கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் வருவாய்துறை அலுவலகத்துக்கு (IRAS-Inland Revenue Authority of Singapore) போய் நம்ம பழைய முதலாளிக்கும் நமக்குமான பஞ்சாயத்தை முடித்துவிட்டு வரலாம் என்று போனேன். வரிசையில் நின்று வரிசைஎண் எடுக்க சென்றேன். அங்கிருந்த அலுவலக பெண்மணியிடம் நான் ஆங்கிலத்தில் என்னுடைய கோரிக்கையை விளக்கிக்கொண்டிருந்தேன், அவரும் வரிசைஎண் கணிணியிலிருந்து எடுத்துக்கொடுத்தார். இவ்வளவு நடந்துக்கொண்டிருக்கும்போது தூரமாக ஒரு இளைஞர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார், நான் அங்கிருக்கும் காத்திருக்கும் நபர்களுக்கான இருக்கைகளில் அமரவும், என்னருகில் வந்து அமர்ந்தார்... வலுவான உடல், களைப்பும், சோகமும் மண்டிய முகம், தாடி என்று மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.
மிக மெதுவாக அண்ணே! நீங்க தமிழா? என்றார்
ஆமாம்! என்ன சொல்லுங்க என்றேன்.
நாளைக்கு நான் ஊருக்கு போறேன் என்றார்.
எந்த ஊரு என்றேன்.. திருபத்தூருண்ணே என்றார்.
பேரு என்ன என்றேன்... குமார் என்றார்.
ஆமா! நாளைக்கு ஊருக்கு போறேன்னு சொல்லுருறீங்க! இங்க என்ன பண்ணிக்கிட்டுருங்கிங்க! போய் ஏதாவது வீட்டுக்கு சமான் வாங்க வேண்டியதுதானே அப்படியின்னு சொன்னேன்.
அவருக்கு கண்ணெல்லாம் கலங்கி தண்ணி வந்துடுமுங்கிற நிலை...
சரி! ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க என்ன பிரச்சினை அப்படியின்னு கேட்டேன்.
இரண்டு மாசமா சம்பளம் தரவில்லை... போகும்போது தருகிறேன் என்று முதலாளி சென்னான், இப்போ வருமான வரி கட்டியாச்சு அப்படின்னு சொல்லி மீதம் s$200 தான் கொடுத்தான். அதான் ஓன்னுமே புரியவில்லை.. என்ன செய்யுறதுன்னு! புள்ளைங்க, வீட்டுகாரி எல்லாம் எதிர்பார்பாங்க என்றார்.
என்ன பிரச்சினை ஏன் சம்பளம் தரவில்லை என்றேன்
வரி கட்டணுமுன்னு காச பிடித்து விட்டான் முதலாளி என்றார்.
எனக்கு ஒன்னுமே புரியவில்லை! உங்களுக்கு எப்படியா வரி வரும்!
ஏதாவது டாக்மெண்ட் இருக்கா என்று கேட்டேன்.பேசிக்கொண்டிருக்கும் போது மணி 10.30
அவர் அவருடைய சம்பள படிவத்தை தந்தார். வாங்கி பார்த்தால் இந்தாண்டுக்கான வரி என்று S$600+ வரி பிடித்தம் செய்திருந்தார்கள்.
அவர் தினக்கூலியாக கட்டிட கட்டுமான பணியில் வேலைபார்த்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஊதியம் S$18 அவர் மாதம் முழுவதும் வேலை பார்த்தால் S$540 கிடைக்கும்.
இந்த வேலைக்கு இந்தியாவில் ரூபாய் 1,50,000 ஏஜெண்ட்க்கு கட்டி வந்திருக்கிறார். எனக்கு வந்த கோபத்திற்க்கு அங்கே அவரை திட்ட ஆரம்பித்துவிட்டேன். அவர் அடுத்த அதிர்ச்சியை எனக்கு தந்தார், அவர் skill test தேர்ச்சி பெற்றவர் அதனாலேயே S$18 சம்பளம் மற்றவர்களுக்கு வெறும் S$14 மட்டுமே என்றார்.
