாயத்து அலுவலகத்தின் மரத்தடியில் கூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே மணியக்காரர் முத்து மீதான குற்றச்சாட்டு என்பதால் பரப்பரப்பு அதிகமாகவே இருக்கிறது. மூன்று தலைமுறைகளாக ஊரில் பெரியமனிதர் என்கிற தோரணையில் இருப்பவர். இப்பொழுதுக்கூட அவரின் அண்ணன் மகன் தான் பஞ்சாயத்து தலைவர்.

என்ன அப்படி அவர் குற்றம் செய்துவிட்டார் என்று இங்கே கூடியிருக்கிறார்கள்? ஊர் பொது பூவரசு மரம் 50 ஆண்டுகள் பழமையானது... நல்ல வைரம் பாய்ந்த மரம் என்று தன் மகள் வீட்டு வேலைக்கு வெட்டி பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய அப்பா காலத்தில் ஊரில் பொது இடத்தில் நட்டது.

பஞ்சாயத்து தலைவர் அண்ணன் மகன் தானே சொல்லிக்கலாம் என்று வெட்டி விட்டார். தன்னுடைய சிற்றப்பா தானே என்று தலைவரும் விட்டுவிட்டார். ஆனால் ஊர்மக்கள் சும்மா விடுவார்களா? கூட்டிவிட்டார்கள் கூட்டத்தை...

பஞ்சாயத்து தலைவரான தான் பஞ்சாயத்து உறுப்பினர்களை கூட்டி பேசுவதாக ராமலிங்கம் சொன்னதற்க்கு, நீ சின்ன பையன், அதோட இது ஊர் பொது சொத்து அதனால் பெரியவர்கள் கூடி பேசுவதாக முடிவு செய்து விட்டரர்கள்.

ராமலிங்கம் தன் சிற்றப்பாவுடன் கூடி ஓரு முடிவுடன் கூட்டத்திற்க்கு வந்திருந்தார்.

கூட்டம் ஆரம்பித்தது ஆளாளுக்கு ஊர் பொது சொத்தை மணியக்காரர் அனுமதியில்லாமல் வெட்டியதை கண்டிக்க ஆரம்பித்தனர்.

சில முக்கிய மணியக்காரரின் நண்பர்கள் சமாதானமாக " மூனு தலைமுறையா ஊருக்கு உழைத்த குடும்பம்... அதனால நாம அடுத்து என்ன செய்வது என்று பேசலாமே!" என்றனர்.

மாரியம்மன் கோயில் குருக்கள் "அய்யாவின் அப்பாதானே அந்த மரத்தை நட்டார்...! அவருக்கு இந்த ஊருல எவ்வளவு மரியாதை இருந்தது. மணியக்காரருக்கு இந்த மரத்தை கூட அனுபவிக்க உரிமை இல்லையா?" என்றார்.

பெரமையா : " யோவ்! குருக்கள் வெள்ளி, செவ்வாய் மணியக்காரர் தட்டுல போடுற பத்து ரூபாய்க்கு விசுவாசமா போசாதீர்... சொத்து ஊருக்கு சொந்தம்!"

பெரியவர் : "பெரமையா! ராமலிங்கம் எலக்சென்ல உன்னை தோற்க்கடித்த கடுப்பில் எதையாவது பேசாத!"
(பெரியவருக்கு தெரியாது, குருக்கள் மணியக்காரரிடம் கோயில் நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டி வீட்டு ஓடு போட கோட்டார். மணியக்காரர் அதுக்கு சரியின்னு தலையாட்டினது தனி விசயம். இப்போ குருக்கள் மனதில் தனக்கு இனி பனைசொத்து இல்லை என்பதாலேயே வலிந்து மணியக்காரருக்கு பேசினார்)

பெரியவர் 2 :" யப்பா ராமலிங்கம் நீதானே பஞ்சாயத்து தலைவர்! என்ன பண்ணலாமுன்னு சொல்லு"

ராமலிங்கம் : "சிற்றப்பா ஓன்னும் சும்மா வெட்டலையே...!"

மக்கள் அப்படியா...! என்று வாயை பிளந்தது..

(முன்பே திட்டமிட்ட படி ராமலிங்கம் லாவகமாக திசைமாற்றினார்....)

ராமலிங்கம் : "அப்பா! முழுசுமா வெட்டின பிறகு ஆசாரியை வைத்து மதிப்பு போட்டு காசு பஞ்சாயத்து போர்டுக்கு கட்டியராதா சொல்லியிருக்கிறார்!"

