ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஜமாலனின் ஐந்தில் ஒன்று...

நச்சுனு நாலு கேள்விகள் என்று ஒரு சங்கிலி தொடரழைப்பு வலைப்பதிவுகளில் 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது, பலரிடம் சென்று ஜமாலனிடம் வந்த பந்தை என்னிடம் தட்டிவிட்டு விட்டு சென்றார்.

சில குறிப்புகளை எழுதி ஜமாலனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு, நான் என்னுடைய வாழ்க்கைதுணை நலன் ஏற்பு விழா துணைவியார் அப்புறம் எங்களுடைய மகவு இளவேனில் என்று காலம் பறந்தோடி விட்டது. திரும்பி பார்த்தால் இரண்டு ஆண்டுகள்.

ஜமாலனுக்கு அனுப்பிய குறிப்புகளை விரித்து ஒவ்வொரு வினாவுக்கும் தனி, தனி பதிவாக போட முயற்சிக்கிறேன். இந்த சங்கிலி தொடர் என்னிடம் அறுந்து போனதற்கு அதன் தொடர்ச்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்டபடி...

பழைய சங்கிலி... வாசிக்க...

சுகுணாவின் உடனடி கேள்விகளும் எனது தாமதமான பதில்களும். - ஜமாலன்
பதில்கள் + ?கள் - சுகுணா திவாகர்
பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும் - ஆடுமாடு
வளர்மதியின் கொலை வெறியும்... பலிபீடத்தில் தலையை வைக்கப்போகும் ஆடுமாடும் - பைத்தியக்காரன்
நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் ...வளர்மதி (வலைப்பூ இப்பொழுது அழைக்கப்பட்ட வாசிப்பாளர்களுக்கு மட்டும்)
நாலு கேள்விகள், நாலு பதில்கள் - கென்
கேள்விக்கென்ன பதில் - ஜ்யோவ்ராம் சுந்தர்
ராமின் கேள்விகளும் சுந்தருக்கான கேள்விகளும் - அய்யனார்

நான்(அகம்)
ஆழமான வாசிப்போ, புரிதலோ அற்ற... அரை,குறை ஆர்ப்பரிப்பும், அகங்காரமும் கொண்ட, எல்லாவற்றையும் ஐயப்படுகிற, எதையும் ஏற்க மறுக்கிற நான்.

வலைச்சூழல்(புறம்)

வினா - விடை என்றே உருப்போட்டே பழகிப்போன கல்விமுறையில் வந்ததால் என்னவோ! எல்லா வினாக்களுக்கும் விடைகளை மட்டுமே வேண்டி நிற்கிற இடத்தில்...
ஐயங்கள், ஊகங்கள், கற்பனைகள் வழியாக குறுக்குவிசாரணை செய்யவோ, வினாக்களுக்கான வினாக்களை (நன்றி : வளர்மதி) நோக்கி பயணப்பட ஏன் முயற்சிக்கவில்லை?

தகவல்கள் தரவுகளாக்கப்பட்டு, தரவுகளும், மேற்கோள்கள் மட்டுமே விடைகளாக பரிணாமிக்கிற சூழலில்...

தகவல்களை தின்று தகவல்களாக வாந்தி,பேதி எடுக்கும் தகவல்களின் கிணற்றில் வாழும் தவளைகளாக சமூகம் பரிணாமித்துக்கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு வினாவும் உள்இயங்கியலை(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) தூண்டுகிறது, அதில் பெறப்படும் பல பார்வைகளில் நான் முதன்மைப்படுத்த(priority) விழைகிற பார்வை... விடையாக...

5. சமீபத்தில் நீங்கள் படித்த நூல் பற்றி சொல்லமுடியுமா?

"புயலிலே ஒரு தோணி" - பா. சிங்காரம்.
இந்த தொடர் ஆட்டத்தில் வளர்மதி கேட்டு பைத்தியகாரன் பதிவில் சொன்ன பிறகு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.

அறிதல், தெரிதல்,தேர்தல், கற்றல், பயிற்சி(அ)பட்டறிதல், ஆழ்தல், அகல்தல், ஆய்தல்,விடுபடல்...

கரி பல நூறாண்டுகள் சுழற்சிக்கு உட்பட்டு வைரமாக மாறுவது போல... படைப்பாளி என்பவன் மேற்கண்ட சுழற்சிக்கு (எந்தவரிசையில் வேண்டுமானாலும்) பலமுறை உள்ளாகி ஒரு படைப்பை வெளிகொணர வேண்டும்.

http://abcxyz.blogspot.com என்று பதிந்தவுடன் நானும்,நானும் படைப்பாளி என்று வண்டியேறுகிற...
யாராவது செத்தா உடனே அவர் இன்னார் பெத்த புள்ள என்று காகிதங்களை அச்சடித்து பொஸ்தகம் விற்கிற பதிப்பகங்களும் இருக்கிற சூழலில்...

