புதன், 20 மே, 2009

ஈழம்- இந்தியா நானும் ரவுடி... நானும் ரவுடி...

என்னுடைய அரசியல் கணக்குகள் சரியாக இருக்குமெனில் இன்னும் சில நாட்களில் கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக புதிய போராட்டத்தையோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் என்கிற பெயரில் நிதி திரட்டவோ அறிவிப்பு வெளியிடலாம்!

நான்காம் கட்ட ஈழப்போர் என்று விவரிக்கப்படுகிற சூழலில் இந்தியாவின் பங்களிப்பு என்பதை பேச முயற்சிக்கிறேன்.

சாதரரணமாக எங்கள் ஊரில் கட்ட பஞ்சாயத்து செய்கிறவன் கூட தான் செய்கிற சமரச முயற்சிகளை மீறுகிறவர்களை ஆட்டோ (அ) டாடா சுமோவில் அள்ளி வந்து நொங்கு எடுக்கிற சூழலில்...

இணைத்தலைமை நாடுகள் (நார்வே, ஜப்பான், அமெரிக்கா...) என்கிற வல்லாதிக்க நாடுகள் முன்னிலையில் ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்ததை தன்னிச்சையாக இலங்கை அரசு வெளியேறிய பொழுது... நடவடிக்கை எடுக்க முடியாமல போனதேன்?

தாங்கள் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்ததை இலங்கை அரசு மீறிய பொழுதும்... நார்வேயின் எரிக் சோல்கைம் இலங்கைக்கு வருகை தந்துக்கொண்டு இருப்பதன் பின்னணி என்ன?

மனித சமூகத்தை தங்களுடைய ஏகாதிபத்திய நலன்களுக்காக ஆப்பிரிக்காவிலும், வியட்நாமிலும், பாலஸ்தீனத்திலும், ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்லும், இன்னும் உலகின் பல பகுதிகளில் கொன்றழிக்கும் ராஜபக்சேவின் அண்ணன்களான ஆன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் இன்றைய புலம் பெயர் தமிழர்கள் ஐயோகோ! எங்களை கொல்கிறார்கள் என்று கதறியழுவதால்...! என்ன நிகழும்?

வரலாறு சார்ந்து... சில அடிப்படை கூறுகளை அலசி பார்ப்போம்...

கணக்கியல் நிகழ்தகவின் படி எந்தவொரு அதிகாரமும் எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் மாறி, மாறி சந்தித்தாக வேண்டும்.
எழுச்சி என்கிற நிகழ்வின் சாத்திய கூறை அதிகரிக்க என்ன செய்யலாம்... தொடர்ந்து வளங்களை அதிகரிப்பது மூலம் எழுச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

அதிகாரத்தை நிலை நிறுத்தி எழுச்சி என்கிற நிகழ்வை சாத்தியமாக்க என்ன மாதிரியான வளங்கள் தேவை?
1. மனித வளம்.
2. இயற்கை வளம்.

அலெக்சாண்டர், நெப்போலியன், சீசர், ராஜராஜ சோழன் உள்ளடங்கி... ஐரோப்பிய காலணிகள், ஜப்பான்,ரஸ்யா, சீனா முதலாக இன்றைய அமெரிக்க வல்லாதிக்கம் வரைக்கும்... இந்த மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் தக்க வைத்துக்கொள்ளவே மற்ற நிலப்பரப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர்.

முன்பு மன்னர்/அரசர் என்கிற அதிகாரம் பின்பு சிதைந்து... அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம், முதலாளித்துவ கும்பல் என்று வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பார்ப்பன, பனியா அதிகார கும்பலாக இருக்கிறது.