சரி! நம்ம அப்புறம் அவரை பேசிக்கொள்ளலாம், இந்த வரி பிரச்சினையை தீர்ப்போம் என்று, அலுவகத்தில் பேசினீர்களா என்றேன், காலையிலே வந்துட்டேன்... அவங்க என்ன சொல்லுறாங்கன்னு எனக்கு புரியவில்லை என்றார்.
நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க.. என்று கேட்டார்.
சரி! உங்க முதலாளி என்ன சொல்லுறார் அப்படின்னு கேட்டேன். வரி கட்டிதான் தீரணும் அதனால ஒன்னும் பண்ண முடியாது அப்படின்னு சொல்லிட்டான் அப்படின்னார்.
அவரிடம் அவர் முதலாளி தொலைபேசி எண் வாங்கி என்ன சிக்கல் ஏன் வரி கட்டணும் என்று கேட்டால்? நீ யார் அதை கேட்க? என்று கோவப்பட, பிறகு வேறு வழியில்லாமல் நான், நீங்கள் சரியான பதில் தரவில்லை என்றால் நான் அவரை MOM(Ministry of ManPower) அழைத்து செல்வேன் என்று கூறினேன்.
பிறகு அவர் சில வரி விதிப்பு முறைகளை சொன்னார். கடைசியாக IRAS அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கி வந்தால் பணம் தருவதாக ஓத்துக்கொண்டார்.
சிங்கப்பூர் விதிமுறைகள் இதுதான்
1. 90 நாட்களுக்கு அதிகமாகவும் 180 நாட்களுக்கு குறைவாகவும் ஓர் வரி விதிப்பு ஆண்டில் நீங்கள் வேலைபார்த்திருந்தால் 15% வரி கட்டவேண்டும்.
2. குறிப்பிட்ட தொகை வரை வருமான வரி விலக்கு இருக்கிறது.
3. பிறகு இன்ன பிற குட்டி சட்டதிட்டங்கள்
அவருடைய இந்தாண்டிற்க்கான வேலை 180 நாட்களுக்கு குறைவாக இருந்ததால் முதலாளி 15% சம்பளத்தை வரிக்கென்று பிடித்துவிட்டார்.
ஆனால் அந்த இளைஞருடைய ஆண்டு மொத்த வருமானம் 12*540 = 6480 + ஓவர் டைம் நிச்சயமாக வருமான வரி விலக்கு உயரெல்லையை தொடவே வாய்பில்லை.
ஆனால் இவருடைய வருமானம் வரி விலக்கு அளிக்கபட்ட உயரெல்லைக்குள்ளேயே இருக்கு என்பதை IRAS மட்டுமே சான்று தர முடியும்.
அந்த முதலாளி திட்டமிட்டு அவருடைய வருமான வரி படிவத்தை தாமதமாகவே பதிவு செய்து இருக்கிறார். அவருடைய கணக்கு இந்த இளைஞர் ஊருக்கு போனபின்பு அந்ததொகை அவர் எடுத்துக்கொள்வதே.
சரி! சூழ்நிலையை விளங்கிக்கொண்டு அலுவலகத்தில் அந்த இளைஞருடைய நிலையை விளக்கி ஒன்று நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை என்று சான்று தாருங்கள் அல்லது இளைஞர் இங்கு தங்கி அந்த மீத தொகையை வாங்கி செல்லும் வரை தற்காலிக (ஸ்பெசல்) விசா தாருங்கள் என்று கேட்டேன்.
சீன பெண்மணி நிலைமை புரிந்துக்கொண்டு ஒரு மணி நேரத்தில் கடிதம் தருவதாக சொன்னார். மணி இப்போது 11.00
ஆனால் பாஸ்போர்ட் வேண்டுமென்றார். ஆனால் அந்த இளைஞரின் பாஸ்போர்ட் அந்த கம்பெனி போர்மென் எனப்படும் வேன் ஓட்டுநரிடமிருந்தது. அவரும் அந்த இளைஞரின் ஊர்தான். அவரிடம் பேசினால் நான் கம்பெனிக்கு தெரியாமல் பாஸ்போர்ட் தர முடியாது என்று அடம்பிடித்தார். கடைசியில் அவரை தனியாக அழைத்துச்சென்று கேட்டதில் கடைசிநாள் இன்று, குமார் மிகவும் வருத்ததில் இருப்பதால் பாஸ்போர்ட் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்றார்.
