புதன், 31 மார்ச், 2010

பதிவர்கள் குழுமம் - ஏன் சாத்தியமற்றது? என்ன பாதிப்புகளை உருவாக்கும்?

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

இடுகையை வாசித்து சில நண்பர்கள் உரையாடியில் வறுத்தெடுத்து விட்டார்கள்... மிக கடுமையாக இருப்பதாக குறை கூறினார்கள்.

நிகழ்வுகளின் வழியாக எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

வலைப்பூக்கள் பல்வேறு வகையில் இயங்கி கொண்டிருக்கின்றன.

ஒரு குழுமம்/சங்கம்/அமைப்பு என்று தொடங்கியவுடனே அதற்கு குறைந்தபட்ச அடிப்படை விதிமுறைகள் என்று ஒன்று உருவாக்கப்படும்.

முதலில் யாரெல்லாம் உறுப்பினர் என்பதிலேயே சிக்கல் தொடங்கி விடும்.

பாலியியல் கதை எழுதுகிற வலைப்பதிவருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
காமக்கதைகள் எழுதுகிற ஜ்யோவரம் சுந்தருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
சுகுணா திவாகர் மாதிரி அடிக்கடி கெட்ட வார்த்தை (வார்த்தை எப்படி கெட்டு போகும்?) பயன்படுத்துகிறவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
மத அடிப்படைவாத பதிவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?

இப்ப தகுதி அளவெடுப்பது யார்? அவருக்கென்ன தகுதி?

அடுத்து...
குழுமம்/சங்கம்/அமைப்பு விட்டு தனித்தியங்கும் பதிவரை... குழுமம்/சங்கம்/அமைப்பு சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஒடுக்குவார்கள்.

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவர் இந்துத்வ அரசியல் சார்பு உடையவர் என்றால்... அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு (முகவரி, தொலைபேசி எண்) என்ன பாதுகாப்பு?

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவரின் அரசியல் சார்ப்பும், அந்த அதிகாரத்திற்கு நெருக்கமாக ஒரு கும்பலும் உருவாகி விடும்பொழுது...

இங்கே தான் போன பதிவில் நான் எழுதியது...

இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

முந்தைய இரண்டு இடுகைகளுக்கு பிறகான வலை உரையாடியில் தொடர்புக்கொண்ட பதிவுலக நண்பர்கள் மற்றும் நண்பர் குழலி ஆகியோர்...

கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களின் (வலைப்பூக்களின்) பன்மை தன்மை சிதையும் (அ) அழியும் என்பதை மேலும் விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவது என்பதை விட படிமமாக விளக்க முயற்சிக்கிறேன்.

கட்டற்ற வெளி (இணையம்) -(கட்டற்றதாக பெரு நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளமையால், வெளியின் மீதான பெரு நிறுவனங்களின் தாக்கங்களை நீக்கி வைத்துக்கொள்வோம்)

கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள்(objects) - வலைப்பதிவர்கள்.

பொதுவான இயங்கியல்...
கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள் தனக்கென்ற தனித்த ஒழுங்கமைவும், இயங்கு தளமும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் ஒத்திசைதல் அல்லது தொடர்பாடல் வழியாக தமக்குள்ளாக ஒரு ஒழுங்கமைவையும், இயங்கு தளத்தையும் கொண்டிருக்கும்.

கட்டற்ற வெளிக்கான பொதுவான ஒழுங்கமைவு என்ற ஒன்று இருக்காது. அவ்வாறு பொதுவான ஒழுங்கமைவு உருவானால்... பொருளின்(object) தனித்த அடையாளம் சிதையும் அல்லது பொதுவான ஒழுங்கமைவோடு முரண்பட்டு அழிந்து போகும்.