இந்த நவீன அரசியல் அதிகார முதலாளித்துவ கும்பலில் உள்ளிருப்பவர் வெளியேறலாம்... புதிதாக வேறு தனி நபரோ, குழுவோ இணைந்துக்கொள்ளலாம்... ஆனால் இந்த கும்பலிடம் அதிகாரம் என்பது இருந்துக்கொண்டேயிருக்கிறது

இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிப்பதற்கு நில/மண் ஆக்கிரமிப்பு என்பது போர்களின் மூலமே நடத்தப்பட்டன். அது மன்னர்களின் படையெடுப்பாக இருந்தாலும், ஐரோப்பிய காலணி படையெடுப்பாக இருந்தாலும்... இலக்கு இரண்டு தான் மனித வளத்தை சுரண்டுதல் (மனிதர்கள் அடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்டது)... இயற்கை வளத்தை கொள்ளையடித்தல் (தங்கம், பிற உலோகங்கள் கொள்ளையடிக்கப்பட்டது)
காலணி நாடுகளில் மனித உழைப்பே சுரண்டப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில்... நேரிடையாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது குறைய தொடங்கி மனித வளம், இயற்கை வளம் சுரண்டப்படுவது என்பது புதிய வடிவத்தில் உருமாற்றம் பெறுகிறது.

1. ஒப்பந்தங்கள்
2. அறிவுசார் உரிமைகள்
3. உலக மயமாக்கல்

இந்த புதிய வடிவத்தில் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கு பதிலாக ஆங்காங்கே தனக்கு சாதகமான குட்டி/ஏவல் அதிகார அமைப்பை உருவாக்குவது... அந்த குட்டி/ஏவல் அதிகாரத்தை விடுதலையடைந்த நிலையில் செயல்படுவதாக கூறிக்கொண்டே மேலிருந்து ஒப்பந்தங்கள், அறிவுசார் உரிமைகள், உலக மயமாக்கல் என்கிற தொலைநிலை கட்டுபாட்டு வழியாக மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் கொள்ளையடிக்கின்றன இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள்.

தாங்கள் உருவாக்கிய குட்டி/ஏவல் அதிகாரங்கள் தங்கள் கட்டுபாட்டை மீறும்பொழுது... அதை அழிக்கவும் இந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள் தயங்குவது கிடையாது..(ஈராக் மீதான தாக்குதல்)

தொடரும்...

செவ்வாய், 19 மே, 2009

ஈழம்-கண்ணீர் அஞ்சலியும்... சில கடமைகளும்...!

அன்பிற்கினிய பதிவர்களே, தோழமைகளே!

வன்னி பெருநிலத்தில் வல்லாதிக்க நாடுகளின் வழிகாட்டுதலோடு சிங்கள பேரினவாதத்தால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன் தாக்குதலானது... ஒரு முடிவை எட்டியிருக்கிறது.

இறுதிகட்ட போர் என்ற பெயரில் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்திருக்கும் 10,000 முதல் 15,0000 ஈழதமிழர்களின் தடயங்களை மறைக்கவும்... உலகத்தின் பார்வையில் இருந்து திசை மாற்றவும்... போரியல் குற்றங்களை மறைக்கவும்... சிங்கள பேரினவாதம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று வதந்திகளை பரப்பி வருகிறது.

தங்களுடைய அண்ணன், தம்பி, சிற்றப்பா, மாமா, தாய், தமக்கை,... என்று ஏதோவொரு உறவுகளை இழந்து கண்ணீரோடும், வாழ்வின் அடுத்த கணத்தை பற்றிய கேள்வி குறியோடும் திறந்த வெளி சிறைசாலை கூடாரங்களில் அடைப்பட்டு கிடக்கும்... வன்னி மக்களுக்கும்... அவர்களின் உறவுகளாக உலகெங்கும் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் துயரங்களில் பங்கெடுப்போம். அவர்களுக்கு ஆறுதல் என்பது நம்மிடையே இல்லை... ஆனால் அவர்களை காயப்படுத்தாமல் அமைதியாக இருப்போம்.

பேரினவாதத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே!
உங்களுடைய உறவுகளை இழந்து துயருற்று கிடக்கும் வேளையில்... எம்மால் உமக்கு என்ன செய்ய இயலும் என்று தெரியவில்லை...!
கடைசி கணம் வரை போராளிகளுடன் வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் இவர்கள் என்று மடிந்த மக்களை எண்ணி கண்ணீர் வடிப்பதை தவிர என்னிடம் ஏதுவுமில்லை...!