நான் வேண்டுமானால் என்னுடைய பாஸ்போர்ட், ஐசி தருகிறேன் வைத்துக்கொள், குமாருக்கிட்ட பாஸ்போர்ட் கொடு, அந்த கடிதத்தை வாங்கி வரட்டுமென்றேன்.
அப்படி வேண்டாமென்று நானே பாஸ்போர்ட் வாங்கி சென்று கடிதத்தை வாங்கி அனுப்பி வைத்தேன். அன்று சனிக்கிழமை கட்டுமான பணி அலுவலகம் எல்லாம் 1 மணியுடன் மூடிவிடுவார்கள். குமாரை உடனே சென்று அவருடைய முதலாளியிடம் கடிதத்தை கொடுத்து பணத்தை வாங்க சொல்லிவிட்டு பார்த்தால் என்னுடைய பஞ்சாயத்து வரிசைஎண் தவறிவிட்டது. அலுவலகம் பணி முடியும் நேரம். சரி! அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.
எனக்குள் எழுகிற கேள்வி அந்த இளைஞர் கட்டிவந்த தொகையை எடுக்க ஓராண்டுகள், உழைக்க வேண்டும் சேறு, தண்ணி இல்லாமல். அதற்கு அடுத்த ஆண்டு சம்பாதிக்கும் தொகையே அவருடைய சேமிப்பு, ஆனால் அந்த தொகையை அவர் சம்பாதிக்க கொடுக்கும் விலை மிக அதிகம், மிகவும் தரமற்ற உணவு உட்க்கொள்ளுதல், மிக மோசமான கண்டெய்னர் குடியிருப்பு, மிக கடினமான 16 மணி நேர வேலை என வேதனையை அனுபவிக்கிறார்.
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னவை, ஊருல விவசாயம் நல்ல இருந்த இங்கன வந்து ஏன் இப்படி துன்படுறோம் என்று!
அப்படியே வீட்டுக்கு வந்து அறை தோழர்களிடம் சொல்லி வருத்தபட்டால், இங்கபாரு தேவையில்லாததுக்கு எல்லாம் தலையைக்கொடுத்து நீ ஏன் துன்பபடுறே. வார இறுதி பார்ட்டி இருக்கு வர்றீயா என்றார்கள். போங்கப்பா! நான் வரவில்லை என்று அயர்ச்சியாய் அமர்ந்தேன்.
அதற்க்குள் இன்னொருவர் இது அவனவன் தலையெழுத்து நீ ஏன் வருத்தபடுறே! என்றார். இப்படி ஏதாவது சொல்லி தங்களை நத்தை ஓட்டுக்குள் சுருக்கிக்கொள்ளும் மனிதர்கள் என்றெண்ணினேன்.
அன்று தேயிலை தோட்ட தொழிலாளியாய் கப்பல் ஏறிய தமிழன், இன்று வேறு வடிவத்தில் அரேபிய பாலைவனத்திற்க்கும், மற்ற நாடுகளுக்கும் விமானம் ஏறிக்கொண்டிருக்கிறான் இன்னும் மோசமான தொழிலாளியாய்! யார் இதற்கு காரணம்? இதற்க்கு என்ன தீர்வு? தமிழனின் வாழ்நிலங்கள் இரண்டு ஒன்று தமிழகம் மற்றொன்று இலங்கை.
இலங்கையில் சொந்த மண்ணிலேயே அகதிகளாய், உயிர் வாழ உத்திரவாதமின்றி தமிழர்கள்!
தமிழகத்திலோ தமிழிலில் வழிபாடு நடத்த நீதிமன்றபடிகட்டுகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான் தமிழன்!
தமிழ் கல்விக்கு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தன் சொந்த மண்ணிலேயே நடத்த வேண்டியிருக்கிறது! வீசுகின்ற புயலில் சிக்காமல் தப்பி பிழைத்துவிட்டோம் என்றெண்ணி தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இருக்கிறது என்றெண்ணும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள். நீண்ட வரலாற்று பின்னணி, ஆழமான மொழி, கலாச்சார செழுமை, வளமான பூமி எல்லாம் இருந்தும் தமிழினம் ஏன் இப்படி?...............தொடரும்