(ஏன் முன்னாடியே மரத்தை ஏலம் போடலை என்று சிலருக்கு கேள்வியிருந்தாலும், ஏதோ பஞ்சாயத்துக்கு காசு வந்தா சரி என்று கலைந்தார்கள். நாளைக்கோ அப்புறமோ ஆசாரியை வைத்து ஓன்றுக்கு பாதி மதிப்பிட்டு பஞ்சாயத்து போர்டுக்கு மணியக்காரர் காசு கட்டி விடுவார்கள். மக்களும் அவரு போல உண்டா என்று போயி விடுவார்கள்.)

கூட்டம் கலைந்தாலும் கணேசன் தன் நண்பர்களுடன் மரத்தடியில் உட்கார்ந்து இன்னும் பேசிக்கிட்டிருந்தரர். ரொம்ப ஆவேசமாக....

கணேசன் : 30 வருசத்துக்கு முன்னாடி இவன் அப்பன் ஊர் சொத்தை கொள்ளையடித்த போது யாரும் கேள்விக்கேட்கக்கூட திரணியற்று இருந்தார்கள். இன்றைக்கு ஏதாவது கொஞ்சமாவது கேள்வி கேட்கிறார்கள். தங்களுக்கும் அதில் உரிமையிருக்கு என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

நண்பர் 1 : அதான் முடிந்து விட்டதப்பா இன்னும் ஏன் கோபமாயிருக்கே...?

கணேசன் : நம்ம ஊரு சொத்து பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தம் என்று கேள்விக்கேட்க தெரிந்த மக்களுக்கு... நம் மண்ணில் கிடைக்கும் எல்லா வளமும் அரசுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் சொந்தம் என்பதை எப்போது உணர்வார்கள் என்பது தான் என்னுடைய கோபம்.

நண்பர் 2 : யப்பா கணேசா! நீ என்ன சொல்ல வருகிற தெளிவா சொல்லு!

கணேசன் : "மண்ணில் இருந்து எடுக்கிற எஃகு(இரும்பு தாது), பெட்ரோலியம், மைக்கா, டைட்டானியம் போன்ற இயற்கை வளமும், அதன் மூலம் கிடைக்கிற வருவாயும் நமக்கு தானே சொந்தம் ... ?"

நண்பர் 1 : அட! ஆமாமப்பா....

கணேசன் : எஃகு தாது வை டாடா, பிர்லா காரணும், மைக்கா வை காரைக்குடி செட்டியாரும், கோதாவரி பெட்ரோலியத்தை அம்பானியும், இப்போ டைட்டானியத்தை டாடா வுக்கும் கொடுத்து அவர்களை பணக்காரர்களாக ஆக்கி விட்டுட்டு நீயும், நானும் கழனியில கஞ்சிக்கு மாரடித்துக்கிட்டிருக்கோமே...!

"உனக்கும், எனக்கும், இந்த மக்களுக்கும் சேர வேண்டிய செல்வத்தை தனிமனிதர்கள் கொள்ளையடிப்பதை தட்டிக்கேட்க வேண்டாமா...!"

நண்பர் 2 : " அட போப்பா... இந்த கூட்டம் போடுறதுக்கே இங்கன அவ்வளவு பிரச்சினை... யாரு இதெல்லாம் கேட்கிறது...?"

கணேசன் : " 30 வருசத்துக்கு முன்னாடி இதே கிராம மக்கள் மணியக்காரரை கேள்விக்கேட்க வில்லை... இப்பொழுது கேள்வி கேட்கிற நிலைக்கு மாறியிருக்கிறார்கள்... மக்கள் சிந்திக்க தொடங்குவார்கள்... இந்த அதிகார மையங்களை தகர்த்து.. எறிவார்கள்..!

" இந்த மண்ணின் வளம், செல்வம் எல்லாம் மக்களுக்கு சொந்தமென்பதை உணர்ந்து தங்களின் உரிமைக்காக போராடுவார்கள்!"

5 comments:

சுதாகர் சொன்னது…

உண்மை. வாழ்த்துக்கள் தோழர்

ஜெகதீசன் சொன்னது…

நல்ல பதிவு.. நன்றி.

பாரி.அரசு சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி சுதாகர்!

பாரி.அரசு சொன்னது…

வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி ஜெகதீசன்!

chillu சொன்னது…

ada ithellam yarupa netla vanthu vaasikaporanga vasika vendiyavanga palaya news papara kooda pakarathilla theriyuma ungaluku ennatha solla ponga Aana nalla yosanai nadakkattum vaalthukal

Related Posts with Thumbnails