இவ்வளவு துயரங்களுக்கு ஊடாகவும் புலிகள் தங்களால் இயன்றவரை வன்னி மக்களின் மரணத்தை கடைசி சில நாட்கள் வரை பதிவு செய்திருந்தார்கள்... இப்பொழுது இந்த கடமை உங்கள் கைகளில் வந்திருக்கிறது....

வன்னி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி... இறுதி போர் என்று பெயரால் சிங்கள பேரினவாதம் கொன்று அழித்த மக்களின் தடயங்களை பதிவு செய்வதும்... அவர்களின் வாழ்க்கை, வரலாற்றை பதிவு செய்வதும் அவசியம்! காலத்தின் கட்டாயம்!.

துயரங்களுக்கு மத்தியிலும் துளி நம்பிக்கையுடன் துடித்தெழுவோம்!
நதியின் பயணத்திற்கு நாணல்களா தடை!
பேரினவாதம் இருக்கும் வரை உரிமைக்கான போராட்டம் தொடரும்!

கண்ணீருடன்...
அரசு

ஞாயிறு, 17 மே, 2009

தேர்தல் 2009 - ஈழம் கடைத்தேறாமல் போனதேன்...?

சில மாதங்களுக்கு முன்பு சிங்கை வலைப்பதிவர்களுடன் மின்னஞ்சல் உரையாடலில் சொன்னது " இந்த போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கபடுவார்கள், பிரபாகரன் மரணமடைந்தாலும்... ஈழத்திற்கான போராட்டம் தொடரும்..."

மிக தெளிவாக போரில் தோல்வி ஏற்படும் என்பதை விடுதலைபுலிகள் உணர்ந்தே இருந்தனர், இருக்கின்றனர்...

இந்த போரானது இலங்கை அரசு மட்டும் நடத்தினால் விடுதலைபுலிகளால் எதிர்க்க முடிந்திருக்கும். இலங்கை அரசுடன் துணையாக மற்ற நாடுகளையும் சேர்த்து விடுதலைபுலிகளால் எதிர்த்து வெற்றி பெற இயலாது.

இலங்கைக்கு உதவி செய்கிற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. ஏன் இந்தியா இணைந்துக்கொண்டது? இன்னொரு சமயத்தில் இந்தியாவும், இப்போது நடைபெறுகிற போரில் பங்களிப்பும் என்பதை விரிவாக பேச வேண்டும்.

இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்கிற இந்திய அரசாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இருந்த காரணத்தால்... காங்கிரஸ், பாமக, திமுக கட்சிகள் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதை பதிவும் செய்திருந்தேன் யாருக்கு ஓட்டு போடுவது...?.

ஆனால் உள்மனதில் காங்கிரஸ், பாமக முழுவதுமாக தோல்வியடைய வேண்டும் என்கிற ஆசையிருந்தது. அதே நேரம் திமுக ஒரளவு வெற்றி பெற வேண்டும், அது திமுகவின் தலைமையை தனது நிலையை மறுபரிசீலனை செய்ய உதவும் என்று நினைத்தேன். கலைஞர் மீதான பாசம் என்று எள்ளி நகையாடினாலும் பரவாயில்லை... என்று பல நண்பர்களிடம் திமுக தோற்பது நல்லதல்ல.. என்று விளக்கியிருந்தேன்.

ஈழம், ஈழத்தமிழர் இன்றைக்கு படுகிற துயரங்கள் தமிழக தேர்தலில் எதிரொலிக்கவில்லை ஏன்?

என் தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது மிக எளிமையாக சொன்னார்... ஊர் ஊராக வேலை செய்ய யாரிருக்கா? என்று கேள்வி கேட்டார்.

மிக, மிக முக்கியமான அடிப்படை இதுதான்... தமிழ் மொழி, தமிழினம் ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி போராடுகிற தொண்டர்களை உள்ளடங்கிய அமைப்பு இல்லை.

நானே தலைவன், நானே தொண்டன் என்று முழங்கி கொண்டிருக்கும் தலைவர்களே எஞ்சியிருக்கிறார்கள்.