நூலாசிரியர் மிகச்சிறந்த படைப்பாளியாக இருக்கிறார். படைப்பை பற்றிய விமர்சனங்களும், புகழுரைகளும் நிறைய வந்துவிட்டன.

என்னுடைய பார்வை... படைப்பு மக்களின் இலக்கியமாக இருக்கிறதா?

ஆங்கிலேயர் மலாய் தீவுகளை கைப்பற்றிய காலம் முதலே தமிழகம், வட இலங்கை பகுதிகளிலிருந்து தோட்ட தொழிலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் கப்பலில் அழைத்து வரப்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர்.

ஆசிரியர் ஒத்த வரி கூட அந்த தொழிலாளர்களை பற்றி தன்னுடைய படைப்பில் குறிப்பிடவில்லை.

ஆண்டைகளின்(செட்டியார்கள், பிள்ளைகள்) வாழ்க்கை, குடி, கூத்து, கும்மாளம், போராட்டம் எல்லாவற்றையும் வர்ணணை செய்ய முடிந்த படைப்பாளியால்...
அடிமைகளின் (தொழிலாளிகளின்) மூச்சுக்காற்றை கூட பதிவு செய்ய முடியாமல் போனதேன்?


பிரமிடுகளை தோண்டி...
அரசர்கள் அருங்காட்சியகத்தில்...
புதையுண்ட மக்களோ...
புழுதியாய்!

1 comments:

ஜமாலன் சொன்னது…

நண்பருக்கு.. இந்த நாவலை இன்னும் முடிகக்வில்லை. ஒரு 100 பக்கத்திற்குள் படித்திருக்கிறேன். முடித்த பிறகு எனது கருத்தை சொல்கிறேன்.

உங்கள் பார்வையில் உள்ள பிரச்சனை.. ஒரு படைப்பாளி திட்டமிட்டதாக படைப்பை உருவாக்க முடியாது. அவரது அனுபவங்கள் தேர்ந்தெடுப்புகள் அவர் சொல்ல விழைவது என்பதாகவே படைப்பின் தளம் உருவாக்கப்படுகிறது. ஆனால் படைப்பு மொழி என்பது அவரது விழைச்சையும் தாணடியதாக சமூகத்தை பதியவைத்துவிடுகிறது. இதைதான் படைப்பின் ஆழ்தளம் என்கிறோம். படைப்பு என்பத பலவாய் கொண்டது. பல குரல்களைப் பேசும். அந்த பலகுரல்களில் ஆதிக்கத்தின் குரல் என்பது ஓங்கி ஒலிப்பதாக இருக்கும். அதனை படைப்பாளி எந்த அளவிற்கு பிரக்ஞைபுர்வமாக உணர்ந்து எழுதுகிறான் என்பது முக்கியம்.

அதனால் எல்லா படைப்புகளும் அடிமைகளையும் தொழிலாளிகளைப் பற்றியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எழுதவும் முடியாது. அது ஒரகாலத்தில் சோவியத் மற்றும் சீனாவில் உருவான சோஷலிஸ யதார்த்தவாதம் போன்று, ஒற்றைத்தன்மைக் கொண்ட படைப்பியாக்கமாக மாறிவிடும். அப்படி மாறுவது என்பது இலக்கியத்தை ஒற்றைப் பரிமாணமாகச் சுருக்கிவிடும். இலக்கிய ரசனை என்பதை உன்னதமாகவும் இலக்கியக் கோட்பாடாகவும் வைப்பது எப்படி இலக்கியத்தை மேட்டுக்குடித்தன்மை வாய்ந்ததாக மாற்றுகிறதோ அப்படித்தான், இலக்கியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி மட்டுடிமே பேசவேண்டும் என்பதும். இலக்கியத்தில் காட்டப்படும் வாழ்க்கை ஆதிக்க கருத்தியலை மறு உருவாக்ககம் செய்கிறதா? எதிர்ப்பை முன்வைக்கிறதா? என்பதே முக்கியம். அவ்வகையில் இந்நாவல் தொழிலாளிகள் அடிமைகளாக்கப்பட்டதின் வழியாக, ஆதிக்கம் செய்பவர்களின் வாழ்வு எப்படி உருவாகுகிறது? என்பதை சொல்வதாகக் கொள்ளலாம்.

இத்தகைய இலக்கியப் படைப்புகளை குறுக்கிப் பார்க்க முடியாது. சங்க இலக்கியங்களை எடுத்துக் கொள்வோம் அல்லது திருக்குறளை இவை எல்லாமே ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசவில்லை என்பதால் அவற்றை ஒதுக்கி தள்ளிவிட முடியுமா? ஏன் பேசவில்லை என்பதும் ஒரு அரசியல் தான். பேசும் விஷயங்கள் வழியாக நாம் புரிந்து கொள்ளும் சமூகம் என்பதாக இதனை வாசிப்பது அவசியம்.

விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

தொடர்ந்து எழுதுங்கள்....

நன்றி
அன்புடன்
ஜமாலன்.

Related Posts with Thumbnails