எ.கா :

X, Y, Z என்று மூன்று பொருட்களை எடுத்துக்கொள்வோம்.

x,y,z ஆனது தனக்கென தனித்த ஒழுங்கமைவையும், இயங்குதளத்தையும் கொண்டவை.

x ஆனது y யுடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும்... x ஆனது z உடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும் வெவ்வேறானவை.

அவ்வறாக ஒவ்வொரு பொருளும் இருக்கும்...

x,y,z... ஆக எண்ணிலடங்கா பொருட்கள் இயங்கும் கட்டற்ற வெளியில் ஒரு பொதுவான ஒழுங்கமைவும், இயங்குதளமும் இருக்க இயலாது.

அவ்வாறான பொதுவான (global) ஒன்று உருவாகும் பொழுது... பொருட்களின் ஒழுங்கமைவு முரணால் பல பொருட்கள் சிதையும் அல்லது அழியும்.


இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

ஒரு கணினி நிரலாளன் பார்வையிலும்...
பொருட்களுக்கு (objects) இடையிலான dependency மிக, மிக குறைக்கப்பட வேண்டும். சாத்தியமெனில் zero வாக வைக்கப்பட வேண்டும்.

பொருட்கள்(objects) எப்பொழுதும் தனக்குரிய பண்புகளையும், இயக்கத்தையும் தன்னகத்தே கொண்ட தனித்தியங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே நீடித்த நிலைத்தன்மையும், நீட்சியடைதல் (அ) வளர்தல் சாத்தியம்.

இன்னும் பல்வேறு கோணங்களில் தனிமனித உரிமை மற்றும் விடுதலை(சுதந்திரம்) என்று விரித்து விளக்கிக்கொண்டே போக முடியும்.

அடுத்த பதிவுகளில் சங்கம் அல்லது அமைப்பு வேண்டும் என்று கருதுகிற நண்பர் பைத்தியகாரன் மற்றும் தோழர் மாதவராஜ் ஆகியோருக்கு வினாக்களுடன் வருகிறேன்...

நன்றி
அரசு

ஞாயிறு, 28 மார்ச், 2010

பதிவர், பதிவர்கள், குழு, குழுமம்... இன்னபிற...

வெள்ளிகிழமை Buzz ல்
Arasu Paari - - Public - Muted
பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதின் அரசியல் என்ன?Edit
Jamalan Jahir - வேறென்ன கும்பலாக மாறுவதுதான் அரசியலின் முதற்படி பாரி...))

ஜமாலன் ஒற்றை சொல்லில் பல விளக்கங்களை தந்தார்.

எது படைப்பு? யார் படைப்பாளி? எதற்காக கலை, இலக்கியம்? இப்படி எந்த விழிப்பும், வினவும் அற்ற நிலையில் உள்ள மக்கள் சமூகத்தில் இருந்து வருகிற பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதன் ஊடாக...

இப்போதைக்கு...
காசு இருக்கிறவன் அல்லது பதிப்பகத்தை/பதிப்பாளரை காக்காய் பிடிக்க தெரிந்த சிலர் எதையாவது எழுதி இது தான் 'எலக்கியம்' என்று.. விற்கலாம்.
நாமெல்லாம் பதிவர்கள் என்று இன்னொரு பதிவரை ஊக்கப்படுத்த வேண்டும் கும்பல் கூட்டி விற்கலாம்.

ஆனால் நாளை...

தனிமனித உளவியல் என்பது வேறு, கும்பலின் உளவியல் என்பது வேறு.

விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.

வலைப்பூக்களின் விடுதலை தன்மையானது புறக்கணிப்பட்டு, ஒரு கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும், அதன் அதிகாரமே தமிழ் வலைப்பூக்களின் இயங்கியலை தீர்மானிக்கும் காரணியாகி விடும்.