இரண்டாவது... தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழி, தமிழினம் சார்ந்து இயங்க கூடிய அமைப்பாக மக்களால் நன்கு அறியப்பட்டவை திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் முன்னேற்ற கழகம் மட்டுமே.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான தொண்டர்களை உள்ளடக்கிய அமைப்பாக திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திமுக, மற்றும் புரட்சிகர இடது அமைப்புகள் (பூணூல் மார்கிஸ்ட்டுகள், மாலைநேர முச்சந்தி நடுத்தர மார்க்கிஸ்ட்டுகள் நீங்கலாக).

திக மற்றும் திமுக வில் ஈழப்போராட்டதிற்கு ஆதரவாக இயங்கிய காரணத்தால் தடா, பொடா வில் சிறைக்கு சென்றவர்கள் மிக அதிகம். அதுவும் திக வில் ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஒரு தடா கைதி இருப்பார். அந்தளவுக்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். இதில் ஒரு சிலர் நேரிடையாக ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் உண்டு.

இன்றைக்கும் மைசூர் சிறையில் 20க்கும் மேற்பட்டவர்கள் 'பொடா' சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள்.

தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை தொண்டர்களுக்கு மிக ஆழமாக ஊட்டி வளர்த்தெடுத்ததில் திக, திமுக வும் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது.

மாற்றாக அதிமுக என்கிற அமைப்பை எடுத்துக்கொண்டால்... தொண்டர் அமைப்பு என்பது பெரும்பாலும் அந்தந்த ஊர் கட்டபஞ்சாயத்து ரவுடிகள், சாராய வியாபாரிகள், பெரிய ஆள் பண்ண நினைக்கிறவர்கள் இப்படிப்பட்ட தொண்டர் அமைப்பை கொண்டது.

பாமகவின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் குண்டாந்தடி வன்னிய சாதி வெறியர்களை கொண்டது.

மதிமுக வின் தொண்டர் அமைப்பை எடுத்துக்கொண்டால் எல்லா ஊர்களிலும் திமுகவால் ஏதோ காரணத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களை உள்ளடக்கியது. மதிமுக வை பொறுத்தவரை தஞ்சை மாவட்டத்தில் என்னால் அடித்து சொல்ல முடியும் முழுக்க, முழுக்க கட்டபஞ்சாயத்து ரவுடிகள் தான் தொண்டர்கள்.

1991 -96 மற்றும் 2001-2006 காலக்கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய போராளிகளின் எண்ணிக்கை ஈரிலக்கத்தை தாண்டும். இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளங்களை ஒடுக்குவதில் மிக தீவிரமாக இயங்கியவர் ஜெயலலிதா...!

அதிமுக தொண்டர்கள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழினம் அப்படின்னா கிலோ என்ன விலை? என்று கேட்கிற அளவில் தான் இருப்பார்கள்.

அதிமுக. பாமக, மதிமுக போன்ற அதிகார அரசியல் பொறுக்கிகளால் தொண்டர்களை ஒருங்கிணைத்து தமிழ் மொழி, தமிழினம் என்கிற அடையாளத்தை கொண்டு சொல்ல இயலாது. அதற்கான அடிப்படை அங்கேயில்லாததே...காரணம்!.

ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் கொண்டுச்செல்ல வேண்டுமானால்... அதை தமிழ் மொழி, தமிழின அடையாயத்தை ஆழமாக தாங்கி பிடிக்கிற தொண்டர் அமைப்பை கொண்ட இயக்கத்தால் மட்டுமே இயலும்.

திக, பெதிக, திமுக அமைப்புகள் மட்டுமே... அத்தகைய தொண்டர்களை உள்ளடக்கி இருக்கிறது.
திமுக வில் அதிகாரத்தில் குண்டர்களும், கட்டபஞ்சாயத்து ரவுடிகளும், பொறுக்கிகளும் இருக்கலாம்... ஆனால் இன்னும் தமிழ், தமிழினம் என்று உயிரைக்கொடுக்கிற தொண்டர்கள் திமுகவில் நிறைந்தேயிருக்கிறார்கள்.

தமிழ், தமிழினம் இவற்றுக்கு எதிரான அமைப்புகள் மக்களிடம் ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தால் இருக்கிற ஆதரவும் காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.

நன்றி!

செவ்வாய், 5 மே, 2009

அரசியல் - கைப்புள்ள...மொக்கசாமி... ஆமாஞ்சாமி...

நம் முன்னே மனித சமூகத்தின் பிரச்சினைகள் விரிந்து... காதடைத்து, கண் மயங்கி, மூச்சடைத்து, புலன்கள் அனைத்தும் ஒடுக்கி நம்மை வீழ்த்த வீரியம் கொண்டெழுகிறது. ஒன்றா, இரண்டா... ஒராயிரமா?! முடிவில்லா எண்ணிக்கையில் வந்துக்கொண்டேயிருக்கிறது.

மனிதன் சமூகமாக வாழ இயலுமா? வாழ்ந்துதான் பார்ப்போம்... என்று
கடந்து போனவனும் போராடினான்... கடந்துக்கொண்டிருப்பவனும் போராடிக்கொண்டிருக்கிறான். வருகிறவனும் போராடுவான்.

தான், தனது என்கிற வட்டத்தில் வாழ்கிற மனிதர்களால் எப்படி மனிதன் சமூகமாக வாழ்வதற்கான சிந்தனையை, செயற்பாடுகளை நோக்கி நகர இயலாதோ! அதே போல மனித சமூகத்தின் சமூக, அரசியல் சிக்கல்களை, பிரச்சினைகளை புரிந்துக்கொள்வதற்கும் சில அடிப்படைகளை பற்றிய அறிதலும், தேடலும் அவசியமானதாக இருக்கிறது.

சரியான புரிதலற்ற, அறியாமையை மண்டிக்கிடக்கிற... சமூகத்தில் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கிற அரசியற்கூத்துகளை நாம் அடையாளம் காணவும், நம் முன்னே அரசியற் மாற்றங்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றவைகளை வினா தொடுப்பதன் மூலம் அம்பலப்படுத்தவும்... தொடர்ந்து சமூக, அரசியல் தேடல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஒருவர் என்னிடம் அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள் "சேரியை முன்னேற்றி காட்டுகிறேன்!" என்று சொல்கிறார்.

சேரி என்பது என்ன?
சேரி ஏன் தோன்றிது?
சேரியின் வடிவம் எப்படியிருக்கும்?
சேரி எங்கேயெல்லாம் இருக்கும்?

அடிப்படையாக சமூக வாழ்வில் எங்கெல்லாம் உழைப்பு சுரண்டலும், முதலாளித்துவமும் இருக்கிறதோ... அங்கேயெல்லாம் சேரி இருக்கும். அதன் வடிவங்கள் வெவ்வேறாக...!

5-10 ஆண்டுகளில் 200-300 கோடி என்று உழைப்பு சுரண்டல் மூலம் முதலாளி ஆகிற ஒருவரால்...
இன்னும் 10-20 ஆண்டுகளில் 1000-2000 கோடி வருவாய் ஈட்டுவேன் என்று சவால் விடுகிற... முதலாளித்துவ சிந்தனை உள்ள ஒருவரால்...
எப்படி சேரியை முன்னேற்ற முடியும்?. சேரியின் வடிவத்தை மாற்ற போகிறேன் என்று சொல்வார் எனில் அது உண்மையாக இருக்கும்!.

இங்கே சேரியை பற்றிய புரிதலும்... சேரியற்ற சமூகத்தை கட்டமைப்பதற்கான சமூக, அரசியல் அறிவும் நமக்கு அவசியமானதாக இருக்கிறது.

அரசியலில் இவர் நல்லவர், படித்தவர் என்கிற அடையாளங்களுடன் கைப்புள்ளைகள் வளர்க்கப்பட்டு... மொக்கசாமிகளாக நம்முன் வலம் வர வைக்கப்படுகிறார்கள். இவர்கள் "ஆமாஞ்சாமிகளாக" அதிகாரங்களால் பயன்படுத்தபடுகிறார்கள்.
Related Posts with Thumbnails