இந்திய(பார்ப்பனி,பனியா) தேசியத்தின் ஊடகங்கள் மக்களின் அரசியலை, மக்களின் கலை, இலக்கியத்தை மறுத்தும்,நசுக்கியும் வருகின்றபொழுது... அதற்கு மாபெரும் மாற்றாக உருவாகிக்கொண்டிருக்கும் வலைப்பூக்கள்... கும்பல் அதன் அதிகார மையம் என்பது வலைப்பூக்கள் என்கிற ஊடகத்தை நசுக்கி தேசியத்தின் இன்னொரு ஊதுகுழலாக மாற்றப்படலாம்.

இங்கே கடந்து போன சில நிகழ்வுகளை புரட்டுவதன் மூலம்... கும்பலின் உளவியல் என்பது எத்தகையதாக இருக்கும் என்பதை உணரலாம்.

தமிழ்மணத்தை/வினவை புறக்கணி என்பது தனிமனித பார்வையாக/கருத்தாக இல்லாமல் கும்பலின் பார்வையாக மாற்றப்படும்.

மேப்படியான், குழு, குழுமம், அமைப்பு, அரசியல்... பற்றி எழுத வேண்டும் என்கிற நினைப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது. சூழல் அமைந்தால் இன்னொரு நாளில்...


நன்றி
அரசு.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

.
.
சமூகத்தில் நிலவும் அடுக்குமுறை ஏற்றதாழ்வுக்கு பார்ப்பன சாதியில் பிறந்தவர்களை சுட்டிக்காட்டுவது போல பார்ப்பானியம் என்ற பெயரில் அழைப்பதை கண்டு, சிலர் வெம்பி மனம்குமறுகிறார்கள்.

முன்னோட்டமாக இந்த இரண்டு பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்...

பார்ப்பானியம் என்றால் என்ன?

பார்ப்பனீயம் For Dummies !!!!



பார்ப்பானியம் பார்ப்பனர் என்கிற சாதியுடன் இணைத்து நோக்கபடுவதன் பின்னணி!

பார்ப்பானியம் பெயர் காரணத்தை புரிந்துக்கொள்ள சில வரலாற்று தொடர்ச்சிகளை பார்க்க வேண்டியுள்ளது.

அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை முதலில் எதிர்த்தவர்கள் சித்தர்களே!

மக்கள் திரள் போராட்டமாக முதன் முதலில் நடத்தியவன் புத்தன்!

பெரியாருக்கு முன்பே மக்கள் பார்ப்பனர் என்போர் யார் என்பதை உணர்ந்திருந்திருதனர்.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்கிற பிரிவு வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை கண்டு வருத்தமடைந்த சமூக போராளிகள், சமூகத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்து உணர்ந்துக்கொண்டது.

நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், ஜமீன்கள், குறு நில மன்னர்கள், மன்னர்கள் பின்னர் ஏற்ப்பட்ட ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரங்களுக்கு நெருக்கமான நிலையில் ஒரு குறிப்பிட்ட கூட்டம் தொடர்ந்து இருப்பதையும், அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கு மற்றும் பிழைப்புக்கும் தேவையானதையெல்லாம் உயர்ந்து என்றும் மற்றவற்றை இழிந்தது என்றும் சமூகத்தில் கட்டமைத்திருப்பதை உணர்ந்தனர்.

எ.கா: பரத நாட்டியம், வீணை போன்றவை உயர்ந்தாகவும், பறை, முரசு, மேளம், கூத்து போன்றவை தாழ்ந்தாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதிகாரத்துக்கு நெருக்கமாக தங்களுடைய பிழைப்பை முன்னிறுத்தி சமூகத்தில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தின் அடையாளத்தை உற்று நோக்கியபொழுது அவர்கள் பூணூல் அணிந்த பார்ப்பனர் என்கிற அடையாளத்துடன் இருப்பதை, சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை போக்க வேண்டும் என்று போராடுகிற போராளிகள் உணர்ந்தனர்.

பார்ப்பனர்கள் எவ்வாறு அதிகாரத்தை ஒட்டி வாழ்கின்றனர், என்பதற்கு சில எ.கா:

1. இந்தியாவின் குடியரசு மாளிகையில் உள்ள தொழிலாளி முதல் உயர் பதவி வரையிலான ஆயிரத்துக்கு அதிகமான பதவிகளில் 1990- ல் 20லிருந்து 30 பேர் வரை மட்டுமே பார்ப்பனரல்லாதோராக இருந்தனர்.

2. தேர்தல் ஆணையத்தின் முக்கிய பதவிகளில் 90சதவிகிதம் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

3. உச்சநீதிமன்றத்தின் முக்கிய பதவிகளும் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

4. ரிசர்வ் வங்கியின் 95 சதவிகித முடிவெடுக்கும் பதவிகள் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறு ஐரோப்பியர்களின் நிறவெறி என்பது வெள்ளை நிறவெறி என்று அடையாளப்படுத்த படுகிறதோ! அதேபோல் இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் அடுக்குமுறை சமூக ஏற்றதாழ்வு பார்ப்பனர்களுடன் தொடர்படுத்தி பார்ப்பானியம் என்று அழைக்கபடுகிறது.

பெரியார் அவர்கள் நேரிடையாக பார்ப்பான் என்றழைத்தே இந்த ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக போராடினார்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சந்தனமுல்லை - சிவப்பு தோல், வெள்ளை மேலாதிக்கம், பார்ப்பானியம்

.
.
.
கையேடு அவர்களின் வலைப்பக்கத்தை மேய்ந்துக்கொண்டிருந்தபொழுது பகிர்வுகள் பகுதியிலிருந்து உனக்குப் பிடித்த சாக்லேட் கூட.... இடுகைக்கு வந்தேன். சந்தனமுல்லை அவர்களின் பதிவுகளை சில மாதங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடுகை 2007-ல் எழுதியிருக்கிறார்கள் அதனால் வாசிக்கவில்லை. இப்பொழுது வாசித்தபொழுது எழுந்த மனக்குமறல் அதிகம்.

உலகளவில் நிலவும் வெள்ளை மேலாதிக்கம்... கிழக்காசிய நாடுகளில் நிலவும் மஞ்சள் தோல் மேலாதிக்கம்... இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் சிவப்பு தோல் மேலாதிக்கம்... பற்றிய எந்த சமூக, அரசியல் காரணிகளையும் தொடாமல் வெறும் தன்னம்பிக்கை பயிற்சி என்கிற நிலையில் எவ்வாறு எழுத முடிகிறது.

குறிப்பாக இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள சிவப்பு தோல் உயர்ந்தது என்கிற பார்ப்பானிய சிந்தனையும்...

சிவப்பு தோல் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்கிற சமூக உளவியல் கருத்துருவாக்கமும் எவ்வளவு மோசமான சமூக, அரசியல் விளைவுகளை உருவாக்கி இருக்கின்றன.

என் துணைவிக்கு சிகிச்சையாக சென்றபொழுது மருத்துவர் சொன்ன ஒரு நிகழ்வால் அதிர்ந்து போனேன்...

"கருப்பாக இருந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று மிக அதிகமாக நாள்தோறும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தியதால், தண்ணீர் அளவு குறைந்துக்கொண்டே வந்து குழந்தை இறந்து விட்டது."

இந்த நிகழ்வு எதை நமக்கு படம் பிடித்துக்காட்டுகிறது. இதனுடைய சமூக, அரசியலை பேச வேண்டாமா!?

கருப்பு தாழ்வல்ல என்று நம்பிக்கை லேகியம் ஊட்ட முயலாதீர்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு போராட கற்றுக்கொடுங்கள்!
சிவப்பு என்பது உயர்வல்ல என்பதை கற்றுக்கொடுங்கள்!
நிறத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள பார்ப்பானியத்திற்கு எதிரான அறிவை ஊட்டுங்கள்!

அன்புடன்
அரசு

தொடர்புடைய இடுகை

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

Related Posts with Thumbnails